தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/அன்னிய பொருளை கண்டறிவது எப்படி?

அன்னிய பொருளை கண்டறிவது எப்படி?

அன்னிய பொருளை கண்டறிவது எப்படி?


PUBLISHED ON : மார் 20, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 20, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நம் அனைவருக்கும் ஏதோ ஒரு வகையில், ஏதோ ஒரு பொருளுக்கு ஒவ்வாமை அல்லது எதிர்விளைவு ஏற்பட வாய்ப்புள்ளது. பிறவித் தோல் நோய்கள் மற்றும் தொற்று நோய்கள் தவிர, பெரும்பாலான தோல் நோய்கள் ஒவ்வாமை சார்ந்தவை தான்.

ஒவ்வாமை பற்றி முழுமையாகப் புரிந்து கொள்ள, நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி பற்றி தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். 'ஆன்டிஜென்' என்று சொல்லப்படும் அன்னிய பொருள், உடலுக்குள் நுழைவதை, அடையாளம் காண்பது தோலெங்கும் பரவியுள்ள செல்கள் தான்.

சுற்றுச்சூழலில் உள்ள மாசு, துாசு, பாக்டீரியா, வைரஸ், பூஞ்சைக் காளான் போன்ற கிருமிகள், நாம் அன்றாடம் பயன்படுத்தும் மேக் அப் பொருட்கள், மருந்துகள், தைலங்கள், களிம்புகள், அணியும் ஆடைகள், நகைள், அவற்றின் சாயங்கள், கடல் உணவுகள், பதப்படுத்தும் வேதிப் பொருட்கள், சோப்புகள் என, சூரியனுக்கு கீழ் உள்ள அனைத்தும் அன்னிய பொருளாக, எதிர்ப்பு சக்திப் பிரிவில் பதிவு செய்யப்படுகின்றன.

ஒவ்வாமை



இவற்றில், எவை அளவுக்கு அதிகமாக, தோல் மேல் படுகிறதோ அல்லது நுழைகிறதோ, எவை நம் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்று நம் உடல் கருதுகிறதோ, அவற்றுக்கு எதிராக, 'ஆன்டிபாடி' எனப்படும் தற்காப்புப் பொருள், உருவாகி, தயார் நிலையில் இருக்கும்.

தீங்கு விளைவிக்கும் அன்னிய பொருள் குறிப்பிட்ட அளவுக்கு மேல் உடலுக்குள் நுழைந்து, குறிப்பிட்ட காலத்துக்கு மேல், உடலில் தங்கும் போது, ஏற்கனவே தயார் நிலையில் உள்ள ஆன்டிபாடி, தீங்கு விளைவிக்கும், அன்னிய பொருளை தாக்கி, அழிக்க முயற்சி செய்யும் எதிர்வினை தான், ஒவ்வாமையாக வெளிப்படுகிறது.

அதி விரைவு ஒவ்வாமை



இவ்வகை ஒவ்வாமை, பல சமயங்களில் உயிருக்கே ஆபத்தாக முடியலாம். ஒரு அன்னிய பொருள் நம் உடலுக்குள், குறிப்பாக, தோல், முடி, நகங்கள் வாயிலாக நுழைந்த மறுகணம், ஏற்கனவே தயார் நிலையில் உள்ள ஆன்டிபாடி, அதிவிரைவில் செயல்பட்டு, தோல் முழுவதும் சிவந்து, தடித்து, உதடுகள், கண்களைச் சுற்றியுள்ள தோல், உள்ளங்கைகள், உள்ளங்கால்கள் வீங்கி, மிக அரிதாக சில நேரங்களில், மூச்சுக் குழல் வீங்கி மூச்சுத் திணறலும் ஏற்படும்.

எதிர்வினை ஒவ்வாமை



அன்னிய பொருள் நம் உடலுக்குள் நுழைந்த, இரண்டு முதல் நான்கு மணி நேரத்திற்குள், எதிர்வினை ஏற்பட்டு, ரத்தம் முழுவதும் பரவி விடுவதால், உடலெங்கும் உள்ள ரத்த நாளங்கள், குறிப்பாக தோலில் உள்ள ரத்த நாளங்கள் பாதிக்கப்படுகின்றன.

