PUBLISHED ON : ஜூன் 18, 2017

பாகற்காய் சாப்பிட்டால் வாய் கசக்கும்; ஆனால் வாழ்க்கை இனிக்கும் என்பதை அனுபவித்தவர்கள் அறிவார்கள். அதிகாலையில் வெறும் வயிற்றில், 3 முதல் நான்கு பழத்தைச் சாறு பிழிந்து சாப்பிட்டு வந்தால், குடல் நோய் பிரச்னைகள் உடனே தீரும். இதன் விதைகளை பொடி செய்து, சாப்பாட்டோடு கலந்தும் சாப்பிடலாம். அறுசுவையில் ஒரு சுவை கசப்புதான் என்பதை தெரிந்து கொள்வது நல்லது.
பாகற்காயை வாரத்தில் ஒரு முறையாவது, உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. பொதுவாக பாகற்காய் உடலுக்கு உஷ்ணத்தைக் கொடுக்கும். பாகற்காயில் இரண்டு வகைகள் உண்டு. பொடியாக இருக்கும் பாகற்காயை மிதி பாகற்காய் என்றும், நன்கு பெரிதாக நீளமாக இருப்பதை, கொம்பு பாகற்காய் என்றும் அழைக்கின்றனர்.
பாகற்காயை நாம் எப்படி வேண்டுமானாலும் சமைத்து சாப்பிடலாம். புளியுடன் சேர்த்து பாகற்காயை சமைப்பது சிறந்தது என்று சொல்லப்படுகிறது. நீரிழிவு வியாதி உள்ளவர்கள் பாகற்காய் சாப்பிட்டால், அது அவர்களுக்கு சிறந்த மருந்து. ஜூரம், இருமல், இரைப்பு, மூலம், வயிற்றில் பூச்சித் தொல்லை இருப்பவர்களும், பாகற்காயை உண்ணலாம். இப்பிரச்னைகள் இருப்பவர்கள் மட்டும்தான், பாகற்காய் சாப்பிட வேண்டும் என்ற அவசியமில்லை. இது போன்ற பிரச்னைகள் வர வேண்டாம் என்று நினைப்பவர்களும் சாப்பிடலாம்.
பாகற்காயின் இலைகளை அரைத்து, உடல் முழுவதும் பத்துப்போட்டால் சிரங்கு ஒழிந்து விடும். இதேபோல பாகற்சாறும், உடலுக்கு மிகவும் ஏற்றது. ஒவ்வொரு நோய்க்கும் ஒவ்வொரு விதத்தில், பாகற்காய் இலையின் சாறைக் குடிக்க நோய் கட்டுப்படும். சித்த மருத்துவத்தில், காலங்காலமாக நீரிழிவு நோய்க்கு பாகற்காய் பயன்படுத்தி வருவது அனைவரும் அறிந்த ஒன்று. இன்று ஆராய்ச்சி மூலம் அதை விஞ்ஞானிகளே நிருபித்துள்ளனர். மருத்துவ ஆய்வில் பாகற்காய், இன்சுலின், சுரப்பை தூண்டக்கூடியது என, கண்டறியப்படுள்ளது.
இதில் உள்ள லெக்டின், இன்சுலினை போல் செயல்பட்டு, உடல் திசுக்களில் குளூக்கோஸ் ஆக பயன்படுத்துவதை அதிகபடுத்தி, பசியை குறைக்கிறது.
பாகற்காய், உணவுப் பையிலுள்ள பூச்சியைக் கொல்லும். பசியைத் தூண்டும், பித்தத்தைத் தணிக்கும். தாய்ப்பால் சுரக்க உதவும்.
ஒரு பிடி கொடிப்பாகல் இலையுடன், ஐந்தாறு மிளகைச் சேர்த்து காரமற்ற அம்மியில் அரைத்து, கண்களைச் சுற்றிப் பற்றுப் போட்டு வர, மாலைக்கண் நோய் குணமாகும். மூன்று நாட்களுக்கு ஒருமுறை, பாகற்காய் ஜூஸ் குடித்து வந்தால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைக்கலாம்.
பாகல் இலைச் சாற்றை நிறையக் குடித்து, வாந்தி எடுத்தால், அத்துடன் பாம்பு கடித்த விஷம் நீங்கும். உடலில் கட்டி, புண்கள் இருந்தால் ஒரு கப் பாகற்காய் சூப் எடுத்து, அதில் ஒரு ஸ்பூன் எலுமிச்சைச் சாறு கலந்து, காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட, மூன்று மாதங்களுக்குள் ரத்தம் சுத்தமாகும்; தோல் பளபளப்பாகும்.
சீரான முறையில் பாகற்காய் ஜூஸ் குடித்து வந்தால், செரிமான அமிலம் சுரப்பது மேம்படும். எனவே பசியும் அதிகரிக்கும். கணைய புற்றுநோய் அணுக்களை அழிப்பதில், முக்கிய பங்கு வகிக்கிறது. பாகற்காயில் பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் ஏ உள்ளதால், கண் சம்மந்தமான நோய்களுக்கு தீர்வாக உள்ளது. இதில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், கண்களுக்கு ஏற்படும் பாதிப்பில் இருந்து உங்களை பாதுகாக்கும்.

