PUBLISHED ON : டிச 10, 2017

ஒரு நிமிடத்தில் நாம் எத்தனை முறை சுவாசிக்கிறோமோ அதுவே சராசரி சுவாச விகிதமாகும். இக்கணக்கீடு பல காரணிகளால் மாறக்கூடும். உதாரணமாக, உடல் பருமனானவர்கள், இதயநோயாளிகள், ஆஸ்துமா உள்ளவர்களின் சுவாச விகிதத்தைக் கணக்கிடுவது சற்று சிரமம். சுவாச விகிதக் கணக்கெடுப்பில் முக்கியமான மற்றொன்று, கணக்கிடும் நேரம்.
நாம் விழித்திருக்கும்போதோ, நடைப்பயிற்சி, உடற்பயிற்சி செய்து முடித்த பின்னரோ வேலைகளை செய்துமுடித்தவுடனோ கணக்கிடக் கூடாது. அவ்வாறு எடுக்கப்படும் அளவு துல்லியமாக இருக்காது. ஓய்வில் இருக்கும்போது எடுக்கப்படும் அளவே சரியானது.
சுவாச விகிதத்தைக் கணக்கிடுவதில் சவாலான ஒன்று, மூளையின் செயல்பாடு. ஒரு நிமிடத்தில் நாம் எத்தனைமுறை மூச்சு விடுகிறோம் என்பதை மூளையே முடிவுசெய்யும். ரத்தத்தில் உள்ள ஆக்சிஜனின் அளவு குறையும்போதோ, கார்பன்டை ஆக்ஸைடின் அளவு அதிகமாகும்போதோ அடிக்கடி சுவாசிக்க வேண்டும் என நம் மூளை கட்டளையிடும். உதாரணமாக, ஒரு நோய்த் தொற்றின் காரணமாக நம் உடலில் கார்பன்டை ஆக்ஸைடு அதிகரித்தால், (ஆக்சிஜன் அளவு சரியாக இருக்கும்போது) நமது மூளை, நம்மை வேகமாக சுவாசிக்க வைத்து கார்பன்டை ஆக்ஸைடை வெளியேற்றும்.
எப்போது சுவாச விகிதம் குறையும்?
போதைப்பொருள்களை பயன்படுத்தும்போது நம் சுவாசம் சரியாக வேலை செய்யாது. இதற்கு காரணம் போதை மருந்துகள் ரத்தத்தின் வழியாக நம் மூளைக்கு அனுப்பும் செய்திகளை, மூளை மந்தமாக எடுத்துக்கொள்ளும். இதனால், நம் தேவையைவிடக் குறைவாக சுவாசிப்போம். தலையில் அடிபட்டு மூளையில் உள்ள சுவாச மையம் பாதிக்கப்பட்டாலும் நம்முடைய சுவாச விகிதம் குறையும்.
குழந்தைகளிடம் வேறுபடும்
நடக்க பழகிய குழந்தையைவிட கைக்குழந்தை அதிகமாக சுவாசிக்கும். மருத்துவ மொழியில் இதை பீரியாடிக் ப்ரீத்திங் (Periodic breathing) என்று கூறுவார்கள். பீரியாடிக் ப்ரீத்திங்கின்போது சுவாச அளவு பரவலாக மாறுபடும்.
ஒரு குழந்தை சில நிமிடங்கள் வேகமாக சுவாசித்து விட்டு பின்னர், இயல்பைவிடக் குறைவாக சுவாசிக்கலாம். பீரியாடிக் ப்ரீத்திங்கில் நாம் கவனிக்க வேண்டிய சில முக்கியமான அம்சங்கள் உள்ளன. இயல்பைவிட அதிகமாகவோ அல்லது குறைவாகவோ குழந்தை சுவாசிப்பது பெற்றோருக்கு அச்சுறுத்தலாக இருக்கும். உங்கள் குழந்தை நோயோ, வேறு ஏதாவது குறிப்பிட்ட உடல் பாதிப்புகளோ இல்லாமல் இருந்தால், பீரியாடிக் ப்ரீத்திங் சாதாரண ஒன்றுதான், இல்லையென்றால் உடனடியாகக் கவனிக்க வேண்டியது அவசியம்.
சிகிச்சை: அலர்ஜி, ஆஸ்துமா, நுரையீரல் புற்றுநோய், சி.பி.ஓ.டி, ஸ்லீப் ஆப்னியா, நிமோனியா போன்றவற்றால் சுவாசப்பிரச்னைகள் ஏற்படும். இதற்கான காரணத்தைக் கண்டறிந்து அந்தந்த நோய்க்கான சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். பி.எஃப்.டி., ரத்தப்பரிசோதனை, ஸ்கேன், ஸ்லீப் டெஸ்ட் மற்றும் நுரையீரலில் எவ்வளவு சளி உள்ளது என்பதற்கான பரிசோதனைகள் மூலம் சுவாச பிரச்னைக்கான காரணங்கள் கண்டறியப்படும். சுவாச பிரச்னைகள் வராமல் தடுக்க ஆண்டுக்கு ஒருமுறை நிமோனியா, ப்ளு தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.

