PUBLISHED ON : பிப் 02, 2025

நம் உடலுக்கு தேவைப்படும் சக்தியில் கார்போஹைட்ரேடில் இருந்து 60 சதவீதம், புரதத்தின் வாயிலாக 10 - 15 சதவீதம். மீதி உள்ள 20 - 25 சதவீதம், கொழுப்பில் இருந்து தினசரி சாப்பிடும் உணவின் வாயிலாக கிடைக்கிறது. உயரம், உடல் எடை இவற்றின் அடிப்படையில் பார்த்தால், சராசரியாக தினமும் 50 கிராம் கொழுப்பு தேவைப்படும்.
பால், பால் பொருட்கள், முட்டை, மாமிசம் போன்ற இயற்கை உணவில் இருந்து இந்தக் கொழுப்பு சத்து கிடைப்பது ஆரோக்கியமானது.
அப்படி செய்யும் போது, சமையல் எண்ணெய் பயன்பாட்டை முடிந்த அளவு குறைத்துக் கொள்ள முடியும். இது தான் ஆரோக்கியமான முறை.
அந்த வகையில், 20 -- 25 மில்லி சமையல் எண்ணெய் தான் ஒரு பெண்ணிற்கு ஒரு நாளைக்கு தேவைப்படும்; அதாவது, நான்கு அல்லது- ஐந்து டீஸ்பூன்.
சமையல் எண்ணெயில் பாமாயில், நெய், வனஸ்பதி, தேங்காய் எண்ணெய், வெண்ணெய் போன்றவை சூடு, புறச்சூழல்களால் மூலக்கூறு அமைப்பில் மாற்றம் அடையும் தன்மை உள்ள நிறைவுற்ற கொழுப்பு தன்மை உள்ளவை.
இவற்றை அதிகபட்சம் 5 மில்லி மட்டுமே உபயோகிக்கலாம்.
காரணம், 'எல்டிஎல்' எனப்படும் கெட்ட கொழுப்பை இது அதிகரிக்கும்.
அதிகப்படியான கொழுப்பு உணவில் இருந்து சேமிக்கப்படுவதை விட, அதிகப்படியான எண்ணெய் கொழுப்பை சேமிப்பது உடலுக்கு சுலபம்.
எண்ணெய் எந்த சூழ்நிலையிலும் திரவ நிலையிலேயே இருக்கும். நிறைவுறாத கொழுப்பு எண்ணெய் வகைகளில் பாலி, மோனோ என்ற இரு வகைகள் உள்ளன.
இவை, 'ஸ்மோக்கிங் பாயின்ட்' எனப்படும் சூடு படுத்தும் போது புகை வரும் நிலை வரை இதன் தன்மையில் எந்த மாற்றமும் இருக்காது.
சூரிய காந்தி விதை, கடலை, கடுகு, கனோலா, நல்லெண்ணெய் போன்றவை இந்த வகைப்படும்.
இதிலும், ஒமேகா - 3 பேட்டி அமிலம் எந்த அளவு உள்ளது என்பதன் அடிப்படையில் சிறந்த எண்ணெய் வரிசைப்படுத்தப்படுகிறது.
அந்த வகையில் பாலி அன்சேச்சுரேட்டட் எனப்படும் பல நிறைவுறாத கொழுப்பு உள்ள ஆலிவ், கடுகு, கடலை, கனோலா எண்ணெய் போன்றவற்றில் ஒமேகா - 3 கொழுப்பு அமிலம் அதிகம் உள்ளதால், இவை மிகச் சிறந்ததாகக் கருதப்படுகிறது.
என் அறிவுரை, இந்த இரண்டு வகையிலும் உள்ள எண்ணெய் கலந்து பயன்படுத்த வேண்டும். ஒரே எண்ணெயை உபயோகிக்காமல் மாற்றி மாற்றி உபயோகிக்கலாம்.
காரணம், கொழுப்பில் கரையக்கூடிய 'விட்டமின் ஏ, ஈ, கே' போன்றவை குறிப்பிட்ட எண்ணெயில் மட்டுமே உள்ளன.
எந்த எண்ணெய் பயன்படுத்தினாலும் 25 மில்லிக்கு மேல் சாப்பிடக்கூடாது.
ஒரு மாதத்திற்கு ஒரு நபர் 750 மில்லி தான் பயன்படுத்த வேண்டும்; ஆண்டிற்கு 10 லிட்டர் தேவைப்படும்.
இது, ஐ.சி.எம்.ஆர்., எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நிர்ணயித்த அளவை விடவும் 3 லிட்டர் குறைவு தான்.
விஜய ஸ்ரீ, ஊட்டச்சத்து நிபுணர்,
எம்.ஜி.எம்., மருத்துவமனை, சென்னை044-4524 2424info@mgmhealthcare.in