PUBLISHED ON : ஜன 26, 2014

மீசையில், 'டை' அடிக்கும்போது, அந்த ரசாயனத்தை, நீங்கள் சுவாசிக்க நேர்வதால், தும்மல், மூச்சுத் திணறல் போன்ற, பல பிரச்னைகள் உண்டாகலாம். அது மட்டுமின்றி, அந்த ரசாயனம், உடலினுள் செல்வதால் கூட, பிரச்னைகள் உண்டாகலாம்
* நான் மீசைக்கு டை அடிக்கிறேன். டை அடித்த சிறிது நேரத்தில், தும்மல் தொடர்ந்து வந்து, மூச்சுத் திணறல் உண்டாகிறது. இது எதனால்? இதற்கு என்ன செய்வது?
'டை' யில் உள்ள ரசாயனம், சிலருக்கு, அலர்ஜியை ஏற்படுத்தும். மீசையில், 'டை' அடிக்கும்போது, அந்த ரசாயனத்தை, நீங்கள் சுவாசிக்க நேர்வதால், தும்மல், மூச்சுத் திணறல் போன்ற, பல பிரச்னைகள் உண்டாகலாம். அது மட்டுமின்றி, அந்த ரசாயனம், உடலினுள் செல்வதால் கூட, பிரச்னைகள் உண்டாகலாம்.
இந்த, 'அலர்ஜி' சிறிய அளவில் இருந்தால், 'செட்ரிசின்' மருந்தை எடுத்துக் கொள்ளலாம். இப்போது, 'அம்மோனியா' கலக்காத, 'டை' கிடைக்கிறது. அதை உபயோகியுங்கள். இல்லையெனில் இவற்றை நிறுத்திவிட்டு, இயற்கை, 'டை'யை உபயோகிக்கவும்.
* எனக்கு காய்ச்சல் இருந்தது. டாக்டரிடம் காண்பித்தபோது, 'வைரஸ் காய்ச்சல்' எனக் கூறி, மருந்து கொடுத்தார். மூன்று வாரங்கள் ஆன பின்னும், இருமல் மட்டும் தொடர்ந்து இருக்கிறது. நான் என்ன செய்வது?
வைரஸ் மற்றும் பாக்டீரியா போன்ற நோய்க் கிருமிகள், காய்ச்சலை உண்டு பண்ணுகின்றன. இவை, நுரையீரலையும் பாதிப்பதால், இருமல் உண்டாகிறது. வைரஸ் நோய்த் தொற்றால் உண்டாகும் தொந்தரவுகள், ஆறு வாரங்கள் வரை நம்மை பாதிக்கும். இருமல் தொந்தரவு, வைரஸ் நோய் தொற்றினால் தான் ஏற்பட்டது என்றால், அதற்கு தனியாக, மருந்துகள் எடுக்கத் தேவையில்லை. இருமல் அதிகமாக இருந்தால், இருமலை நிறுத்தும் மருந்து மட்டும் எடுத்தால் போதுமானது.
* என் வயது, 24; எடை, 110 கிலோ. 'ஸ்லீப் அப்னியா' உள்ளது. இரவு தூங்கும்போது, தினமும், 'சி பாப்' மிஷின் உபயோகிக்கிறேன். இன்னும் சில ஆண்டுகளில் திருமணம் செய்ய உள்ளேன். நான் இந்த மிஷினின் உபயோகத்தைத் தவிர்க்க வாய்ப்பு உள்ளதா?
உங்கள் எடை தான், உங்களின் பிரச்னைக்கான முக்கிய காரணம். முதலில், உங்கள் எடையை குறையுங்கள். எடையை குறைக்கிறேன் என்று கூறி, பட்டினியாக இருப்பது போன்ற, அனைவரும் செய்யும் தவறை செய்யாதீர்கள். கொழுப்புச் சத்து குறைவாக, நார்ச்சத்து அதிகமாக உள்ள உணவை, சரியான அளவில், குறிப்பிட்ட நேரத்திற்குள் எடுத்துக் கொள்வது தான், சிறந்த உணவுக் கட்டுப்பாடு முறை. தினமும், முறையான உடற்பயிற்சியும் செய்யுங்கள். மாதத்திற்கு ஒரு கிலோ குறைந்தால் கூட, ஐந்து ஆண்டுக்குள், நீங்கள், 60 கிலோ குறைக்க முடியும். சரியான உணவு மற்றும் முறையான உடற்பயிற்சியினால், இது சாத்தியம். அப்படி, உங்கள் எடை குறையும்போது, உங்கள் நுரையீரல் மற்றும் மூச்சுக் குழாயில் உள்ள, தேவையற்ற கொழுப்பும் கரைந்துவிடும்; குறட்டை தொந்தரவும் இருக்காது. மெஷின் உபயோகிக்க வேண்டிய அவசியம் இருக்காது. திருமணம் செய்வதிலும் பிரச்னை இருக்காது.
டாக்டர் எம். பழனியப்பன்,
மதுரை.

