PUBLISHED ON : ஜூன் 18, 2017

அறுவகை சுவைகளில் புளிப்பும் ஒன்றாகும். நாம் சாப்பிடும் உணவில் உப்பு, புளி, காரம் இல்லாமல் சாப்பிடுவதில்லை. இதில் முக்கியமானது புளிப்பு சுவை. புளி சரியான அளவில் இல்லையென்றால், சாப்பாடு ருசிக்காது. புளிப்பு சுவை மட்டுமல்ல, நிறைய மருத்துவக் குணங்களும் நிறைய உள்ளன.
இல்லத்தில் இருக்க வேண்டிய, முக்கிய பொருட்களில் புளியும் ஒன்று. வைட்டமின் சி சத்து கொண்ட புளியானது, நோய் நீக்கியாக விளங்குகிறது. புற்றுநோய் வராமல் தடுக்கிறது. மலச்சிக்கலை போக்குகிறது. கை, கால், இடுப்பு போன்ற ஏதாவது ஓரிடத்தில் அடிபட்டு வீக்கம் வந்தாலோ, சுளுக்கு, பிடிப்பு ஏற்பட்டாலோ, புளியை நன்கு கரைத்து, உப்பு சேர்த்து கொதிக்க வைத்து, கூழ் பதத்துக்கு தயாரிக்க வேண்டும். பின்னர் அதை, அடிபட்ட இடத்தில் பொறுக்கும் சூட்டில் பத்து போட்டால், வீக்கமும், சுளுக்கும் உடனே சரியாகி விடும்.
வெயில் காலங்களில் நீர்க்கடுப்பு, நீர்ச்சுருக்கு என்று பல்வேறு உபாதைகள் வாட்டி எடுத்து விடும். இந்த மாதிரி சமயங்களில், புளியங்கொட்டையை முழுசாவோ அதன் தோலை மட்டுமோ மென்று தின்றால், உடனடி குணம் கிடைக்கும். புளியின் கரைசலில், கருப்புக்கட்டி போன்றவற்றை சேர்த்து, பானகமாகவும் குடிக்கலாம்.
ஆளை உருக்கும் கணைச்சூடு உள்ளவர்கள், புளி இலையை எடுத்து அதனுன் சின்ன வெங்காயத்தை சேர்த்து இடித்து, சாறு பிழிந்து, 100 மில்லி அளவுக்கு சாப்பிட வேண்டும். வாரம் ஒரு தடவை என்று, 3 முறை சாப்பிட்டால் கணைச்சூடு தணியும். வயிற்றுக்கோளாறும் சரியாகும். இந்த சாறை குடித்த பிறகு, 3 மணி நேரத்துக்கு, தண்ணீரைத் தவிர வேறு எதையும் சாப்பிடக்கூடாது. உடம்பு உஷ்ணமாகி, வலியால் துடிக்கிறவர்களுக்கு, புளியை தண்ணீரில் ஊறப்போட்டு நன்கு கரைத்து, பனைவெல்லம் சேர்த்துக் குடிக்க கொடுத்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும். வெயில் காலத்தில் இக்கரைசல் மருந்தாக இருக்கும்.
புளியம்பூ, புளியம்பிஞ்சு இரண்டையும் தேவையான அளவு மிளகாய், உப்பு சேர்த்து இடித்து காய வைத்து, அதை ஊறுகாய் மாதிரி சாப்பாட்டுடன் சேர்த்து உண்டால், உடல் உஷ்ணம் தணிவதோடு, நல்ல பசியும் உண்டாகும். புளியை பயன்படுத்தி முகப்பொலிவு தரும், மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: புளி, எலுமிச்சை, தேன். 2 ஸ்பூன் புளி கரைசலுடன், ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு, சிறிது தேன் சேர்த்து நன்றாக கலந்து, முகத்தில் போடும்போது வறட்சி மாறி பொலிவு ஏற்படும்.
புளி, தோலுக்கு வண்ணத்தை தருகிறது. புளிய மரத்தின் அனைத்து பாகங்களும் பயன் தருகிறது. நோய் எதிர்ப்பு சக்தி உடைய, புளியை பயன்படுத்தி புண்களை கழுவுவதற்கான மருந்து தயாரிக்கலாம். புளிய இலைகளுடன் வேப்பிலை சேர்க்க வேண்டும். இதில் தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி எடுத்து புண்களை கழுவினால், ரத்தக்கசிவு கட்டுப்படும். தொற்று ஏற்படாமல் பாதுகாக்கும். சீல் பிடிக்காமல், புண் சீக்கிரம் ஆறும். புளிய மர இலை, ரத்தத்தை தடுத்து நிறுத்தும் தன்மை கொண்டது.
இலைகளை அரைத்து அடிபட்ட இடத்தில் பூசும்போது, உடனடியாக ரத்தக்கசிவு நிற்கும். காயங்கள் விரைவில் ஆறும். புளியமரத்தின் இலையை பயன்படுத்தி மூட்டு வலி, வீக்கம், ரத்தக்கட்டுக்கான மருந்து தயாரிக்கலாம். ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெயுடன் சிறிது புளியம் இலைகளை சேர்த்து வதக்கவும். ரத்தக்கட்டு, வலி, வீக்கம் உள்ள இடத்தில் கட்டி வைத்தால் குணமாகும். மூட்டு வலிக்கும் மருந்தாகிறது.

