PUBLISHED ON : செப் 15, 2013
எனது வயது 42. கீழே விழுந்ததில் கணுக்கால் எலும்பு முறிந்து, அதன் வடிவமே மாறிவிட்டது. வைத்திய சாலையில் எனது காலுக்கு கட்டுப்போட்டனர். கட்டுப் பிரிக்கப்பட்டபோது, தோல்பிரிந்து கொப்பளமாகிவிட்டது. இதற்கு சிகிச்சை உண்டா?
கணுக்கால் எலும்பு முறிந்தால், அதனை சரிசெய்ய எக்ஸ்ரே வசதியுடன் சீரமைக்கப்பட்டு இருக்க வேண்டும். சரியான முறையில் சிகிச்சை எடுத்துக் கொள்ளாவிட்டால், தோலில் வீக்கம், பிரிதல், கொப்பளம் ஆகியவை வந்துவிடும். உங்களுக்கு ஏற்பட்டு இருப்பது விஞ்ஞான ரீதியில்லாமல் கொடுக்கப்பட்ட சிகிச்சை முறையின் தீங்கு விளைவுகள் ஆகும். இப்போது நீங்கள் உடனடியாக எலும்பு மூட்டு மருத்துவரை சந்தித்து சரியான சிகிச்சையை மேற்கொண்டால் குணமாகும். ஆயினும் ஆரம்ப காலத்திலே நன்முறையில் சிகிச்சை அளித்தால் கிடைக்கும் பயனைவிட, தாமதமாக அளிக்கப்படும் சிகிச்சையின் பயன் குறைவே.
எனது வயது 33. இதுவரை 32 தடவைகள் தோள் மூட்டு விலகியுள்ளது. மருத்துவர் இதை சரிசெய்ய நவீன சிகிச்சை முறையான 'ரெம்ப்ளீசேஜ்' செய்ய வேண்டும் என்றார். அது என்ன?
ரெம்பளீசேஜ் என்பது மூட்டு நுண்துளை சிகிச்சையில் செய்யப்படும் ஒருநவீன சிகிச்சை முறை. தோள்மூட்டு விலக்குவதற்கு காரணம், தோள்மூட்டின் கிண்ணம் பகுதியில் உள்ள குருத்தெலும்பில், கிழியல் ஏற்படுவது மற்றும் பந்து பகுதியின் பின்புறத்தில் ஏற்படும் பள்ளம் போன்றவையே. இந்தப் பள்ளம் பகுதியை அதன் மேல் உள்ள தசையை வைத்து அடைப்பதைத்தான் ரெம்பளீசேஜ் என்று கூறுவதுண்டு. இதை கண்டிப்பாக நுண்துளை சிகிச்சையில் செய்ய இயலும். இதன் வெற்றி வாய்ப்பு அதிகமே.
78 வயதான நான், மூட்டுவலியால் அவதிப்படுகிறேன். நான்கு ஆண்டுகளுக்கு முன் பைபாஸ் சர்ஜரி செய்து கொண்டேன். எனது இடது காலில் இருந்து ரத்தநாளம் எடுக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில், மூட்டு மாற்று சிகிச்சை செய்யலாமா?
உங்கள் வலியை போக்க மூட்டுமாற்று சிகிச்சை சாத்தியமே. பொதுவாக பை-பாஸ் சர்ஜரி செய்தபின், உங்கள் இருதயத்தின் ரத்தப்போக்கு நன்றாகிவிடும். எனவே இருதயத்தைப் பொறுத்தவரை பிரச்னைகள் வரும் வாய்ப்பு குறைவு. மூட்டுமாற்று சிகிச்சைக்கு முன், இருதய டாக்டரின் பரிசோதனையை எடுத்துக் கொள்ள வேண்டும். நம் காலின் மேற்பகுதியில் மற்றும் ஆழத்தில் ரத்தநாளங்கள் உண்டு. பை-பாஸ் சர்ஜரி செய்ய எடுக்கப்படும் ரத்தநாளங்கள் காலின் மேற்பரப்பில் உள்ளவையே. ஆதலால் மூட்டு மாற்று சிகிச்சை செய்வதால் எந்த பெரிய தீயவிளைவுகளும் ஏற்படாது.
- டாக்டர் கே.என்.சுப்ரமணியன்,
மதுரை. 93442-46436
