'உடல் எடை அதிகரிப்பு, மூட்டு வலி குறைக்க தீர்வு உண்டு'
'உடல் எடை அதிகரிப்பு, மூட்டு வலி குறைக்க தீர்வு உண்டு'
PUBLISHED ON : ஜன 26, 2014

* திருமணத்தின் போது ஒல்லியாக இருந்த என் மனைவி, குழந்தை பேறுக்குப் பின், பருமனாகி விட்டார். சில நாட்களாக மூட்டுவலி, படிகள் ஏறுவது, சம்மணமிடுவது போன்ற செயல்பாடுகளால் சிரமப்படுகிறார். உடல் பருமனால், இப்பிரச்னைகள் வருமா?
மூட்டுவலி வர, பல காரணங்கள் உள்ளன. உடல் பருமனாக இருப்பவர்களுக்கு, மூட்டுவலி வர வாய்ப்பு அதிகம். உடற்பயிற்சி செய்வது, சரிவிகித உணவு, காய்கறிகள், கீரை வகைகள், நார்ச்சத்து உள்ள உணவு உண்பது, கொழுப்பு பதார்த்தங்களை தவிர்ப்பது, எப்போதும் சுறுசுறுப்புடன் செயல்படுவது போன்றவற்றை கடைபிடித்தால், உடல், பருமன் ஆவதையும் தடுக்கலாம்; மூட்டு வலியையும் குறைக்கலாம்.
* என் வயது, 24. தோள்மூட்டு விலகி இருக்கிறது. மூட்டு நுண்துளை சிகிச்சை செய்தால், பிரச்னை தீரும் என, டாக்டர் கூறியுள்ளார். மூட்டு நுண்துளை சிகிச்சை செய்து கொண்டால் கிருமிகள் தொற்றும் அபாயம் உள்ளதா?
எந்த அறுவை சிகிச்சையிலும், கிருமிகள் தொற்றும் அபாயம், சிறிதளவாவது உண்டு. மூட்டு நுண்துளை சிகிச்சை சிறுதுவாரம் வழியாக செய்யப்படுகிறது.
சிகிச்சையின் போது, தொடர்ச்சியாக, 'சலைன்' உபயோகப்படுத்தப்படும். இதன் காரணமாக, மூட்டு நுண்துளை சிகிச்சையில், மற்ற எந்தவித சிகிச்சை முறையைக் காட்டிலும், கிருமிகள் தொற்றும் அபாயம், மிக மிகக் குறைவு.
* இரு ஆண்டுகளாக, மூட்டுவலியால் அவதிப்படும் நான், மூட்டுமாற்று சிகிச்சை செய்ய உள்ளேன். இதற்கு நான், ஆபரேஷன் செய்யலாமா?
மூட்டுமாற்று சிகிச்சை செய்து, முழுமையாக குணமடைய, 'பிசியோதெரபி' மற்றும் டாக்டரின் கண்காணிப்பு அவசியம். நோயின் தீவிரம் மற்றும் மூட்டு மாற்று சிகிச்சையின் தன்மையை பொறுத்து, வெளிநோயாளி முறையில், கண்காணிப்பு அவசியம். மூட்டு மாற்று சிகிச்சையை பொறுத்தவரை, அருகில் உள்ள மருத்துவமனையில், போதிய வசதிகள் மற்றும் தொழில்நுட்பம் இருந்தால், அங்கு செய்வது மேல்.
டாக்டர் கே.என்.சுப்ரமணியன்,
மதுரை.

