காசநோய் காணாமல் போகுமா?; விழிப்புணர்வால் சாதிக்கலாம்!
காசநோய் காணாமல் போகுமா?; விழிப்புணர்வால் சாதிக்கலாம்!
PUBLISHED ON : மார் 13, 2022

கடந்த 2020ம் ஆண்டுக்கான 'இந்திய காசநோய் அறிக்கை'யின்படி , நாடு முழுவதும் 17,19,40,182 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 52,273 பேருக்கு காசநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது. காசநோய் ஒழிப்பில் கொரோனா தொற்று பரவல், பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. தொற்று தணிந்துள்ள நிலையில், தற்போது, இது வேகமெடுத்துள்ளது.
''இந்தியாவில் லட்சம் பேருக்கு 37 பேர் என்ற வீதத்தில் காசநோயால் உயிரிழக்கின்றனர். கிராம அளவில் காச நோயைக் கண்டறிவதற்காக நடமாடும் சோதனை மையங்கள் இருந்தாலும், அதன் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்'' என்று உலக சுகாதார நிறுவனத்தின் காசநோய் தடுப்புப்பிரிவு ஆலோசகர் பிரபு ராவணன் கூறுகிறார்.
2025க்குள் ஒழிக்க இலக்கு
2025-ம் ஆண்டுக்குள் காசநோய் இல்லாத இந்தியாவை உருவாக்க இலக்கு நிர்ணயித்து பணியாற்றி வருகிறோம்,'' என்று தமிழக காசநோய் தடுப்பு திட்ட கூடுதல் இயக்குனர் ஆஷா பிரட்டிக் கூறுகிறார்.
'காசநோய் ஒழிப்பில் முக்கியமான சவால், மக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வு இல்லாமை. தேசிய சுகாதார இயக்கம் மூலம் எவ்வளவுதான் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் மக்களுக்கு அதன் நோக்கம் புரிவதில்லை. உலக நாடுகளில் நீரிழிவு நோயாளிகள் பட்டியலில் இந்தியா இரண்டாம் இடத்திலும், 'ெஹச்.ஐ.வி.,' தொற்றாளர்கள் பட்டியலில் மூன்றாம் இடத்திலும் உள்ளதையும், இந்த இரண்டும் காசநோய் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளை அதிகப்படுத்தும் என்பதையும் பலர் உணரவில்லை.
புகைபிடிப்போருக்கும், மது அருந்துவோருக்கும் காசநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பகள் அதிகம். இரண்டு, மூன்று வாரங்களுக்கு மேல் இருமல் நீடித்தால் காசநோய் பரிசோதனை செய்து கொள்ளவேண்டியது அவசியம். காசநோயாளிகள் 6 முதல் 9 மாதங்கள் வரை தொடர்ந்து மருந்து சாப்பிட வேண்டும்.
சிகிச்சையைக் கைவிடாமல் மருந்தைச் சாப்பிட்டாலே, குணப்படுத்திவிடலாம். ஆனால், மருந்து உட்கொள்ள ஆரம்பித்த இரண்டு, மூன்று மாதங்களிலேயே அறிகுறிகள் குறைவதால் மருந்துகளை பலர் நிறுத்தி விடுகின்றனர். இதனால் நோய் அடுத்தகட்டமான மருந்துகளுக்குக் கட்டுப்படாத காசம் என்ற நிலைக்குச் செல்கிறது.
காசநோய் விழிப்புணர்வுக்கு தன்னார்வத் தொண்டு நிறுவனக் களப் பணியாளர்களின் உதவி தேவைப்படுகிறது. அவர்கள் சீரான இடைவெளியில் நோயாளிகளைக் கண்காணித்து, சிகிச்சைக்கு வராதவர்களை வீடு தேடிச் சென்று மீண்டும் சிகிச்சைக்கு வரவழைக்க வேண்டும்,'' என்று சொல்கின்றனர், மருத்துவர்கள்.
