PUBLISHED ON : டிச 01, 2013

எனது உறவினர் ஒருவர் தினமும் மது குடிக்கும் பழக்கம் உடையவர். அவருடைய கல்லீரலில் சீழ் உள்ளது. அது நுரையீரலுக்கும் பரவியுள்ளது என டாக்டர் கூறினார். அதற்கு வாய்ப்பு உள்ளதா?
தினமும் குடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு படிப்படியாக உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். அப்படி குறையும்போது, இதுபோன்ற விளைவுகளை ஏற்படுத்தும். இதை 'அமீபிக் ஆப்சஸ்' என்பர். அதாவது கல்லீரலில் உள்ள சீழ் வெடித்து, அந்தச் சீழ் கல்லீரலைச் சுற்றியுள்ள பகுதிகளை பாதிக்க வாய்ப்பு உள்ளது. அப்படி நுரையீரலில் பாதிப்பு ஏற்படுத்துவதை, 'ஹெப்படோ பல்மனரி ஆப்சஸ்' என்பர். இதற்கு மெட்ரோனிடாசோல் என்னும் மருந்தை 10 முதல் 14 நாட்கள் வரை தொடர்ந்து கொடுக்க வேண்டும். உங்கள் உறவினர் உடனே குடிப்பதை நிறுத்த வேண்டும். இப்படியே இந்த பிரச்னைகள் தொடர்ந்தால், அது உயிருக்கே ஆபத்தாகக் கூட முடியலாம்.
எனது நண்பனுக்கு இளைப்பு தொந்தரவு உள்ளது. டாக்டர்கள் கொடுத்த மருந்தை சாப்பிடாமல், தொந்தரவு வரும்போது மட்டுமே எடுத்துக் கொள்வார். இப்போது இளைப்புக்கு லேகியம் சாப்பிடுகிறார். இளைப்பு தொந்தரவு இல்லை. இளைப்பிற்கு லேகியம் சாப்பிடலாமா?
மருத்துவத்தில் அலோபதி, ஓமியோபதி, சித்த மருத்துவம் போன்ற பலமுறைகள் உள்ளன. இவற்றில் நன்மையும் உண்டு, தீமையும் உண்டு. லேகியம் எதனால் தயார் செய்கின்றனர், என்னென்ன பொருட்கள் எல்லாம் அதில் சேர்க்கிறார்கள், என்பது தெரியாமல் அதை சாப்பிடுவது சரியல்ல. பொதுவாக ஸ்டீராய்டு மற்றும் அதிகமான தாதுப்பொருட்கள் கொண்டு செய்யப்படும் லேகியங்கள் என்றால், நீங்கள் சொல்வது போல நல்ல பசி, இளைப்பு முற்றிலும் குறைந்தது போன்ற பலனைத் தரலாம். ஆனால் உடலுக்கு இது எவ்வளவு நல்லது என்பது சொல்வதற்கில்லை.
மருந்துச் சீட்டு இங்கு மட்டுமல்ல. நீங்கள் வெளிநாடு சென்றால்கூட என்ன மருந்துகள் சாப்பிடுகிறீர்கள் என்று அங்குள்ள டாக்டர்கள் தெரிந்து கொள்வார்கள். முக்கியமாக, நாம் எந்த மருந்துகள் எடுத்துக்கொண்டாலும் அதனால் வரும் நன்மையை காட்டிலும், அந்த மருந்தால் ஏற்படும் பக்கவிளைவுகளை சந்திக்க வேண்டும். ஒரு மருந்து நன்மை செய்வதைக் காட்டிலும், தீமை செய்யாமல் இருப்பது அவசியம். எனவே, மருந்துச் சீட்டு இல்லாமல் உட்கொள்ளும் மருந்துகள் பாதுகாப்பானது அல்ல. மருந்துச் சீட்டுடன் நல்ல ஒரு தரமான மருத்துவமனையில் இருந்து பெறப்பட்ட மருந்து என்றால் நாம் எடுப்பது பற்றி யோசிக்கலாம்.
புகைபிடிப்பதால் புற்றுநோய் வரும். அதற்குப் பதிலாக மூக்குப்பொடி, புகையிலை போன்றவை சுவைத்தாலும் புற்றுநோய் வரும் வாய்ப்பு எந்தளவு உள்ளது?
புகையிலையை எந்த வடிவில் எடுத்துக் கொண்டாலும் அது உடலுக்குப் பிரச்னைதான். பீடி, சிகரெட் அல்லாமல், புகையிலை மற்றும் மூக்குப்பொடி போன்றவற்றை எடுக்கும்போது, வாய், தொண்டை, நுரையீரல் மற்றும் உடம்பின் பல பகுதிகளிலும் இது தொந்தரவை உண்டுபண்ணும். புகையிலையை பயன்படுத்துவதால் நாக்கு, வாய், தொண்டை, நுரையீரல் போன்ற பகுதிகளில் புற்றுநோய் வருவதற்கும் வாய்ப்பு உள்ளது. பீடி, சிகரெட் மட்டுமல்ல புகையிலையும் உயிருக்கு ஆபத்தை உண்டாக்கும். எனவே இவற்றை முற்றிலுமாக தவிர்ப்பதே நல்லது.
- டாக்டர் எம்.பழனியப்பன்,
மதுரை. 94425-24147

