PUBLISHED ON : டிச 10, 2017

உடலில் உள்ள பிரச்னைக்கு அறிகுறியே சீரற்ற சுவாச விகிதம். இந்நேரத்தில் சுவாசவிகிதம் இயல்பைவிட குறைவாகவோ அதிகமாகவோ இருக்கும். இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கும். உடற்பயிற்சி செய்யும்போது சுவாச விகிதம் அதிகரிப்பது இயல்பான ஒன்று.
வயது வந்தவர்கள் சராசரியாக நிமிடத்துக்கு, 20 முறை சுவாசிக்க வேண்டும். மாறாக, சுவாச விகிதம், 24க்கும் மேல் இருந்தால் அது ஆபத்தானது. ஒருவர், திடமானவர் அல்லது திடமற்றவர் என அவரின் இதயத்துடிப்பின் அளவு, ரத்த அழுத்த அளவின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படும். சுவாச விகிதம் அதிகமாக இருப்பதற்கு பல்வேறு காரணிகள் உள்ளன. சில காரணிகள் நுரையீரல் தொடர்புடையவையாக இருக்கும். சில காரணிகள் நுரையீரல் தொடர்பில்லாதவையாக இருக்கும். சுவாச விகிதம் எதனால் அதிகரிக்கும்?
காய்ச்சல்: காய்ச்சலின் காரணமாக உடலில் ஏற்படும் வெப்பத்தை வெளியேற்ற, நமது உடல் வேகமாக சுவாசிக்கத் தொடங்கும். இதனால், சுவாச விகிதம் அதிகரிக்கும். இவ்வாறு அதிகரிக்கும் சுவாச விகிதம், நோயை மோசமடையச் செய்யும். குழந்தைகள் காய்ச்சல் பாதிப்பில் இருக்கும்போது, இயல்பைவிட அதிகரிக்கும் ஒரு டிகிரி செல்சியஸ் வெப்பத்துக்கு, சுவாச விகிதம் ஐந்து முதல் ஏழு வரை அதிகரிக்கும்.
ஆனால், 12 மாதத்துக்குட்பட்ட குழந்தைகளுக்கு காய்ச்சலின் போது சுவாச விகிதம் அதிகரிப்பதாக இதுவரை எந்த ஆய்வுகளும் நிரூபிக்கவில்லை. அவ்வாறு அதிகரிக்கும் பட்சத்தில், ஒரு டிகிரி செல்சியஸ் வெப்பத்துக்கு ஏழு முதல் 11 வரையிலான சுவாச விகிதம் இயல்பைவிட அதிகரிக்கலாம்.
டீஹைட்ரேஷன் எனப்படும் உடலின் நீர்வற்றிய தன்மை இருந்தால் சுவாச விகிதம் அதிகரிக்கும். ஆஸ்துமா இருந்தால் சுவாச விகிதம் அதிகரிக்கும். நாள்பட்ட நுரையீரல் நோய் (சி.பி.ஓ.டி) உள்ளவர்களுக்கு சுவாச விகிதம் அதிகமாக இருக்கும். குறிப்பாக, புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு மிக அதிகமாக இருக்கும். மனஅழுத்தம், வலி, கோபம் அல்லது தாக்குதலுக்கு ஆளாகும்போது சுவாச விகிதம் உடனடியாக அதிகரிக்கும். நுரையீரல் புற்றுநோய் இருப்பவர்களுக்கு சுவாச விகிதம் அதிகரிக்கும்.
உறைந்த ரத்தம் காலில் இருந்து நுரையீரலுக்குச் செல்லும் போதும் சுவாச விகிதம் அதிகரிக்கலாம். ப்ளு, நிமோனியா, டி.பி., உள்ளிட்ட நோய்களாலும் சுவாச விகிதம் அதிகரிக்கும். பிறந்த குழந்தைகளுக்கு டி.டி.என்., எனும் மூச்சுத்திணறல் இயல்பாக ஏற்படும். சில குழந்தைகளுக்கு 24 மணி நேரத்தில் சரியாகிவிடும்.
சர்க்கரை குறைபாடு உள்ளவர்களுக்கு அமிலத்தன்மை அதிகரித்து, சுவாச விகிதம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. வலி நிவாரண மாத்திரைகள் மற்றும் தூக்கம் வரவழைக்கும் மாத்திரைகளை அதிகமாக எடுத்துக்கொள்வதாலும் சுவாச விகிதம் அதிகரிக்கும்.
இயல்பான சுவாச விகிதத்தைவிட, நிமிடத்துக்கு 12 முதல் எட்டு வரை குறைந்தால் உடனே கவனிக்க வேண்டும். மது, போதைப்பொருள்களைப் பயன்படுத்துவதால் சுவாச விகிதம் குறையும். உடலில் ஏற்படும் அசாதாரண வளர்சிதை மாற்றத்தால் சுவாச விகிதம் குறையும். பக்கவாதம், தலையில் காயம் போன்ற காரணங்களால் மூளையின் செயல்பாட்டில் பிரச்னை உள்ளவர்களுக்கு சுவாச விகிதம் குறையும்.

