PUBLISHED ON : மார் 20, 2022

துாக்கத்தின் மொத்த நேரத்தை விட, ஆழ்ந்த தொடர் துாக்கம் தான் மிகவும் அவசியம். தினமும் 7 - 9 மணி நேரம் துாங்குபவர்களுக்கு நோயின் தாக்கம் அதிகம் இல்லை என்பது ஆராய்ச்சியின் முடிவு. நிம்மதியாக துாங்குவதற்கு, மதியம் 30 - 40 நிமிடங்கள் துாக்கம் போதும்.
மாலையில் உடற்பயிற்சி செய்தால், இரவில் நல்ல துாக்கத்தை கொடுக்கும். சிறுநீர் கோளாறுகளுக்கான மாத்திரையை டாக்டரின் ஆலோசனைப்படி மாலையில் சாப்பிடலாம். காபி, மது, சிகரெட் போன்றவற்றை இரவு 8:00 மணிக்கு மேல் தவிர்ப்பது நல்லது. படுப்பதற்கு முன் வெந்நீரில் குளித்தல், வெதுவெதுப்பான பாலில் இரண்டு ஸ்பூன் தேனுடன், ஒரு ஸ்பூன் கசகசா பொடியை கலந்து சாப்பிடலாம். தினமும் குறிப்பிட்ட நேரத்தில் படுக்கைக்கு செல்ல வேண்டும்.
படுக்கை அறை அமைதியான சூழ்நிலையில், சற்று மங்கிய வெளிச்சத்தில் இருப்பது, படுக்கும் இடத்தை துாங்குவதற்கு மட்டும் பயன்படுத்துவது, 'டிவி' பார்ப்பது, ரேடியோ கேட்பது, புத்தகம் படிப்பதை படுக்கை அறையில் தவிர்ப்பது நல்லது.
படுத்த உடனே, 30 - 45 நிமிடங்களுக்குள் துாக்கம் வரவில்லை என்றால், வெளியே சென்று சற்று நேரம் நடப்பது, படிப்பது, ரேடியோ கேட்பது. துாக்கம் வர ஆரம்பித்த உடனேயே, படுக்கைக்கு சென்று விட வேண்டும்.
மன உளைச்சல்களும், கவலைகளும் துாக்கத்தின் எதிரிகள். அதை தவிர்க்க, அரை மணி நேரம் தியானம் செய்யலாம். 70 வயதுக்கு மேல், மன, உடல் பிரச்னைகளுக்கு டாக்டரின் ஆலோசனைப்படி மாத்திரை, துாக்க மாத்திரை எடுத்துக் கொள்ளலாம்.
டாக்டர் வி.எஸ்.நடராஜன்,
மூத்த முதியோர் நல மருத்துவர், சென்னை.
044 - 2641 2030.
