5 ஆண்டுகள் மாத்திரை சாப்பிட்டால் மூட்டு அழற்சி முற்றிலும் குணமாகும்
5 ஆண்டுகள் மாத்திரை சாப்பிட்டால் மூட்டு அழற்சி முற்றிலும் குணமாகும்
PUBLISHED ON : அக் 16, 2019

'ஆர்த்தரடீஸ்' மன அழுத்தத்தை உண்டு பண்ணுமா?
'ஆர்த்தரடீஸ்' எனப்படும், மூட்டு அழற்சி பிரச்னை உள்ளவர்கள், இயல்பாக எந்த வேலையையும் செய்ய முடியாது. கைகளில் வலிமையே இருக்காது. சிறு வேலைகளுக்கும், மற்றவர்களை சார்ந்து இருக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படும். இதனால், மன அழுத்த பாதிப்பு அதிகமாக இருக்கும்.
பிரச்னைகளின் தன்மை எப்படி இருக்கும்?
காலையில் எழுந்ததும், கைகள் விறைப்பு தன்மையுடன், மடக்கவே முடியாமல் இருக்கும்; நிற்பதில் சிரமம்; முழங்கால், கணுக்கால், இடுப்பு என, எல்லா மூட்டுக்களிலும் வலி இருக்கும்.தாங்களாகவே எழுந்து, கதவை திறப்பது, பால் பாக்கெட்டை எடுப்பது, செய்தித்தாளை பிரித்து படிப்பது என, தினசரி வேலைகள் அனைத்திலும் சிரமம் ஏற்படும். பால் பாக்கெட்டை பிடித்து, கத்திரிக்கோலால் வெட்ட முடியாது; காபி டப்பாவை கூட திறக்க முடியாது.
ஆர்த்தரடீஸ், குணப்படுத்தக் கூடியதா?
'மூட்டு அழற்சி என்பது, நோயின் வெளிப்பாடு; இது, குணப்படுத்தவே முடியாதது; உடலில், பல பாதிப்புகளை ஏற்படுத்தி விடும்; அலோபதி மருந்துகள் சாப்பிட்டால், சிறுநீரகங்கள் பாதிக்கப்படும்; மூட்டுகளில் வலி என, டாக்டரிடம் சென்றாலே, மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்யச் சொல்வர்' என்ற, மக்களின் தவறான புரிதல்களால், வலி நிவாரணிகளை மட்டுமே பலர் பயன்படுத்துகின்றனர்.வலியை குறைப்பதற்கு மட்டுமல்ல, பிரச்னையை முற்றிலும் சரி செய்வதற்கும், பல புதிய மருந்துகள் வந்து விட்டன. இதை சாப்பிடுவதால், நோயே இல்லாமல் செய்து விடலாம். சர்க்கரை கோளாறு என்று உறுதியானால், வாழ்நாள் முழுவதும், அதற்கான மாத்திரையை சாப்பிட வேண்டி இருக்கும். ஆனால், மூட்டு அழற்சி அப்படி இல்லை. அதிகபட்சம், ஐந்து ஆண்டுகள் மாத்திரை சாப்பிட்டால், தானாகவே சரியாகி விடக்கூடிய சாத்தியங்கள் உள்ளன. அரசு மருத்துவமனையில், இப்பிரச்னைக்கு நவீன, உலகத் தரம் வாய்ந்த சிகிச்சை உள்ளது.
பிரச்னைக்கான காரணம் என்ன?
சர்க்கரை கோளாறு போன்றே, மூட்டு அழற்சியும் ஒரு குறைபாடு தான். நம் உடலில் இருக்கும் வெள்ளை அணுக்கள், மூட்டுக்களில் உள்ள திசுக்களையே அழிப்பதால் வரும் பிரச்னை இது. பாதுகாப்பு தரக்கூடிய செல்கள், பாதுகாக்கப்பட வேண்டிய திசுக்களை அழிப்பதால் வருகிறது.இது, மரபியல் மற்றும் சுற்றுப்புறச் சூழல் மாசால் வரும் பிரச்னை என்பதால், பொருளாதாரம் மற்றும் சமூக ஏற்றத் தாழ்வுகள் இல்லாமல், யாரை வேண்டுமானாலும் பாதிக்கலாம்; வயது வித்தியாசமும் கிடையாது.
மூட்டுக்களில் என்ன மாதிரி மாற்றங்கள் ஏற்படும்?
மூட்டுக்களில், 'சைனோவியல்' என்ற ஜவ்வு இருக்கும். மெல்லியதாக, பளபளவென்று மின்னக் கூடிய, மூட்டுக்கள் இயங்க வசதியாக, திரவபொருளை உற்பத்தி செய்யக் கூடியது.சைனோவியல் ஜவ்வு கெட்டுப் போவதால், மூட்டுக்களின் இயக்கம் குறைந்து, தடித்து, வீங்கி, மூட்டுக்களில் வலி வரும்; எலும்பை அரிக்கும்; எலும்பு இணைப்பில் உள்ள குறுத்தெலும்பை பாதிக்கும்.
டாக்டர் டி.என்.தமிழ்செல்வன், தலைவர்,
மூட்டு, முடக்கவியல் துறை,
ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவ கல்லுாரி மருத்துவமனை,
சென்னை.
