PUBLISHED ON : ஜூன் 23, 2013

சென்னை போன்ற மாநகரங்கள் மட்டுமின்றி, சிறு நகரங்களிலும், பெற்றோர், தங்கள் பிள்ளைகளை, ஆரம்ப பள்ளிக் கல்விக்கு முன், 'கிண்டர் கார்டன்' எனப்படும், எல்.கே.ஜி., - யு.கே.ஜி., வகுப்புகளில் சேர்த்து படிக்க வைப்பது வழக்கமாகி விட்டது. தங்களின், மூன்று வயது பிள்ளைகள், தினமும் சீருடை அணிந்து பள்ளிக்கு செல்வதை காண்பதற்கும், 'டீச்சர்' சொல்லித் தரும் பாடல்களை, அவர்களின் மழலை மொழியில் கேட்பதற்கும், பெற்றோருக்கு மகிழ்ச்சியாக தான் இருக்கும்.
ஆனால், அதே பிள்ளைகள், பள்ளிக்கு செல்ல அடம் பிடித்தால், அவர்களை சமாளிப்பது, பெற்றோர் மற்றும் டீச்சர்களுக்கு, பெரும் சவாலாகி விடுகிறது. பள்ளி செல்ல அடம் பிடிக்கும் பிள்ளைகளை கையாள்வது குறித்து, ஆலோசனை வழங்குகிறார் மனநல மருத்துவர் சபீதா.
பிறந்ததில் இருந்து, மூன்று ஆண்டுகள், தாயின் அரவணைப்பிலேயே வளரும் பிள்ளைகள், எல்.கே.ஜி.,க்கு செல்லும்போது, முதல்முறையாக, பிரிவை சந்திக்கின்றனர். பள்ளி, 'கேட்'டிற்குள் நுழையும்போது, தன் தாயிடமிருந்து, தன்னை, நிரந்தரமாக பிரித்து விடுவரோ... இனி அம்மாவை, பார்க்கவே முடியாதோ என்பது போன்ற எண்ணங்கள், பிஞ்சுகளின் மனதில் ஓடிக் கொண்டிருக்கும்.
அதோடு, புதிதான பள்ளிச் சூழலை எதிர்கொள்ள முடியாமல், பிஞ்சுகளின் நெஞ்சில், இனம் புரியாத பயம் பற்றிக் கொள்ளும். அதை அவர்களால் வார்த்தைகளாக வெளிப்படுத்த முடியாது என்பதால், 'அம்மா... அம்மா...' என்று மட்டும் அழும்.
பிள்ளைகளின் இந்த பயத்தை போக்க பெற்றோர், குறிப்பாக, இளம் அம்மாக்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்:
* அக்கம் பக்கம் வீட்டில் உள்ள, சக வயது குழந்தைகளுடன், தன் பிள்ளை விளையாடுவதை ஊக்கப்படுத்த வேண்டும். குழந்தைகளை அவ்வப்போது, பூங்கா, கடற்கரை, கோவில் போன்ற இடங்களுக்கு கூட்டிச் சென்று, வெளிச்சூழலை பழக்க வேண்டும்.
* விளையாடும்போது கீழே விழுவது, தண்ணீரை உடம்பில் ஊற்றிக் கொள்வது போன்ற குழந்தைகளின் சிறு சிறு செயல்களுக்கும், பதற்றப்படாமல், கண்டும் காணாமல் விட்டுவிட வேண்டும்.
* சமைப்பது, துணி துவைப்பது போன்ற பணிகளை மேற்கொள்ளும் போது, பிள்ளைகளின் கையில் விளையாட்டு பொருட்களை கொடுத்து, அவர்களை வீட்டின் வரவேற்பறையில் தனியாக விட்டு, பிரிவை பழக்க வேண்டும்.
* பிள்ளைகளை பள்ளியில் விடும்போது, உணர்ச்சி வசப்பட்டு அழும் தவறை, கண்டிப்பாக அம்மாக்கள் செய்யக் கூடாது.
* 'பள்ளி விட்டு வீட்டிற்கு வந்ததும், அம்மாவை பார்க்கலாம்' என்பதை திரும்ப திரும்ப சொல்ல வேண்டும்.
டாக்டர் சபீதா,
மனநல மருத்துவர், சென்னை, 94430 91559