உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது எப்படி?
உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது எப்படி?
PUBLISHED ON : ஏப் 19, 2020

ஆயுஷ் அமைச்சகத்தை சுட்டிக் காட்டி டாக்டர் ஸ்ரீராமுலு விளக்கம்
புதுச்சேரி: 'உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான வழிமுறைகளை, ஆயுஷ் அமைச்சகம் தெரிவித்துள்ளது' என, இந்தியமுறை மற்றும் ஹோமியோபதி இயக்குனரகத்தின் இயக்குனர் டாக்டர் ஸ்ரீராமுலு கூறினார்.
கொரோனா வைரஸ் தொற்று பரவி வரும் சூழ்நிலையில், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கும், சுவாச மண்டலத்தை ஆரோக்கியமாக பராமரிக்கவும் பல்வேறு வழிமுறைகளை தெரிவித்து, புதுச்சேரி சுகாதாரத் துறையில் செயல்படுகின்ற இந்தியமுறை மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குனரகத்துக்கு மத்திய ஆயுஷ் அமைச்சகம் மெயில் அனுப்பி உள்ளது.
இதுகுறித்து, இந்தியமுறை மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குனரகத்தின் இயக்குனர் டாக்டர் ஸ்ரீராமுலு கூறியதாவது:இன்றைய தேதியில் கோவிட் -19 தொற்றுக்கு மருந்து இல்லை. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய, முன்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வதே சிறந்தது. முன்தடுப்பு ஆரோக்கிய நடவடிக்கை மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்த பல்வேறு வழிமுறைகளை ஆயுஷ் அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. இந்த வழிமுறைகள் சுவாச மண்டல ஆரோக்கியத்துக்கு மிகவும் ஏற்றவையாகும்.
வெதுவெதுப்பான தண்ணீரை நாள் முழுவதும் குடிப்பது, தினசரி குறைந்தது 30 நிமிடங்களுக்கு யோகாசனம், பிரணாயாமம், தியானம் செய்வது. மஞ்சள், சீரகம், மல்லி, பூண்டு போன்றவற்றை பயன்படுத்தி சமைப்பது போன்ற பொதுவான பரிந்துரைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.துளசி, லவங்கப்பட்டை, கறுப்பு மிளகு, சுக்கு, உலர் திராட்சை கொண்டு தயாரிக்கப்பட்ட மூலிகை தேநீரை தினசரி ஒன்று அல்லது இரண்டு முறை குடிப்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான ஆயுர்வேத நடைமுறையாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேநீரில் வெல்லம் (நாட்டுச் சர்க்கரை), எலுமிச்சை சாறு சேர்க்கலாம்.மேலும், சூடான பாலில் சிறிதளவு மஞ்சள் துாள் கலந்து தினசரி ஒன்று அல்லது இரண்டு முறை குடிப்பதும் நோய் எதிர்ப்பு சக்திக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்த வழிமுறைகள் கொரோனாவிற்கான சிகிச்சை கிடையாது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது, சுவாச மண்டல ஆரோக்கியத்திற்கான வழிமுறைகளாகும். மேலும் விபரங்களை புதுச்சேரி சுகாதாரத் துறையின் இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு, டாக்டர் ஸ்ரீராமுலு கூறினார்.
