PUBLISHED ON : ஜன 19, 2014

எனது மகளின் கணவர் வயது 31. அவர் உடற்பரிசோதனை செய்தபோது, அவரது ரத்த அழுத்தத்தின் அளவு 210 / 120 என்ற அளவில் உள்ளது. அவருக்கு இந்த வயதில் சிகிச்சை தேவையா?
ரத்த அழுத்தம் 210 / 120 என்பது அதிகமான, அபாயகரமான அளவு. இதற்கு உடனடியாக சிகிச்சை பெறுவது அவசியம். இந்த வயதில் இவ்வளவு அதிகமாக ரத்தஅழுத்தம் இருந்தால், அது எதனால் ஏற்பட்டது என கண்டறிவதே, முதல் சிகிச்சை. ஏனெனில், ரத்த அழுத்தத்திற்கு இரண்டாம் நிலை காரணங்கள் பல உள்ளன. இதில் முக்கியமானவை சிறுநீரக கோளாறுகள், தமனியில் சுருக்கம் ஏற்படுவது, சுரப்பியல் கோளாறுகள் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. இதற்கு ரத்தம், சிறுநீர், மார்பக எக்ஸ்ரே, வயிற்று ஸ்கேன், இ.சி.ஜி., எக்கோ பரிசோதனை ஆகியவை தேவைப்படும். இவற்றின் முடிவுகளுக்கு ஏற்ப, உடனடியாக உயர்ரத்த அழுத்த மருந்துகளை துவக்கியே ஆக வேண்டும். ஒருவருக்கு எந்த வயதிலும், எந்த தருணத்திலும், ரத்த அழுத்தம் 140 / 90 என்ற அளவுக்கு கீழ் இருந்தாக வேண்டும்.
எனக்கு பைபாஸ் சர்ஜரி செய்து 2 மாதங்களாகிறது. நான் டூவீலர் ஓட்டலாமா?
பைபாஸ் சர்ஜரி என்பது இருதயத்தில் உள்ள ரத்தநாள அடைப்பை, நெஞ்சில் இருந்தோ, கால், கைகளில் இருந்தோ ரத்தநாளங்களை எடுத்து இருதயத்தில் பொருத்தும் அறுவை சிகிச்சையாகும். பொதுவாக பைபாஸ் சர்ஜரி செய்து, மூன்று மாதங்கள் கழித்து ரத்தம், சிறுநீர், மார்பக எக்ஸ்ரே, எக்கோ, டிரெட்மில் போன்ற பரிசோதனைகள் செய்யப்படும். இந்த அனைத்து பரிசோதனைகள் முடிவுகளும் நார்மலாக இருந்தால், நீங்கள் தாராளமாக டூவீலர் ஓட்டலாம். டூவீலரை பொறுத்தவரை, அது 'கிக் ஸ்டார்ட்டராக' இல்லாமல், 'செல்ப் ஸ்டார்ட்டரை' உபயோகிப்பது நல்லது.
எனக்கு இரு ஆண்டுகளாக சர்க்கரை நோய் உள்ளது. இதற்காக 3 வகை மருந்துகளை எடுத்து வருகிறேன். தினமும் நடைப்பயிற்சி செய்வதால், ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் உள்ளது. இருப்பினும், எனது உடல் எடை அதிகரித்துக் கொண்டே போகிறது. நான் என்ன செய்ய வேண்டும்?
சர்க்கரை நோயாளிகளைப் பொறுத்தவரை சரியான உணவுப் பழக்கம், தினசரி நடை பயிற்சி முதற்கட்ட சிகிச்சையாகும். சர்க்கரை நோய்க்கு அளிக்கப்படும் மருந்துகளில் சில, உடல் எடையை அதிகரிக்கும் தன்மை படைத்தவை. எனவே, உடனடியாக நீங்கள் டாக்டரை அணுகி, சர்க்கரை நோய் மருந்துகளை மாற்றி அமைத்தால், இதற்கு தீர்வு காணலாம். சர்க்கரை நோயாளிகள், தங்கள் எடையை உடலுக்கு ஏற்ப பராமரித்துக் கொள்வது அவசியம். எனவே, இதை அலட்சியப்படுத்தாமல், உடனடியாக உங்கள் டாக்டரை அணுகி ஆலோசனை பெறவும்.
- டாக்டர் சி.விவேக்போஸ்,
மதுரை. 0452 - 233 7344

