PUBLISHED ON : மார் 20, 2022

'கேர் கிவ்விங்' என்று சொல்லப்படும், பிறரை அக்கறையாக, அன்பாக கவனித்துக் கொள்வது பெண்களுக்கு இயல்பாகவே அமைந்த குணம். உடல்நிலை சரியில்லாத கணவனை, மனைவி கவனிப்பதும், அதே நிலை மனைவிக்கு வந்தால், கணவன் பார்த்துக் கொள்வதும் நடக்கிற விஷயங்கள் தான். ஆனால், நம் சமூகத்தில், பெண்களின் மேல் பிறரை கவனிக்கும் பொறுப்பை கூடுதலாகவே சுமத்தி உள்ளோம்.
பெண் என்றால், வீட்டுத் தேவைகளை கவனித்துக் கொள்ள வேண்டும். ஆனால், தன் தேவைகளை யாரிடமும் பகிர்ந்து கொள்ள அவகாசமே தருவதில்லை. இந்த மாதிரி சூழலில், கணவனுக்கு 'டிமென்சியா, பார்க்கின்சன்' பக்கவாதம் போன்ற நோய் வந்தால், சம்பந்தப்பட்ட பெண்ணால் அதை சமாளிப்பது என்பது கடினம்.
காரணம், நோயாளி சிரமப்படுகிறார் என்பது ஒரு பக்கம் இருந்தாலும், அவரின் தேவைகள் அனைத்தையும் உடன் இருந்து பார்த்துக் கொள்ளும் மனைவிக்கும் இது சிரமமானது தான். கணவன், மனைவி அதிலும், 50 வயதைக் கடந்தவர்கள் பெரும்பாலும் தனியே வாழும் இன்றைய சூழலில், நம் சமுதாயத்தில் பெண்ணுக்கு நிறைய அழுத்தங்கள் இருக்கின்றன.
என்னிடம் கண்ணீர் விட்டு அழுத பெண்கள் இருக்கின்றனர். 'டாக்டர் ஏதாவது காப்பகம் இருந்தால் சொல்லுங்கள். இவரை விட்டுவிட வேண்டும் என்ற எண்ணம் எல்லாம் கிடையாது. ஒரு வாரம் மட்டும் எனக்கு, 'பிரேக்' வேண்டும்' என்று சொல்வர். இதை, குடும்பத்தினர் முன் சொல்லவே மாட்டார்கள்.
அப்படி செய்தால், 'பொறுப்பில்லாமல் பேசுகிறாள்' என்ற விமர்சனம் வரும். 'ஆட்டிசம்' பாதித்த குழந்தையை, வாழ்நாள் முழுதும் பார்த்துக் கொள்ளும் தாய்க்கு எத்தனை அழுத்தம் இருக்கும் என்று புரிந்து கொள்ள வேண்டும். 'கணவனை பார்க்க முடியாதா, சொந்த குழந்தையை கவனிப்பதை விட என்ன வேலை?' என்று மற்றவர்கள் தவறாக பேசுவர் என்பதாலேயே, தன் சிரமங்களை வெளியில் சொல்ல பெண்கள் தயங்குகின்றனர்.
முடியாத நிலையில், தனக்கு ஒரு இடைவெளி தேவைப்படுகிறது என்பதை தயங்காமல் வெளிப்படுத்தி, மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டியது அவசியம். 'ஸ்ட்ரோக்' போன்ற நாள்பட்ட பிரச்னைக்காக, தொடர்ந்து சிகிச்சைக்கு கணவனை மூன்று, ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மனைவி அழைத்து வருவார்; திடீரென்று தனியாக வருவார். 'என்னவாயிற்று?' என்று கேட்டால், 'அவளுக்கு ஹார்ட் அட்டாக், கேன்சர்; கடைசி நேரத்தில் தான் பார்த்தோம். கடந்த மாதம் இறந்து விட்டாள்' என்பார்.
தனக்கு பிரச்னை இருந்தால் கூட, இவருக்கு முடியாமல் இருக்கும் போது, நம் பிரச்னையை எப்படி சொல்வது என்று மனதிலேயே வைத்திருந்து, அழுத்தம் அதிகமாகி, மோசமான விளைவுகளை தந்து விடுகிறது.
சாப்பாடு தருவதில் இருந்து, எல்லா தேவைகளையும் அருகில் இருந்து கவனிக்க வேண்டும். யாராக இருந்தாலும் சிரமம் தானே. எந்த அளவிற்கு இவர்களுக்கு மன அழுத்தம் இருக்கிறது என்றால், 'ராத்திரியில் அவ்வப்போது எழுந்து மூச்சு விடுகிறாரா என்று பார்த்து விட்டு படுப்பேன்' என்று சொல்வர்.
ஏதாவது ஆகி விடுமோ என்ற பயத்திலேயே பெண்களுக்கு உடல், மனநிலை மோசமாகி விடும். தலைவலி, நரம்பு பிரச்னைகளால் கால்களில் வலி, துாக்கமின்மை போன்ற பிரச்னைகள் வரலாம். மனதில் லேசாக அலுப்பு தட்டும் போதே, பிரச்னை இருக்கிறது என்பதை புரிந்து உடனடியாக ஆலோசனை பெற வேண்டும். இதற்கு தயங்கவோ, வெட்கப்படவோ அவசியம் இல்லை. யாரிடம் தன் பிரச்னையை சொல்வது என்று தெரியாவிட்டால், கணவருக்கு சிகிச்சை பெறும் டாக்டரிடமே கேட்கலாம்.
காபி குடிப்பது, படிப்பது, சினிமா பார்ப்பது என்று பிடித்த விஷயங்களை எந்த நிலையிலும் தவிர்க்கவே கூடாது. சிறிய விஷயமாக இருந்தாலும், மனதிற்கு பிடித்த விஷயங்களை செய்யும் போது, இந்த அழுத்தங்களில் இருந்து வெளியே வருவதற்கு உதவும்.
டாக்டர் மீனாட்சி சுந்தரம்,
இயக்குனர், நரம்பியல் துறை,
சிம்ஸ் மருத்துவமனை, சென்னை.
