PUBLISHED ON : பிப் 03, 2013
எனக்கு வயது 25. அதிக உணவு சாப்பிட்டால் எனக்கு மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. இதற்கு என்ன காரணம்?
நாம் அளவுக்கு அதிகமாக உணவு எடுத்துக் கொள்வதன் மூலம், நம் இரைப்பையின் அளவு அதிகரிக்கிறது. நாம் ஒவ்வொரு முறை மூச்சை உள்ளே இழுக்கும்போது, நம் நுரையீரல் விரிவடைகிறது. ஆனால் நம் வயிற்றில் அதிக உணவு இருப்பதால், நுரையீரல் கீழ்ப்பக்கமாக விரிவடைய முடிவதில்லை. இதனால் மூச்சுத் திணறல் ஏற்படுகிறது.
அதனால் எப்போதும் அதிக உணவை தவிர்க்க வேண்டும். பசியின் அளவுக்கு ஏற்ப, உணவு உட்கொள்வது நல்லது. மேலும் உணவின் அளவு சிறிதாகவும், அதிக உணவு இடைவேளை இல்லாமலும் இருந்தால், மூச்சுத் திணறலை தவிர்க்கலாம். இதனால் ரத்தத்தில் குளுக்கோசின் அளவு சீராக இருக்கும்.
எனது மனைவியின் வயது 30. சற்று குண்டாக இருக்கிறார். இரவில் அதிக குறட்டை விடுகிறார். குண்டாக இருந்தால் குறட்டை வருமா?
குறட்டை விடுவோருக்கு ஆழ்ந்த தூக்கம் கிடைக்காது. உடல் எடை அதிகமாக உள்ளவர்களுக்கு, சுவாச குழாயில் சுருக்கம் ஏற்படுகிறது. மேலும் அவர்களுக்கு நுரையீரல் நோய் வருவதற்கு அதிக வாய்ப்புள்ளது. சுவாச குழாய் சுருங்குவதால் வாயின் மேற்கூரையில் அதிர்வுகள் ஏற்பட்டு குறட்டை உண்டாகிறது.
நம் வயதுக்கும், உடல் எடைக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. ஆனால் நம் உடல் எடை நம் உயரத்திற்கு ஏற்ப இருக்க வேண்டும். உதாரணமாக நம் உயரம் 160 öŒ.மீ., என்று இருந்தால், நம் எடை 60 கிலோவாக இருக்க வேண்டும்.
உங்கள் மனைவியின் எடையை உடனடியாக குறைக்கச் சொல்லுங்கள். குறட்டை விடுவோருக்கு பல நவீன பரிசோதனைகளும், சிகிச்சை முறைகளும் உள்ளன. இதன் மூலம் உங்கள் மனைவிக்கு அதிக உடல் எடையால்தான் குறட்டை வருகிறதா என்பதையும் உறுதி செய்து கொள்ள முடியும்.
எனது 50 வயது தாயாருக்கு, அடிக்கடி மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. அப்போதெல்லாம் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் நரம்பு ஊசி போட்டுக் கொள்கிறார். இதனால் பக்க விளைவுகள் ஏற்படுமா?
மூச்சுத் திணறலுக்காக நரம்பு ஊசிகள் பயன்படுத்துவது சரியான மருத்துவ சிகிச்சை ஆகாது. நரம்பு ஊசிகளை மூச்சுத் திணறலுக்காக தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், உயிருக்கும் ஆபத்தான நிலைமை ஏற்பட, அதிக வாய்ப்பு உள்ளது. இன்றைய நவீன மருத்துவத்தில் நரம்பு ஊசிகள் தீவிர சிகிச்சை பிரிவுகளிலும் அவசியம் ஏற்பட்டால் மட்டுமே பயன்படுத்தப் படுகிறது.
மூச்சுத் திணறலுக்கு இன்ஹேலர், தேவைப்பட்டால் மருந்து, மாத்திரைகளும் எடுத்துக் கொள்ளலாம். ஆதலால் உங்கள் அம்மாவை நரம்பு ஊசிகளை தவிர்க்கச் சொல்லுங்கள். மேலும் இன்ஹேலர் பயன்படுத்துவதுதான் சரியான மருத்துவ சிகிச்சை ஆகும்.
- டாக்டர் எம். பழனியப்பன்
மதுரை 94425-24147