PUBLISHED ON : ஜன 09, 2021

கொரோனா போன்ற பல புதிய தொற்றுகள் வரலாம் என்ற சந்தேகம் பரவி வரும் நிலையில், நம் பாரம்பரிய அறிவு சொத்துக்களை பயன்படுத்தி கொள்வது நல்லது தானே!
கல்லீரல், சிறுநீரக நஞ்சுகள் நீங்கஉணவு செரிமானத்தில் துவங்கி, ஹார்மோன் உற்பத்தி, கொழுப்பு புரதங்கள் உற்பத்தி, மருந்துகளை கிரகித்தல் என, கல்லீரலுக்கு, 500க்கும் மேற்பட்ட வேலைகள் இருக்கின்றன. உண்மையில், உடலின் உள்துறை செயலகம் போல செயல்படுவது நம் கல்லீரல் தான்.குடலில் இருந்து உறிஞ்சப்படும் சத்துக்களும், நச்சுக்களும் நிறைந்த ரத்தம் முதலில் வந்தடையும் இடம், கல்லீரல். இதில், சத்துக்களை ஈர்த்து, நச்சுக்களை உடைத்து வெளியேற்றி, கிருமி நீக்கம் செய்வது கல்லீரலும், சிறுநீரகமும் ஆகும்.இவ்விரு உறுப்புகளை சரியாக பராமரித்து வந்தாலே, பல நோய்கள் நம்மை அண்டாது. மாதத்தில் மூன்று நாட்கள் காலை எழுந்தவுடன், வெறும் வயிற்றில், கீழாநெல்லி செடியை பிடுங்கி, நன்றாக அலசி, சிறிய துண்டுகளாக நறுக்கி மிக்சியில் விழுதாக அரைத்து எடுக்கவும்.இதற்கு, கீழாநெல்லி கற்கம் என்று சித்த மருத்துவத்தில் பெயர். இதை, ஒரு டீ ஸ்பூன் அளவு - 5 கிராம் எடுத்து புளிப்பில்லாத மோர் அல்லது நீரில் கலந்து பருகவும். கீழாநெல்லி அரைத்து, பிழிந்து வடிகட்டிய சாறு, 30 மில்லி அளவு பருகலாம். இதனால் கல்லீரல், சிறுநீரகம் ஆகியவை புத்துணர்வு பெறும்; கழிவுகள் நீங்கும்; நோய் எதிர்ப்பாற்றல் பெருகும்.
குடல் கிருமிகளை ஒழிக்கும் சுண்டைக்காய்நம் உடலில் கழிவு கால்வாயாக விளங்கும் பெருங்குடல் பகுதியில், கோடிக்கணக்கான கிருமிகள் மண்டி கிடக்கும். இவற்றை அவ்வப்போது சுத்தம் செய்யும் விதமாக, வாரம் ஓரிரு நாட்கள் சுண்டைக்காயை உணவில் சேர்க்கலாம். சுண்டைக்காய் கூட்டு, சுண்டைக்காய் காரக்குழம்பு ஆகியவை சுவையான உணவுகளாயிற்றே.அதேபோல சித்த மருத்துவத்தில் கைக் கண்ட மருந்து, சுண்டைவற்றல் சூரணம், சுண்டைக்காயை உணவாக உண்ண முடியாதவர்கள், இந்த சுண்டைவற்றல் சூரணத்தை, வாரம் ஓரிரு நாட்கள், ஒரு டீ ஸ்பூன் அளவு - 5 கிராம் வெந்நீரில் கலந்து சாப்பிடலாம்.இதனால் பெருங்குடலில் உள்ள கெட்ட கிருமிகள், குடல்புழுக்கள் நீங்கி சுத்தமாகும்.
குடல் சுத்தம் என்றால் உடல் சுத்தம்ஆறு மாதத்துக்கு ஒரு முறை, காய்ச்சி ஊற்றிய சுத்தமான விளக்கெண்ணெயை, ஒரு ஸ்பூன் அளவு - 5 மில்லி வெந்நீர் அல்லது பாலில் கலந்து குடிப்பது, வயிற்றை எளிமையான முறையில் சுத்தம் செய்ய உதவும்.செக்கில் ஆட்டிய சுத்தமான விளக்கெண்ணெய், சித்த மருந்தகங்களில் கிடைக்கும். அவற்றைப் பயன்படுத்துவது நல்லது.குழந்தைகள், பெரியவர்களுக்கும் இது உகந்த முறை. பல நோய்கள் வராமல் தடுக்கவும், வந்த நோய்களை துரிதமாக தீர்க்கவும், சித்த மருத்துவர்கள் பரிந்துரைக்கும் இந்த எளிமையான பேதி மருத்துவம், ஒரு சிறப்பான நோய் தடுக்கும் யுக்தியாகும்.
மூலிகைமணி டாக்டர்க.வே.அபிராமி,சித்த மருத்துவர், சென்னை.
