PUBLISHED ON : ஜூன் 23, 2013
அளவிற்கு அதிகமாக வெளியேறும் வியர்வையால், நம் உடம்பின் நீர்ச் சத்து, சோடியம், பொட்டாசியம் போன்ற தாது உப்புகள் ஆகியவற்றின் அளவு குறைகிறது. இதனால், மயக்கம் ஏற்படும். உடல் உறுப்புகளுக்கு செல்லும் ரத்த ஓட்டம் குறைந்து, உறுப்புகள் பாதிக்கப்படும் அபாயமும் உண்டு
கோடை வெயிலின் உச்சமாக கருதப்படும், 'கத்திரி' வெயில் முடிவடைந்து, ஒரு மாதம் ஆக உள்ளது. ஆனால், வெயிலின் தாக்கம் இன்னும் குறைந்ததாக தெரியவில்லை. கடந்த ஒரு வாரமாக, தமிழகத்தில் பரவலாக, 35 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்துகிறது. தமிழகத்தில், வெயில் காலமாக கருதப்படும், மார்ச் முதல் ஆகஸ்ட் வரை, நமக்கு வரும், வெயில் கால நோய்கள் மற்றும் அவற்றில் இருந்து தற்காத்து கொள்வது குறித்து, ஆலோசனை வழங்குகிறார், சென்னை, ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, ஆர்.எம்.ஓ., ஆனந்த் பிரதாப்.
கட்டி, கொப்பளம்: நம் சருமத்தில் எண்ணெய் பிசுபிசுப்பு அதிகரிப்பதால், வெயிலில் பலருக்கு, கட்டி, கொப்பளம் வருகிறது. குறிப்பாக, கை, முகம் போன்ற, நேரடியாக வெயில் படும் இடங்களில் இவை வருகின்றன. வெயில் நேரத்தில், வெளியில் செல்வதை முடிந்தவரை தவிர்ப்பது மற்றும் குளிப்பதை தவிர, கை, கால், முகத்தை, ஒரு நாளுக்கு, ஆறு முறையாவது, தண்ணீரில் கழுவுவதன் மூலம், கட்டி, கொப்பளம் வருவதை தவிர்க்கலாம்.
ஹீட் ஸ்ட்ரோக்: 'ஹீட் ஸ்ட்ரோக்' எனப்படும் வலிப்பு நோய், அதிக உஷ்ணத்தின் காரணமாக வருகிறது. மரணத்தை விளைவிக்கும் அபாயம் உள்ள இந்நோய் வராமல் இருக்க, வெயிலில் பணிபுரியும், கட்டட பணியாளர்கள், போக்குவரத்து போலீசார் போன்றவர்கள், சூரிய வெப்பம் நேராக தலையில் படாதபடி, தலை கவசம், தொப்பி ஆகியவற்றை, கட்டாயம் அணிய வேண்டும்.
முதியோருக்கு, 'ஹீட் ஸ்ட்ரோக்' வர அதிக வாய்ப்பு உள்ளதால், அவர்கள், உச்சி வெயில் வேளையில், வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். சிறுவர்கள், காலை, 10:00 மணி முதல் மாலை, 4:00 மணி வரை, கிரிக்கெட் போன்ற, 'அவுட் டோர்' விளையாட்டுகள் விளையாடுவதை தவிர்த்தால், இந்த வலிப்பு நோய் வராமல் தடுக்கலாம்.
நீர் சுளுக்கு: இயல்பாகவே உடம்பிலிருந்து அதிக வியர்வை வெளியேறும் தன்மை உடையவர்களுக்கும், வெயிலில் அதிக நேரம் பணிபுரிவோருக்கும், 'நீர் சுளுக்கு' பிரச்னை அதிகம் ஏற்படுகிறது. ஒருவருக்கு, அதிக எரிச்சலுடன், அவ்வப்போது, சொட்டு சொட்டாக சிறுநீர் வெளியேறினால், அவர், இப்பிரச்னைக்கு ஆளாகி உள்ளார் என, அர்த்தம். தினமும், குறைந்தபட்சம், 4 லிட்டர் தண்ணீர் குடிப்பது, தர்பூசணி, வெள்ளரி போன்ற நீர்ச்சத்து மிக்க பழங்களை உண்பதன் மூலம், நீர் சுளுக்கில் இருந்து தப்பிக்கலாம்.
