PUBLISHED ON : அக் 18, 2019

'ஆர்ட் தெரபி' என்றால் என்ன?
மன
அழுத்தம், பதட்டம் போன்ற மனநல பிரச்னைகளுக்கு, அதற்கான சிகிச்சையோடு
சேர்த்து தரப்படும், தெரபி இது. ஓவியம், வண்ணம் தீட்டுவது என, ஏதாவது ஒரு
கலையில், அவர்களை ஈடுபடச் செய்வது.'மனநல பிரச்னைகளுக்கு இது தான் தீர்வு;
பிரச்னை இருப்ப வர்களுக்கு எல்லாம், ஆர்ட் தெரபி செய்தால் சரியாகி விடும்'
எனச் சொல்ல முடியாது. இது ஒரு, 'சப்போர்டிங் சிஸ்டம்' அவ்வளவு தான்.
இத்தகைய தெரபியை பயன்படுத்துவது ஏன்?
மன
அழுத்தம் உட்பட, ஏதோ ஒரு மன நல பாதிப்பு இருப்பவர்களிடம், மனநல ஆலோசகரோ,
மருத்துவரோ பேசும் போது, 100 சதவீதம் உண்மையை, யாராலும் சொல்ல முடியாது. பல
நேரங்களில், தீர்க்க முடியாமல், ஆழ் மனதில் புரையோடியிருக்கும்
பிரச்னைகளை, வெளியில் சொல்ல முடியாமல் போகலாம்.
எல்லா விஷயங்களையும்
பேச கஷ்டப்படலாம். இதனால், ஆழ் மனதில் இருக்கும் சிக்கல்கள், வெளியில்
வராமலேயே போகலாம்.அப்படிப்பட்டவர் களுக்கு, மனதின் உணர்வுகளை
வெளிப்படுத்தும் வடிகாலாக, இது இருக்கிறது. வரைவதற்கு அல்லது 'பெயின்டிங்'
செய்வதற்கு, தேர்வு செய்யும் நிறங்கள், வரையும் கருப் பொருள் இவற்றைக்
கொண்டே, தேர்ந்த மனநல மருத்துவரால், பிரச்னை இருப்பவர்களின் ஆழ் மனதில்
என்ன இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள முடியும். பிரச்னைக்கு வழி
காட்டலாகவும், உதவியாகவும் இருக்கும்.
உதாரணத்துடன் விளக்க முடியுமா?
மனநலம்
பாதிக்கப்பட்ட குழந்தையால், மனதில் நினைப்பதை எல்லாம், வெளியில் சொல்லி
விட முடியாது. சரியான வார்த்தைகளை தேர்வு செய்து, உணர்வுகளை
வெளிப்படுத்தவும், குழந்தைக்கு தெரியாது. 'உன் குடும்பத்தை வரைந்து கொடு'
என, குழந்தையிடம் சொல்லும் போது, உடனே, அம்மா, அப்பாவின் அரவணைப்பில்
இருக்கும் குட்டி குழந்தை, தனியாக நிற்கும் வளர்ந்த குழந்தை என வரைந்தால்,
தன்னை தனிமையாக உணர்கிறது என்பதை, எளிதாக புரிந்து கொள்ள முடியும்.
அதே
குழந்தையிடம் பேசும் போது, 'உனக்கு யார் பிடிக்கும்?' என்று கேட்டால்,
அப்பா, அப்பா அல்லது யாரோ ஒருவரைச் சொல்லும். வரையும் போது, அதன் மனதில்
இருக்கும் உண்மை எளிதாக வெளிப்படும்.
பிரத்யேக பயிற்சி தரப்படுமா?
மனநல
பிரச்னை இருப்பவர்களுடன் பேசும் போது, அவர்களின் விருப்பு, வெறுப்பு களை
கேட்டு, ஏதோ ஒரு கலையில் ஆர்வம் இருப்பது தெரிந்தால், அதில் ஈடுபடச்
சொல்வது மட்டுமே, டாக்டரின் பணி. பயிற்சி தருவதற்கு, 'ஆர்ட் தெரபிஸ்ட்'
இருக்கின்றனர்.பிரச்னையிலிருந்து வெளியில் வர பயன்படும், ஆர்ட்தெரபி பல
நேரங்களில், அவர்களின் பொழுதுபோக்காக மாறி விடும். பலர் இதையே, தங்களின்
விருப்பமான துறையாக எடுத்து, முழு நேர கலைஞர்களாக மாறி இருக்கின்றனர்.
உணர்வுகளை வெளிப்படுத்தக் கூடிய, கற்பனை வளத்தை வெளிக்கொணரக் கூடிய எந்த கலையாக இருந்தாலும், ஆர்வத்தை பொறுத்து செய்கிறோம்.
அனைவருக்குமே, 'ஆர்ட் தெரபி' பலன் தருமா?
அப்படி
சொல்ல முடியாது... பிரச்னை இருப்பவர்கள், முழுமையாக ஒத்துழைப்பு
கொடுத்தால் மட்டுமே, இதைச் செயல்படுத்த முடியும். அடிக்கடி மனநிலை மாறுவது
மற்றும் பதட்டம் இருப்பவர்களுக்கு, இது மிகவும் உதவியாக இருக்கும். ஓவியம்,
இசை, நடனம் என, கலைகளில் ஆர்வமே இல்லாதவர்களும் உள்ளனர். அவர்களுக்கு,
பலன் தராது.
