PUBLISHED ON : மார் 24, 2013

பரிசோதனைக்கு எடுக்கப்பட்ட, 30 ஆயிரத்து 514 ரத்த மாதிரிகளில், 37 குழந்தைகளுக்கு, பிறவி தைராய்டு ஹார்மோன் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது
ஹார்மோன் குறைபாடு போன்ற பிறவி கோளாறுகளுக்கு, உடனடி சிகிச்சை அளிக்க, பிறந்த குழந்தைகளுக்கு இந்நோய்கள் குறித்த பரிசோதனை அவசியம் என, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் (ஐ.சி.எம்.ஆர்.,)தெரிவித்துள்ளது. பிறந்த குழந்தைகள், நோய் பாதிப்புகள் இன்றி, ஆரோக்கியமாக உள்ளனவா என்பதை அறிய, அவற்றுக்கு, மருத்துவமனையில் பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவற்றில், ஹார்மோன்கள் குறைபாடு, பிறப்புறுப்புகளின் பிறவி குறைபாடு போன்ற, நாளடைவில் தெரியவரும் பிறவி கோளாறுகள் குறித்த பரிசோதனைகள் பெரும்பா<<லும் மேற்கொள்ளப்படுவதில்லை.
பிறவிலேயே, அட்ரினல் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு, வளர்ச்சிக்குத் தேவையான ஹார்மோன்கள் உற்பத்தி குறைந்திருக்கும். தைராய்டு குறைபாடுள்ள குழந்தைகள், நாளடைவில் மூளை வளர்ச்சியின்மை, மனவளர்ச்சி குன்றிய தன்மை ஆகியவற்றுக்கு ஆளாகின்றனர் என, மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இந்த எச்சரிக்கையை கருத்தில் கொண்டு, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம், சென்னை, அரசு மகப்பேறு மருத்துவமனை மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனையில் நடத்திய ஆய்வின் முடிவுகள், சமீபத்தில் வெளியிடப்பட்டன.
அதன் விவரம்: பிறந்து, சில நாட்களே ஆன, 1,000 குழந்தைகளிடம், ஹார்மோன் குறைபாடுகளை கண்டறியும் பரிசோத னைகள் மேற்கொள்ளப்பட்டன. பரிசோதனைக்கு எடுக்கப்பட்ட, 30 ஆயிரத்து 514 ரத்த மாதிரிகளில், 37 குழந்தைகளுக்கு, பிறவி தைராய்டு ஹார்மோன் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 2,000 குழந்தைகளில், ஒரு குழந்தைக்கு, பிறப்புறுப்புகளின் பிறவி குறைபாடு உள்ளதும், ஆய்வில் தெரிய வந்துள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.