தோலில் பரவலாக சிவப்புப் புள்ளிகள் தோன்றி, சில சமயம் அவற்றின் நடுவே புண்கள் ஏற்பட்டு தோலும், தோலுக்கு அடியில் உள்ள கொழுப்பு படலமும் பாதிக்கப்படுகின்றன.நாம் உட்கொள்ளும் சில மருந்துகளால் ஏற்படும் ஒவ்வாமை, இந்த வகை ஒவ்வாமை எதிர்வினையைச் சார்ந்தது.

செல் - நச்சு ஒவ்வாமை



அன்னிய பொருள் உடலுக்குள் நுழைந்த, இரண்டு - ஆறு மணி நேரத்திற்குள் ஏற்படும் இது, தோலில் உள்ள ரத்த நாளங்களை பாதிப்பதோடு, எதிர்ப்பு நோய்க்கும் காரணமாகிறது. மிகப்பெரும் மன அழுத்தத்தின் வெளிப்பாடான கரு நீலக் கரப்பான் என்ற தாங்க முடியாத அரிப்பையும், உடல் முழுதும் கரு நீல நிறத்தையும், தோலில் பல அடுக்குகளில் பிளவுகள் ஏற்பட்டு, மிகப் பெரிய நீர்க் கொப்புளங்கள் தோன்றும்.

தாமத ஒவ்வமை



அன்னியப் பொருள் தோல், முடி, நகங்களில் நுழைந்து அல்லது பட்டு, 48 முதல் 72 மணி நேரத்தில் இருந்து பல ஆண்டுகள் வரை கூட, தாமதமாக ஒவ்வாமை எதிர்வினை ஏற்படுகிறது.

ஹேர் - டை



தலை முடி சாயங்களில், அவை எவ்வளவு விலை உயர்ந்ததாக இருப்பினும், எந்த தீங்கும் விளைவிக்காது என, விளம்பரத்தில் சொன்னாலும், அவற்றில் பாரா பெனிலின் டை அமீன் என்ற பிபிடி வேதிப் பொருள் இல்லாமல் இருக்காது. பிபிடி தான் பல ஒவ்வாமை எதிர்வினைகளுக்கும், ரத்த புற்றுநோய், நிணநீர்க் கட்டிகள், சிறுநீரகப் பை புற்றுநோய்க்கும் காரணமாகிறது. கண் மை, லிப்ஸ்டிக், நறுமணப் பூச்சுக்கள், தலை வலித் தைலங்கள், நெயில் பாலிஷ் மற்றும் அதை அகற்ற பயன்படும் ரிமூவர், ஆடைகள், கம்பளி, செயற்கை நுாலிழையாலான ஆடைகளில் உள்ள சாயங்கள், பிளாஸ்டிக், தோல் போன்ற அன்றாடம் பயன்படும், பல பொருட்கள், இந்தத் தாமத ஒவ்வாமையை ஏற்படுத்துகின்றன.

எப்படி தெரிந்து கொள்வது?



எந்தப் பொருள் ஒவ்வாமையை ஏற்படுத்தும் என்பதை, 'பேட்ச் டெஸ்ட்' என்ற ஒட்டுப் பரிசோதனை மூலம் துல்லியமாக அறிந்து கொள்ளலாம்.நாம் தினமும் பயன்படுத்தும் எந்தப் பொருளாக இருப்பினும், அதைச் சிறிய அளவு எடுத்து தோலில் ஒட்டி, 72 மணி நேரம் கழித்துப் பார்க்கும் போது, அந்த இடத்தில் தோல் சிவந்து, தடித்து, தோலே புண்ணாகி வறண்டு போயிருப்பதை வைத்து, ஒவ்வாமையின் தீவிரத்தை நாம் அறிந்து அளவிடலாம். தோல், முடி, நகங்களில், எந்த ஒரு பொருளையும் பயன்படுத்தும் முன், இந்த பேட்ச்டெஸ்ட் செய்வதன் மூலம் ஒவ்வாமையைக் கண்டறிந்து தவிர்த்து விடலாம்.

டாக்டர் எஸ். முருகுசுந்தரம்

மருத்துவ இயக்குனர்

தோல் மருத்துவ மையம்

சென்னை

93811 22225, 93813 22234


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us