PUBLISHED ON : ஜன 05, 2025

'இன்டர்மிட்டென்ட் பாஸ்டிங்' எனப்படும் இடைக்கால விரத முறை என்பது சமீப நாட்களில் அதிகம் பேசப்படுகிறது. இந்த முறை நம் நாட்டுக்கு ஒன்றும் புதியது இல்லை. பாட்டி, தாத்தாவின் உணவுப் பழக்கத்தில் இயல்பாக இருந்த ஒன்றுதான்.
ஒரு நாளில் குறிப்பிட்ட நேரத்தில் உணவு சாப்பிட்டு, மற்ற நேரங்களில் சாப்பிடாமல் தண்ணீர் மட்டும் குடித்து விரதம் இருப்பது இடைக்கால விரத முறை.
சாப்பிடுவது, விரதம் இருப்பது, இரண்டையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வது. இதில் காலையிலும், இரவிலும் சாப்பிடாமல் இருந்து, மதியமும், மாலையிலும் சாப்பிடுவது உள்ளிட்ட பல்வேறு முறைகள். இடைக்கால விரத முறை, உடல் நலம், ஆரோக்கியத்தில் பெரியதொரு தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
இது, அனைவருக்கும் பொருந்தக்கூடிய அணுகுமுறை அல்ல. ஆனால், இது பலருக்கு பலன் தந்துள்ளது.
விரதம் இருக்கும் குறிப்பிட்ட நேரத்தில் எதுவும் சாப்பிடாமல், தண்ணீர் மட்டும் குடித்து, சாப்பிடும் நேரங்களில் வழக்கமான உணவை சாப்பிடலாம்.
நம் முன்னோர்களுக்கு பல நாட்கள் உணவு கிடைக்கவில்லை, அதனால், அவர்களின் உடல் விரதத்திற்கு பழகி விட்டது.
இதனால், உடல் எடை குறையும் என்று சொல்வது சரிதான். ஆனால், அதைக் காட்டிலும் வேறு பல நன்மைகள் இருக்கின்றன.
குறிப்பாக, சிதைந்த செல்களை சீரமைத்து, புதிய செல்கள் உருவாகும். சிதைந்த செல்கள், ரிப்பேர் ஆகாமல் அப்படியே தங்குவதுதான் கேன்சர், அல்சைமர் போன்ற பல வியாதிகளுக்கு காரணம்.
செல்களுக்கு அதிக வேலை தராமல் விரதம் இருந்து ஓய்வு தரும் போது, அது தன்னைத் தானே புதுப்பித்துக் கொள்ளும்; நீண்ட ஆயுளுடன் நோய் இல்லாமல் வாழ வழி செய்யும். உடலில் உள்ள செல்களுக்கு மட்டுமல்ல; மூளை செல்களுக்கும் இது பொருந்தும்.
இடைக்கால விரத முறைகள்
பல வகைகள் இருந்தாலும், சுலபமாக 16 மணி நேரம் விரதம், எட்டு மணி நேரத்தில் சாப்பிடும் 16:8 முறை பொதுவானது.
அடுத்தது, 5:2 முறை. இதில், ஐந்து நாட்களுக்கு வழக்கம் போல சாப்பிட்டு, இரண்டு நாட்களுக்கு தண்ணீர், பால், சர்க்கரை கலக்காத காபி போன்ற கலோரி இல்லாத உணவுகளை சாப்பிடுவதால், 500 - 600 கலோரி குறையும்.
இது தவிர, ஒரு நாள் சாப்பிடுவது, அடுத்த நாள் விரதம் இருப்பது. நம் வசதி, வாழ்க்கை முறைக்கு ஏற்ப ஏதாவது ஒன்றை வாழ்க்கை முழுதும் பின்பற்றலாம்.
இடைக்கால விரத நாட்களில் என்ன சாப்பிடலாம்?
காய்கறிகள், பழங்கள், குறைந்த கலோரி கொண்ட புரதங்கள், நல்ல கொழுப்பு உணவுகள் சாப்பிடுவதால், விரத நேரத்தில் சுறுசுறுப்பாக இருக்க உதவும்.
சர்க்கரை, பதப்படுத்தப்பட்ட, சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் உணவுகளை தவிர்க்க வேண்டும். அவை சோர்வை ஏற்படுத்துவதோடு, விரதத்தின் முழுப்பலனும் கிடைக்காமல் செய்யும்.
பலன்கள்
உடல் எடை குறைவது, செரிமான மேம்பாடு, நல்ல பாக்டீரியா அதிகரிப்பு, ரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைப்பது.
அழற்சி: நாள்பட்ட வீக்கத்தை குறைப்பது, பல்வேறு நோய்களின் அபாயத்தை தடுப்பது உட்பட இடைக்கால விரதத்தால் பல நன்மைகள் இருப்பதை பல்வேறு ஆய்வுகள் உறுதி செய்கின்றன.
கர்ப்பிணி, பாலுாட்டும் பெண்கள், குழந்தைகள், இளம் வயதினர், சர்க்கரை கோளாறு உட்பட நாட்பட்ட இணை நோய்கள் இருப்பவர்கள், ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள் இடைக்கால விரத முறையை கடைப்பிடிக்கக் கூடாது.
இடைக்கால விரத முறையின் துவக்கத்தில் பசி, எரிச்சல், சோர்வு, மயக்கம், அதிகமாகச் சாப்பிடுவது, துாக்கமின்மை, இடையூறுகள் உட்பட பல பிரச்னைகள் ஏற்படலாம். இடைக்கால விரதத்தை துவக்குவதற்கு முன், அவசியம் டாக்டரிடம் ஆலோசனை பெற வேண்டும்.
காரணம், வாழ்க்கை முறைக்கு ஏற்றதாக இருந்தால், இது ஒரு 'கேம் சேஞ்சராக' மாறலாம்.
டாக்டர் அஷ்வின் கருப்பன்,
தலைவர், உள் மருத்துவப் பிரிவு,
கிளினிகில்ஸ் மருத்துவமனை,
சென்னை
79967 89196
info.chn@gleneagleshospitals.co.in