PUBLISHED ON : ஜூன் 23, 2019

* எனக்கு வயது முப்பது. சிறுவயதில் விளையாடும்போது முன் பல்லில் அடிபட்டது. சிறியதாக வலி வந்தது. மாத்திரை சாப்பிட்ட பின் சரியானது. தற்போது பல் நிறம் மாறுகிறது. என்ன செய்வது?
ஒவ்வொரு பல்லின் வேர் பகுதியில் ரத்த நாளங்கள் மற்றும் நரம்புகள் சென்று கொண்டிருக்கும். சிறியதாக அடிபட்டால் பாதிக்கப்படாது. அடி பலமாக இருந்தால் பாதிக்கப்படும். சிலருக்கு 6 மாதம் முதல் ஒரு வருடத்திற்குள் நிறம் மாறும். சிலருக்கு பல வருடங்கள் கழித்து நிறம் மாறும். அந்த பல்லுக்கு வேர் சிகிச்சை செய்து கேப் போட்டால் அருகில் இருக்கும் பல் போன்றே வந்துவிடும். வித்தியாசம் இருக்காது.
* எனக்கு கடந்த 20 வருடங்களாக சர்க்கரை நோய் உள்ளது. பல பற்கள் ஆடுகின்றன. அதை சரி செய்ய முடியுமா?
சர்க்கரை நோய் என்பது ஒரு பிரச்னையே இல்லை. தங்களுக்கு ஈறுநோய் அறுவை சிகிச்சை செய்து Bone Graft என்னும் எலும்புத்துகள்கள் வைத்து அருகில் உள்ள பற்களுடன் சேர்த்து கட்டிவிட்டால் ஆடும் பற்கள் சரியாகிவிடும். மிகுதியாக ஆடும் பற்களை எடுத்துவிட்டு நிரந்தரமான இம்ப்ளான்ட் பற்கள் பொருத்திவிட்டால் இயற்கை பற்களை போன்றே இருக்கும். நன்றாக மென்று சாப்பிடலாம்.
*எனக்கு வயது அறுபது. சர்க்கரை நோயால் அனைத்து பற்களையும் இழந்துவிட்டேன். நான் இம்ப்ளான்ட் பற்கள் பொருத்தலாமா?
பொருத்தலாம். அதற்கு முன் தங்கள் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். பொருத்திய இம்ப்ளான்ட் பற்கள் நீடித்து வருவதற்கும் நீண்ட கால உழைப்பிற்கும் தங்கள் உடல் ஆரோக்கியத்திற்கும் சர்க்கரையின் அளவு சீராக இருப்பது முக்கியம். அருகில் உள்ள சர்க்கரை நோய் மருத்துவரிடம் சென்று சர்க்கரையின் அளவை சீராக்கிய பின் பொருத்தலாம்.
* பல ஆண்டுகளாக நான் கழற்றி மாட்டும் பல் செட்டை உபயோகிக்கிறேன். இப்போது மிகுந்த சிரமமாக உள்ளது. அடிக்கடி புண் வருகிறது. நிரந்தர பற்கள் கட்டலாமா?
இன்றைய நவீன உலகில் அனைவரும் இம்ப்ளான்ட் பற்களுக்கு மாறி வருகின்றனர். கழற்றி மாட்டும் பல்செட் உபயோகிப்பதால் அடியில் இருக்கும் எலும்புகள் மெல்ல தேய்ந்து கொண்டே வரும். இதனால் பின்னாளில் நிரந்தர இம்ப்ளான்ட் பற்கள் பொருத்துவதில் சிரமம் வரும். நவீன இம்ப்ளான்ட் பற்கள் என்பது எலும்பில் சிறிய ஸ்குரூ போன்று வைத்து அதன்மேல் பல்செட் வைத்து பொருத்திவிடுவர். எனவே கழன்று விழுமோ என அச்சப்பட தேவையில்லை.
* நான் சாப்பிடும்போது கல்லை கடித்துவிட்டேன். பல்லின் ஒரு பகுதி லேசாக உடைந்து ஒட்டிக்கொண்டு இருக்கிறது. சில நேரம் கூசுகிறது. வலியும் இருக்கிறது. என்ன செய்வது?
உடைந்த பகுதி மிகச் சிறியதாக இருந்தால் பற்களை போன்று வெள்ளை நிறத்தில் சிமெண்ட் வைத்து அடைக்கலாம். பெரியதாக இருந்தால் வேர் சிகிச்சை செய்து கேப் பொருத்திவிடலாம். ஆனால் உடைந்த பகுதி ஆழமாக சென்று இரண்டாக பிளவு பெற்றிருந்தால் நிரந்தர இம்ப்ளான்ட் பற்கள் பொருத்துவதே சிறந்தது.
-டாக்டர் பாலாஜி
சிறப்பு பல் சீரமைப்பு நிபுணர், மதுரை.
99760 29515
