PUBLISHED ON : மார் 17, 2013
எனது 35 வயது மனைவிக்கு, காலையில் எழுந்தவுடன் கை, மணிக்கட்டு மூட்டில் வலி, வீக்கம் ஏற்பட்டு அவதிப்படுகிறார். இதற்கு என்ன செய்வது?
காலை எழுந்தவுடன் மூட்டை அசைக்க முடியாத அளவுக்கு வீக்கம், வலி இருந்தால், அதற்கு 'மார்னிங் ஸ்டிப்னஸ்' என்று பெயர். 'மார்னிங் ஸ்டிப்னஸ்' என்பது 'ருமாட்டிக்' நோய்க்கு அறிகுறியாக இருக்கலாம். இந்நோய் பல மூட்டினை பாதிப்பு செய்து, மூட்டு தேய்மானத்திற்கு வழிவகுக்கும். துவக்கத்தில் கண்டறிந்தால், நோயின் தன்மையை மாற்றக்கூடிய மருந்துகள் மூலம் நோயை கட்டுப்படுத்தி விடலாம். தீவிரமாகிவிட்டால் மூட்டு தேய்மானம் அடைந்து, மூட்டு மாற்று சிகிச்சை செய்ய வேண்டும். மருந்துகளால் குணமடைய செய்ய இயலாது. மருத்துவரிடம் ஆலோசித்து ருமாட்டிக் நோய்க்கான ரத்தப்பரிசோதனை மற்றும் எக்ஸ்ரே எடுத்து சிகிச்சையை துவக்குவது அவசியம்.
3 மாதங்களாக குதிங்காலில் வலி ஏற்பட்டு அவதிப்படுகிறேன். ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும்போதும் கஷ்டத்தை உணர்கிறேன். என்ன செய்வது?
ஒரு காரணமும் இல்லாமல் குதிகால் வலி ஏற்படுகிறது என்றால், அது பிளான்டர் பேசிடீஸ் ஆக இருக்கலாம். இது பாதத்தில் உள்ள பாதவிரிப்பு நார், குதிகால் எலும்பில் இணையும் இடத்தில் ஏற்பட்ட உள்வீக்கம் ஆகும். இதை குணமாக்க பலமாதங்களும் ஆகலாம். மெதுவான குதிகால் பகுதி கொண்ட காலணிகளை அணிய வேண்டும். 'ஆன்டி இன்பிளேமட்டரி' களிம்புகள் தடவலாம். இதற்கு மேல் அல்ட்ரா சவுண்ட் தெரபி, ஊசி ஆகிய சிகிச்சைகளும் உண்டு. நீங்கள் எலும்பு மூட்டு மருத்துவரை பார்ப்பது நல்லது.
பல ஆண்டுகளாக டென்னிஸ் விளையாடுகிறேன். சமீபகாலமாக பந்தை அடிக்க கையை உயர்த்தும்போது, தோள்பட்டையில் வலி ஏற்படுகிறது. பிசியோதெரபி செய்தும் பலனில்லை. நான் என்ன செய்வது?
நீங்கள் கூறுவது தோள்பட்டையை உயர்த்தி ஆடும் விளையாட்டுக்களான டென்னிஸ், வாலிபால், கூடைப்பந்து ஆகியவற்றுக்கு பொதுவானவை. பலமுறை தோள்பட்டையை உயர்த்தி பந்தை அடிக்க விசைகளை செலுத்தும்போது, தோள் மூட்டின் கிண்ணம் எனப்படும் 'கிளனாய்டு' பகுதியில் உள்ள குருத்தெலும்பில் கிழிசல் ஏற்பட்டு இருக்கலாம். பிசியோதெரபி செய்து பலனில்லை என்றால், நீங்கள் 'எம்.ஆர்., ஆர்த்தோகிராம்' என்ற பரிசோதனை செய்தபின், நுண்துளை சிகிச்சை செய்து நிரந்தர தீர்வு காணலாம்.
ஐம்பது வயதான நான் முழங்கால் மூட்டு தேய்மானம் அடைந்து வலியால் அவதிப்படுகிறேன். மருத்துவர் கூறும் மூட்டு ஊசியால் குணமடைய முடியுமா?
பொதுவாக மூட்டினில் அளிக்கப்படும் ஊசிகள், 'ஸ்டீராய்டு' மற்றும் 'ஹையலுரானிக் ஆசிட்' என்ற வகையை சேர்ந்தது. ஸ்டீராய்டு ஊசியாவது மூட்டினில் உள்ள வீக்கத்தை தற்காலிமாக கட்டுப்படுத்தும். மூட்டு தேய்மானத்தின் அடிப்படை காரணமான பழுதடைந்த ஜவ்வை சீரமைக்கும் சக்தி இல்லை. ஹையலுரானிக் ஆசிட் ஊசியானது மூட்டினில் உள்ள ஜவ்விற்கு ஒரு ஊட்டச்சத்து போல தற்காலிகமாக இயங்கும். ஆரம்பகால மூட்டு தேய்மானத்திற்கு இவை இரண்டும் குறுகிய காலம் மட்டுமே பயன்தரலாம். மூட்டினில் தேய்மானம் தீவிரமாக இருந்தால், இவை இரண்டுமே பலனளிக்காது. நீண்ட கால தீர்வு என்பது மூட்டுமாற்று சிகிச்சை மட்டுமே.
- டாக்டர் கே.என்.சுப்ரமணியன்,
மதுரை. 98941-03259