பித்தம் போக்கும் சித்தம் தெளியும் சாப்பிட்டுப்பாருங்க இலந்தை
பித்தம் போக்கும் சித்தம் தெளியும் சாப்பிட்டுப்பாருங்க இலந்தை
PUBLISHED ON : ஜூன் 18, 2017

இலந்தை பழங்களில் நார்ச்சத்து, புரதச்சத்து, வைட்டமின்கள் உட்பட பல்வேறு சத்துக்கள் அடங்கியுள்ளன. இதில் உள்ள சத்துக்கள் எளிதில் ஜீரணமாகி, ரத்தத்தில் கலப்பதால், இந்த பழத்தை தினமும் சாப்பிடலாம். பொதுவாக சீசனில் விளையும் பழங்களை, அவ்வப்போது உண்டு வந்தால், பழங்களின் பயன்களை முழுமையாகப் பெறலாம். சில அரிய வகை பழங்கள், கிராமங்களில்தான் கிடைக்கின்றன. இருந்தும் இது பற்றி மக்களுக்கு தெரியாது. அந்த வகை பழங்களில் இலந்தைப் பழமும் ஒன்றாகும்.
இது போல் காரம்பழம், கோவைப்பழம் என, பல வகையான காட்டுப்பழங்கள் உள்ளன. இவ்வகை பழங்களில் மருத்துவப் பயன்கள் அதிகம் உண்டு. நல்ல சிவப்புடன் பளபளப்பாக காணப்படும். இந்தப் பழத்தின் சதைப்பகுதி குறைந்து காணப்படும். இன்றும் கிராமங்களில் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி இப்பழத்தை சாப்பிடுகின்றனர்.
இந்த பழத்தில் இனிப்புச் சுவையும், சிலவற்றில் புளிப்புச்சுவையும் உண்டு. சிலவற்றில் சிறு புழுக்கள் இருக்கும். இந்த பழத்தில் வைட்டமின் ஏ, பி, சி, டி சத்துக்கள் நிறைந்துள்ளது. சுண்ணாம்புச் சத்தும், இரும்புச் சத்தும் அதிகம் உள்ளன. இதனை வெறும் வயிற்றில் உண்ணக்கூடாது.
சிலருக்கு, உடலில் சுண்ணாம்புச் சத்து குறைவதால், எலும்புகள் பலமிழந்து காணப்படும். இதனால் இவர்கள் லேசாக கீழே விழுந்தால் கூட, எலும்புகள் உடைந்து போகும். இவர்கள் இலந்தைப் பழம் கிடைக்கும் காலங்களில் வாங்கி சாப்பிட்டு வந்தால், எலும்புகள் வலுப்பெறும்; பற்களும் உறுதி பெறும். இலந்தைப் பழம் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் பித்தம் சமநிலையில் இருக்கும். நினைவாற்றலை அதிகரிக்கும் என்பதால் மாணவர்கள் இதைச் சாப்பிடலாம்.
இலந்தைப் பழம் போல, அதன் இலையிலும் அதிக மருத்துவப் பயன்பாடுகள் கிடைக்கின்றன. இந்த இலைகளை மை போல் அரைத்து, வெட்டுக்காயத்தில் கட்டினால் விரைவில் நலம் பெற முடியும்.
உடலின் மேற்பகுதியில் ஏற்படும் கோடைக்காலக் கட்டிகள் மீது கட்டி வந்தால், விரைவில் கட்டிகள் பழுத்து உடையும்.
உடம்பிலுள்ள எலும்புகளுக்கும் பற்களுக்கும் உறுதி தரும் உடம்பில் பலம் பெருகும். பகல் உணவுக்குப் பிறகு இலந்தைப்பழத்தை உட்கொண்டால்
செரிமானம் உண்டாவதுடன், பித்தமும் கபமும் சாந்தமுறும். பழத்தை உலர்த்தி கொட்டையை நீக்கி உட்கொண்டால், கபத்தை வெளிக் கொண்டு வரும்.
கால்சியச் சத்து இலந்தைப் பழத்தில் அதிகம் இருப்பதால், எலும்புகளில் ஏற்படும் தேய்மானத்தைக் கட்டுப்படுத்தி, மெனோபாஸ் காலங்களில் ஏற்படும் சத்து இழப்புகளை ஈடு செய்யும். பசியில்லாமல் அவதிப்படுபவர்களும், சிறிது சாப்பிட்டாலும் செரிமானம் ஆகாமல் கஷ்டப்படுபவர்களும், இலந்தைப் பழத்தின் விதையை நீக்கி விட்டு, பழச்சதையுடன் மிளகாய், உப்பு சேர்த்து உலர்த்தி எடுத்துக்கொண்டு காலையும், மாலையும் 2 கிராம் அளவு சாப்பிட்டு வந்தால் செரிமான சக்தியைத்தூண்டி, நன்கு பசியை உண்டாக்கும்.
சிலருக்கு அடிக்கடி உடல்வலி ஏற்படும். சிறிது வேலை செய்தால் கூட, அதிகளவு உடல்வலி தோன்றும். பெரும்பாலும் 40 வயதை தாண்டியவர்களுக்கே இந்த நிலை ஏற்படும். இந்த உடல் வலியை போக்கி, உடலைத் தெம்பாக்க இலந்தைப் பழம் நல்ல மருந்தாகும். பேருந்தில் பயணம் செய்யும்போது சிலருக்கு வாந்தி, தலைச்சுற்றல் உண்டாகும். அவர்கள் இலந்தைப் பழத்தை சாப்பிட்டு வந்தால் தலைச்சுற்றல், வாந்தி ஏற்படாது.