உடல் சோர்வு, மயக்கம்: வெயிலின் தாக்கம் காரணமாக, அளவிற்கு அதிகமாக வெளியேறும் வியர்வையால், நம் உடம்பின் நீர்ச் சத்து, சோடியம், பொட்டாசியம் போன்ற தாது உப்புகள் ஆகியவற்றின் அளவு குறைகிறது. இதனால், உடல் சோர்வு, மயக்கம் ஏற்படும். உடல் உறுப்புகளுக்கு செல்லும் ரத்த ஓட்டம் குறைந்து, முக்கிய உறுப்புகள் பாதிக்கப்படும் அபாயமும் உண்டு. தர்பூசணி, ஆரஞ்சு, வெள்ளரி போன்ற நீர்ச் சத்துள்ள பழங்களை, தினமும் உண்பதன் மூலம், நீர்ச் சத்து மற்றும் தாது உப்புகளின் இழப்பை தடுக்கலாம்.
சின்னம்மை: வெயில் கால நோய்களில், மிகவும் முக்கியமானது சின்னம்மை. 'வெரிஸ்லா' வைரசின் வீரியம் அதிகரிப்பதால், இந்நோய் வருகிறது. தொடர்ந்து, மூன்று நாட்களுக்கு மேல், கடுமையான உடல் வலியுடன், காய்ச்சல் இருப்பது, இந்நோயின் அறிகுறி. சின்னம்மைக்கு ஆளாவோரின் உடம்பில், ஆங்காங்கே கொப்பளங்கள் உண்டாகும். வேப்பிலையைக் கொண்டு தடவி கொடுப்பதால், அவற்றால் ஏற்படும் எரிச்சல் குறையும். இந்நோய்க்கு ஆளாவோர், தனி அறையில் ஓய்வு எடுத்தாலே, சில நாட்களில், சின்னம்மை குணமாகி விடும். மருத்துவரின் ஆலோசனைப்படி, மாத்திரைகளையும் உட்கொள்ளலாம். இதற்கு தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. விருப்பமுள்ளவர்கள், வெளிச்சந்தையில் கிடைக்கும் தடுப்பூசியை, உரிய பரிந்துரையுடன் போட்டுக் கொள்ளலாம்.
தட்டம்மை: சின்னம்மைக்கு அடுத்ததாக, வெயிலில் அதிகம் தாக்கும் நோய் தட்டம்மை. ஒருவர் உடலில், ஆங்காங்கே, 'வேர்க்குரு' போன்று, சிறு கொப்பளங்களுடன், வயிற்றுப் போக்கும் இருப்பது இந்நோயின் அறிகுறி. உரிய சிகிச்சையின் மூலம், தட்டம்மையை குணப்படுத்தலாம். மருத்துவரின் பரிந்துரைப்படி, இதற்கு தடுப்பூசியும் போட்டுக் கொள்ளலாம்.
அழுக்கு தேமல்: உடம்பில் இருந்து வெளியேறும் வியர்வையால், முகம், கை, கழுத்து, தோள்பட்டை ஆகிய இடங்களில், அழுக்கு தேமல் வருகிறது. கோடை காலத்தில், காலை, மாலை வேளைகளில் தவறாமல் குளிப்பது, வியர்வையில் நனைந்த ஆடையை, உடனே மாற்றுவது போன்ற வழிமுறைகளால், அழுக்கு தேமலை தவிர்க்கலாம்.
தோல் புற்றுநோய்: சூரியனில் இருந்து வரும் புறஊதா கதிர்களை, உடம்பில் நேரடியாக உள்வாங்குவோருக்கு, தோல் புற்றுநோய் வரும் அபாயம் உள்ளது. போக்குவரத்து போலீசார், கட்டட பணியாளர்கள், களப் பணியாளர்கள் போன்ற வெயிலில் பணிபுரிவோர், அவர்கள் மீது, புறஊதா கதிர்கள் நேரடியாக விழாதபடி, பருத்தியிலான சட்டை, தலைகவசம், தொப்பி ஆகியவற்றை அணிய வேண்டும்.
டாக்டர் ஆனந்த் பிரதாப், ஆர்.எம்.ஓ.,
ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, சென்னை