PUBLISHED ON : பிப் 03, 2013
எனக்கு சில ஆண்டுகளாக ரத்தக்கொதிப்பு உள்ளது. எனக்கு ஒரு பல் எடுக்க வேண்டும் என்றும், சில பற்களில் சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் டாக்டர்கள் கூறுகின்றனர். ரத்தக்கொதிப்பு மாத்திரை சாப்பிடுவோர் பல் சிகிச்சை செய்து கொள்ளலாமா?
இன்றைய சூழலில் ரத்தக்கொதிப்பு நோய் 40 வயதுக்கு மேல் உள்ளவர்களிடம் சாதாரணமாக காணப்படுகிறது. ரத்தக்கொதிப்பு நோய் உள்ளவர்கள் சாதாரணமாக பல் சிகிச்சை செய்து கொள்ளலாம். சில பாதுகாப்பு வழிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். சிகிச்சை நாளன்று காலையில், வழக்கமாக சாப்பிடும் மாத்திரைகள் அனைத்தையும் சாப்பிட வேண்டும். காலை உணவு உட்கொள்ள வேண்டும்.
சிகிச்சைக்கு முன், ரத்தஅழுத்தத்தை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ஒரே நாளில் அனைத்து சிகிச்சையையும் செய்யக் கூடாது. ஏனெனில் நீண்ட நேரம் சிகிச்சை பெறும்போது, ரத்தஅழுத்தம் அதிகரிக்கும். எனவே 2 அல்லது மூன்று நாட்களாக பிரித்து சிகிச்சையை செய்து முடிக்க வேண்டும். அதே போல பல் எடுத்ததும் அந்த இடத்தில் ரத்தக்கசிவு முற்றிலும் நின்றுவிட்டதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். இதுபோன்ற சில பாதுகாப்பு முறைகளை பின்பற்றி, ரத்தக்கொதிப்பு உள்ளவர்கள், அனைத்து வகை பல்சிகிச்சைகளையும் பயமின்றி செய்து கொள்ளலாம்.
கடைகளில் பலவகை டூத்பேஸ்டுகள் கிடைக்கின்றன. அதில் சரியான பேஸ்டை தேர்ந்தெடுப்பது எப்படி?
டூத் பேஸ்டுகளில் பொதுவாக சுத்தம் செய்வதற்கு, சுவை ஏற்படுத்துவதற்கு பேஸ்ட் போன்ற பதத்தை தக்க வைத்துக் கொள்வதற்கு என ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன. அத்துடன் முக்கியமாக இருக்க வேண்டியது 'புளூரைட்'. வாயில் உள்ள கிருமிகள் மற்றும் உணவுத் துகள்களுடன் சேர்த்து, ஒருவித அமிலத்தை சுரக்கின்றன. அவை பற்களை அரித்து சொத்தையை உண்டாக்கும்.
'புளூரைட்' என்பது இந்த அமிலத்தில் இருந்து பற்களை பாதுகாக்கும். அதேநேரம் ஆரம்ப நிலையில் இருக்கும் சொத்தை பரவாமல் தடுக்கும்.
நீங்கள் வாங்கும் பேஸ்டில் 'புளூரைட்' உள்ளதா என பார்த்து வாங்குங்கள். சில டூத்பேஸ்டுகள் பல் கூச்சம் உள்ளவர்களுக்கென செய்யப்பட்டுள்ளது. லேசான கூச்சம் உள்ளவர்கள், இவற்றை பயன்படுத்தலாம். 'சோடியம் பெராக்சைடு' என்னும் ரசாயனம் கலந்த பேஸ்டுகள், பற்கள் வெண்மையாவதற்கு உதவும். நீங்கள் டூத்பேஸ்ட் வாங்கும்போது, உங்கள் தேவை எதுவோ, அதற்கேற்ற பேஸ்ட்டை தேர்வு செய்யுங்கள். முக்கியமாக நீங்கள் வாங்கும் பேஸ்டில் இந்திய பல்மருத்துவ சங்கத்தின் அங்கீகாரம் உள்ளதா என பார்த்து வாங்குங்கள்.
- டாக்டர் ஜெ.கண்ணபெருமான்,
மதுரை. 94441-54551