PUBLISHED ON : ஏப் 22, 2018

புற்றுநோய் பரம்பரை ரீதியாக உருவாகுமா?
புற்றுநோய் பாதித்து குணமடைந்தோரின் வாரிசுகளுக்கு புற்றுநோய் வரவேண்டும் என கட்டாயம் இல்லை. அதுவும் மார்பக புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்கு ரத்த பரிசோதனை செய்து, சரியான சிகிச்சை எடுத்தால், வருமுன் தடுக்கலாம்.
செவ்வந்தி பூ தோட்டத்தில் வேலை செய்தால் இளைப்பு ஏற்படுமா?
செவ்வந்திப்பூக்கள் தோட்டத்தில் வேலை செய்யும் போது, பூக்களில் உள்ள மகரந்தம் ஒரு சிலருக்கு நுரையீரல் அலர்ஜியை உண்டாக்கலாம். அதுவே இளைப்பு, இருமலுக்கு காரணமாக அமையலாம். பூந்தோட்டத்தில் வேலை செய்யும்போது துணியால் ஆன முக கவசம் அணிந்து கொள்வது நல்லது.
'டிவி' பார்ப்பது கண்களுக்கு எவ்வித பாதிப்பை ஏற்படுத்தும்?
ஒரு வீட்டில் 20 அங்குல 'டிவி' இருந்தால், அவற்றை 6 அடி துாரத்திற்கு அப்பால் உட்கார்ந்து பார்க்க வேண்டும். அதற்கு குறைவான துாரத்தில் பார்த்தால் நிச்சயம் கண்களுக்கு கோளாறுகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.
தேங்காய் பொருட்கள் சாப்பிடுவதால் இருதய பிரச்னை வருமா?
தேங்காய் மற்றும் தேங்காய் சார்ந்த பொருட்களை அளவோடு சாப்பிட்டால் பல்வேறு மூளை சார்ந்த நோய்களை தடுக்கலாம். இவற்றை அளவோடு உட்கொண்டால் எந்தவித பாதிப்பும், இருதயம், கொழுப்பு சார்ந்த பிரச்னைகள் வராது.
வாகன ஓட்டிகளுக்கு கழுத்தில் வலி ஏற்பட்டால் என்ன செய்வது?
வாகனத்தை ஓட்டும் போது அடிக்கடி பிரேக் போடுதல், மிக வேகமாக, வேகத்தடைகளில் செல்லுதல் போன்ற காரணத்தல் கழுத்து எலும்புகள் தேய்மானம் ஆகும். இதன் காரணமாக கழுத்து வலி அதிகரிக்கும். இதற்கு கழுத்து பெல்ட் அணிந்து கொள்வது நல்லது.
நோயாளிகளின் துணிகளை துவைப்பவர்களுக்கு நோய் ஏற்படுமா?
நோயாளிகள் துணிகளை துவைக்கும்போது அதில் உள்ள கிருமி, படை போன்ற நோய்கள் தொற்றிக்கொள்ள வாய்ப்பு உண்டு. எனவே, துணிகளை கைஉறை அணிந்து துவைப்பது நல்லது. துவைத்த பின்னரும் கைகளை சோப்பு போட்டு கழுவிக்கொண்டால், நோய் தாக்கத்தில் இருந்து தப்பிக்கலாம்.
மியூசிக் தெரபி கொடுத்தால் நோய் குணமாகுமா?
குறைவான சத்தத்தில் நமக்கு பிடித்த இசையை கேட்பதால், உடலில் உள்ள வெள்ளை அணுக்கள் ஊக்குவிக்கப்படுகின்றன. எண்டர்ப்பின் என்ற சுரப்பி அளவும் அதிகரிப்பதால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து நோய் விரைந்து குணமாகும்.
- டாக்டர்.மோகன்பிரசாத், மதுரை, 98430 50822.

