PUBLISHED ON : மே 15, 2022

சர்வதேச அளவில், 10ல் ஒரு பெண்ணுக்கு, 'எண்டோமெட்ரியோசிஸ்' பிரச்னை இருக்கிறது. நம் நாட்டிலும் இளம் பெண்கள் அதிகம் இதனால் பாதிக்கப்படுகின்றனர். சமீப ஆண்டுகளில், இதனால் பாதிக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. மரபியல் உட்பட பல காரணங்களை கூறினாலும், அறிவியல்பூர்வமான காரணம் தெரியவில்லை.
கர்ப்பப்பையில் மூன்று அடுக்குகள் உள்ளன. அதில், கர்ப்பப்பையின் உட்புறத்தில், ஸ்பாஞ்ச் போன்ற அடுக்கிலிருந்து தான் ஒவ்வொரு மாதமும் சதையும், ரத்தமுமாக முட்டை உருவாகி, முதிர்ந்து, உடைந்து, மாதவிடாயாக வெளி வரும். சமயங்களில், உட்புற அடுக்கில் உள்ள திசுக்கள், உறைந்து, கட்டியாகி, அப்படியே தங்கி விடும்.
இதுபோன்ற கட்டிகள், உட்புற அடுக்கில் மட்டுமல்ல; கருக்குழாய், கருப்பையின் வெளிப்புறம், இடுப்பெலும்புத் தசைகள் உட்பட வயிற்றில் எங்கும் வரலாம். கருப்பையின் உட்புறத்தில் இருந்தால், மாதவிடாயின் போது, தாங்க முடியாத வலி வரும். வேறு இடத்தில் இருந்தால், அதிலும் மூன்றாம், நான்காம் நிலையில் முற்றியதாக இருந்தால், எந்த நேரத்திலும் வலி வரலாம்.
இப்பிரச்னை இருந்தால், கரு உருவாகும் வாய்ப்பு குறைவு. வலி நிவாரண மாத்திரைகள், தற்காலிக தீர்வாக இருக்கும். 40 வயதிற்கு மேல், அறுவை சிகிச்சை செய்து கர்ப்பப்பையை அகற்றி விடுவர்.
திருமணம் ஆகாத பெண்கள் கூட சமயத்தில், 'எனக்கு குழந்தை வேண்டாம்; வலியிலிருந்து, 'ரிலீப்' கிடைத்தால் போதும்; கர்ப்பப்பையை அகற்றி விடுங்கள்' என்று சொல்வதும் உண்டு. அந்த அளவிற்கு தாங்க முடியாத வலியை தரும்.
டாக்டர் அமுதா ஹரி
மகப்பேறு சிறப்பு மருத்துவர், சென்னை.
dr_amudha@yahoo.co.in
