PUBLISHED ON : அக் 16, 2011
எனது தாயின் வயது 80. அவரது வாயின் கீழ்த்தாடையின் பல்லுக்கு இடையில் தசை வளர்கிறது. இதை இருமுறை அகற்றிவிட்டும், திரும்பவும் வருகிறது. இது எதனால்? பல்சொத்தை இருந்து அதனால் வரும் நச்சுப் பொருட்களால் அவ்வப்போது வீக்கம் அல்லது தசை வளர்ச்சி ஏற்படலாம். பல்டாக்டரை அணுகி அவ்விடத்தில் எக்ஸ்ரே எடுத்தபின், எந்த பல்லால் தசை வளர்ச்சி ஏற்பட்டுள்ளது என்பதை அறிந்து, அப்பல்லின் வேர் சிகிச்சை செய்ய வேண்டும். சிலருக்கு பல்சொத்தை இல்லாமல், பற்களில் படிமானங்கள் அதிகமாக இருக்கும். அப்போது ஈறு அல்லது தசை வீக்கம் ஏற்படலாம். அதற்கு பல் டாக்டரை அணுகி (ஸ்கேலிங்) பற்களை சுத்தம் செய்ய வேண்டும். அதன் பின் முழுத்தாடை எக்ஸ்ரே எடுத்து, ஈறுசிகிச்சை நிபுணரிடம் ஆலோசனை பெற்றபின், ஈறு சிகிச்சை செய்து, தசை வளர்ச்சி மற்றும் பற்களின் வேர்ப்பகுதியில் உள்ள படிமானங்களையும் அகற்றிவிடுவர். எனது உறவினர் பையனுக்கு இரண்டரை வயது ஆகிறது. இன்னும் பற்கள் முளைக்கவில்லை, என்ன செய்வது? பொதுவாக குழந்தைகளுக்கு பால் பற்கள் 6 முதல் 8 மாதங்களில் முளைத்துவிடும். முதலில் கீழ்த்தாடை பற்கள், அதைத் தொடர்ந்து மேல்தாடை முன்பற்கள் வளர்ந்துவிடும். சிலருக்கு ஓரிருமாதங்கள் தாமதமாக வளரக்கூடும். ஒரு ஆண்டுகாலம் தாமதமாகிவிட்டால், பல் டாக்டரை அணுகி ஓ.பி.ஜி., எனப் படும், முழுத்தாடை எக்ஸ்ரே எடுக்க வேண்டும். அதன்பின் அவ்விடத்தில் உள்ள ஈறுகளை சிறிதளவு அகற்றி விட்டால் பற்கள் முளைத்துவிடும். சில குழந்தைகளுக்கு அவ்விடத்தில் அதிகளவு கடினமான எலும்பு இருப்பின் பற்கள் தாமதமாக முளைக்கும்.
டாக்டர் எஸ்.முத்துராமன்,
மதுரை, 94430-61160
