நீரிழிவால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு இன்சுலினின் அவசியம் புரிகிறது
நீரிழிவால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு இன்சுலினின் அவசியம் புரிகிறது
PUBLISHED ON : அக் 17, 2019

நீரிழிவு கோளாறு, குழந்தைகளை அதிகம் பாதிக்கிறதா?
நீரிழிவு பிரச்னையில், டைப் - 1, டைப் - 2 என்ற இரு வகைகள் உள்ளன. இன்சுலின் உற்பத்தி செய்வதை, கணையம் முழுமையாக நிறுத்தி விடுவதால் வரும், டைப் - 1 வகை, குழந்தைகளை பாதிக்கும். இதற்கு தீர்வு, ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க, வாழ்க்கை முழுவதும் இன்சுலின் ஊசி போடுவது தான்.
எவ்வளவு ஊசி ஒரு நாளைக்கு தேவைப்படும்?
ஒரு நாளில், 4 - 10 யூனிட் வரை, தேவைக்கு ஏற்ப பல முறை தர வேண்டும். சமீப ஆண்டுகளில், நவீன மருத்துவத்தில், காலையில் எழுந்ததும் அல்லது இரவில் துாங்கச் செல்வதற்கு முன், 'பேசில் போலர்ஸ் டோஸ்' என்று சொல்லப்படும், எல்லா நேரமும் குறைந்தபட்சம்இன்சுலின் உடலில் இருப்பதை உறுதி செய்யும் ஊசி ஒன்று போட வேண்டும். இது, ரத்த சர்க்கரையின் அளவு அதிகரிக்காமல் செய்யும்.இது தவிர, உணவு உண்டதும் தரப்படும் இன்சுலின் ஊசி, உணவால் அதிகரிக்கும் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும். டைப் - 1 நீரிழிவால் பாதிக்கப்பட்ட, 75 சதவீதம் குழந்தைகளுக்கு, ஒரு நாளில் பலமுறை, இன்சுலின் ஊசியின் தேவை இருக்கிறது.
குழந்தைகளுக்கு, நீரிழிவு கோளாறு வர என்ன காரணம்?
கணையத்தில் இன்சுலினை சுரக்கும், 'பீட்டா செல்'கள், வைரஸ் தொற்றால் முழுமையாக அழிந்து விடுவதால் வரும் பிரச்னை இது. கிருமிகளை அழிக்கும், 'ஆன்டி பாடீஸ்' எனப்படும் எதிர்ப்பணுக்கள் பல நேரங்களில், பீட்டா செல்களையும் சேர்த்து அழித்து விடுகின்றன. 10 - 12 வயதிற்குள், இப்பிரச்னை வருவதற்கான அபாயம் அதிகம் உள்ளது. டைப் - 1 பாதித்த குழந்தைகளின் வாரிசுகளுக்கு, இதே பிரச்னை வருவதில்லை. பச்சிளம் குழந்தைகளுக்கும் மிக அரிதாக, டைப் - 1 நீரிழிவு வருகிறது.
அறிகுறிகள் என்ன?
காரணம் இல்லாமல், உடல் எடை குறைவது, அடிக்கடி சிறுநீர் கழிப்பது, அதிகமாக தண்ணிர் குடிப்பது, அளவிற்கு அதிகமாக சாப்பிடுவது, பலவீனமாக இருப்பது.நம்மைப் போன்ற வெப்ப மண்டல நாடுகளில், வைரஸ் பாதிப்பு மிகவும் குறைவு என்பதால், ஐரோப்பிய நாடுகளை ஒப்பிடும் போது, நம் குழந்தைகளுக்கு, இப்பிரச்னை வருவது மிகவும் குறைவாகவே இருந்தது. நகரமயமாவது அதிகரித்து விட்ட நிலையில், நெருக்கமான இடங்களில் வாழ்கிறோம். பிரச்னையும் அதிகமாகி விட்டது.
இன்சுலின் ஊசியால், மனதளவில் பாதிப்பு ஏற்படுமா?
குழந்தைக்கு, டைப் - 1 நீரிழிவு என்று உறுதியானதும், தங்கள் குழந்தை, வாழ்க்கை முழுவதும் இன்சுலின் ஊசியை சார்ந்திருக்க வேண்டும் என்ற நிஜத்தை ஒத்துக் கொள்வது, பெற்றோருக்கு சிரமம். குற்ற உணர்வோடு, கர்ப்ப காலத்தில் ஏதாவது தவறு செய்து விட்டோமோ போன்ற பல கேள்விகளை கேட்பர்.
இப்பிரச்னையை, குழந்தைகள் எப்படி எதிர் கொள்கின்றனர்?
ஒவ்வொரு வாரமும், டைப் - 1 நீரிழிவு பாதித்த இரு புதிய குழந்தைகளை பார்க்கிறேன். குழந்தைகளைப் பொறுத்தவரை, நாம் செல்வதை எளிதில் புரிந்து கொள்கின்றனர். ஒரு சில குழந்தைகளுக்கு, வளர் இளம் பருவத்தை அடையும் போது, தங்களையொத்த பிற குழந்தைகளை ஒப்பிட்டு, 'எனக்கு மட்டும் ஏன்' என்ற குழப்பம் வரும். சில குழந்தைகளுக்கு, தங்கள் பிரச்னை மற்றும் இன்சுலின் போட வேண்டியதன் அவசியம் புரியும். வலி இல்லாமல் போடும் இன்சுலின் ஊசிகளும் வந்து விட்டன.தினசரி நடவடிக்கையில், தங்களுக்கு பிரச்னை எதுவும் இல்லை என்பது தெரிந்தாலும், குழந்தைகள் இயல்பாக இருப்பதில்லை. எல்லா குழந்தைகளும், விரும்பியதை சாப்பிடும் போது, தன்னால் மட்டும் ஏன் முடியவில்லை என்ற மன அழுத்தம் அவர்களுக்கு வருகிறது. முறையான மன நல ஆலோசனையால், மன அழுத்தத்தில் இருந்து வெளியில் கொண்டு வர முடியும்.
டாக்டர் ஏ.ராமச்சந்திரன்
நீரிழிவு கோளாறு சிறப்பு மருத்துவர்,
சென்னை
044 - 2858 2003
