PUBLISHED ON : அக் 14, 2019

குளிர்க்காலத்தில் தோல் வறட்சி எதனால் ஏற்படுகிறது?
கோடை முடிந்து, குளிர்க்காலம் துவங்கும் போது, தோலில் ஏற்படும் வறட்சி என்பது பொதுவான விஷயம். குளிர்க்காலத்தில், நமக்கு வியர்க்காது; தண்ணீரும் குறைவாகவே குடிப்போம். இதன் காரணமாக, தோலின் ஈரப்பதம் குறைகிறது. இதனால், குளிர்க்காலத்தில் தோல் வறட்சி அதிகமாக இருக்கும்.
தோல் வறட்சிக்கு வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா?
வறட்சியாக இருக்கும் தோல், வெளிக் காரணிகளால் எளிதில் பாதிக்கக் கூடியது. வெளியில் இருக்கும் துாசி, துகள்கள், செடி, கொடிகளில் இருந்து பரவும் மகரந்த துாள்கள், தோலில் படும்போது, அரிப்பு, எரிச்சல், வியர்க்குரு போன்ற சிறிய கொப்புளங்கள் தோன்றும்.மற்ற பருவநிலையை ஒப்பிடும்போது, மகரந்த துகள்கள், குளிர்க்காலத்தில் தான், காற்றில் அதிகம் பரவுகின்றன. அதன் தன்மையும், வழக்கத்தை காட்டிலும் மாறுபட்டதாக இருக்கும். தோல் வறட்சியை தவிர, இந்த பருவத்தில் வரும் இன்னொரு பிரச்னை ஒவ்வாமை. தோல் ஒவ்வாமைக்கு, உணவு காரணம் இல்லை என்றாலும், மீன், பதப்படுத்தப்பட்ட உணவுகள் சாப்பிடுவதால், நிறைய பேர் பாதிக்கப்படுகின்றனர்.
தோல் வறட்சியை தவிர்க்க செய்ய வேண்டியவை?
வறட்சியான தோலை தவிர்க்க, தினமும் மூன்று - நான்கு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். 'ஏசி' அறையில் இருப்பவர்கள், போதுமான அளவு நீர் குடிப்பதில்லை. நீர்ச்சத்து அதிகம் உள்ள பழங்கள், காய்கறிகளை நிறைய சேர்த்துக் கொள்ள வேண்டும். தோலின் தன்மைக்கு ஏற்ற, ஈரப்பதத்தை தக்க வைக்கும் கிரீம், லோஷன்களை பயன்படுத்த வேண்டும். குளித்து முடித்ததும், ஈரமான தோலில் தடவ வேண்டியது முக்கியம். அப்போது தான் தோலின் ஈரப்பதம் நன்றாக இருக்கும்.
தலைமுடி வறட்சியை போக்க என்ன செய்யலாம்?
தோல் போலவே, தலைமுடி பராமரிப்பும் முக்கியம். குளிர்க்காலத்தில், தலையிலும் அதிகம் வியர்க்காது என்பதால், அடிக்கடி தலைக்கு குளிக்க மாட்டோம். இதனாலேயே தலைமுடி வறட்சியாகி விடும். தலையின் மேல்புறத் தோலில் வறட்சி ஏற்பட்டு, பொடுகு, அரிப்பு, எரிச்சல் போன்ற பிரச்னைகள் ஏற்படும். வாரத்திற்கு ஒரு முறையாவது, தலையின் மேல்புறத்தில், தலைமுடியின் வேர்க்கால்களில் எண்ணெய் தடவி, நன்கு மசாஜ் செய்ய வேண்டும். குறைந்தது, 30 நிமிடங்கள் வைத்திருந்து கழுவ வேண்டும்.தலையில் எண்ணெய் தடவி, இரவு முழுதும் அப்படியே துாங்குவது தவறு. அதிகபட்சம் ஒரு மணி நேரத்திற்கு மேல், எண்ணெய் மசாஜ் செய்த தலை, தோலுடன் இருப்பதை தவிர்க்க வேண்டும்.வாரத்தில் மூன்று முறை, சாதாரணமாக தலைக்கு குளிக்க வேண்டியது அவசியம்.தோலை போலவே, தலைமுடியும் துாசி, மாசினால் பாதிக்கப்படும் என்பதால், வெளியில் செல்லும் வேளைகளில், பருத்தி துணியால், தலையை கட்டிக்கொள்ள வேண்டும்.
கோடையைப் போல, இப்போதும், 'சன் ஸ்கிரீன்' பயன்படுத்தலாமா?
தோல் வறட்சியாக இருப்பதால், 'சன் ஸ்கிரீன் லோஷன்' பயன்படுத்துவதை எந்த காலத்திலும் தவிர்க்கக் கூடாது. சூரியனில் இருந்து, நேரடியாக தோலில் படும் புற ஊதா கதிர்களாலேயே, தோலில் பாதிப்பு ஏற்படுகிறது. கோடைக் காலத்தில் மட்டும் அல்லாமல், எல்லா காலத்திலும், சன் ஸ்கிரீன் லோஷன்களை பயன்படுத்த வேண்டும். வியர்வை சுரப்பிகளை இதுபோன்றகிரீம்கள் மூடிக் கொள்ளும், என்ற அச்சம் உள்ளது. நம்முடைய தோலின் தன்மைக்கு ஏற்ற லோஷன்களை பயன்படுத்தினால், எந்த பிரச்னையும் வராது.தோலின் தன்மை என்ன என்பதை, தோல் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று, தெரிந்து கொள்ள வேண்டும்.
டாக்டர் ஷர்மிதா குமார்
தோல் சிறப்பு மருத்துவர்,
சிம்ஸ், சென்னை
044 - 2000 2001
