PUBLISHED ON : அக் 08, 2023

பூஞ்சைத் தொற்றால் ஏற்படும் படர் தாமரையை ஆயுர்வேதத்தில் 'தத்ரு' என்று சொல்வோம். இப்பாதிப்பு காலில் ஏற்பட்டால் சேற்றுப்புண், தலையில் வரும் போது அலோபீசியா என்றும் பெயர்.
அறிகுறிகள்
தோலை விட அடர்த்தியான வட்ட வடிவ வளையமாக தோன்றும். இதன் நடுவே தெளிவான தோல் இருக்கும். இதில், மீனின் செதில் போல உருவாகலாம். வட்ட வளையத்தில் அரிப்புடன் கூடிய சிறு கொப்புளங்களும் வரலாம். இந்த ஒரு வளையம் சிறிய புள்ளி போன்று ஆரம்பித்து, உடல் முழுதும் பரவலாம்.
துவக்கத்தில் சிறிய மோதிர வளையமாக ஆரம்பித்து சற்று பெரிதாகி, அடுத்தடுத்த மோதிர வளையங்களுடன் இணைந்து, உடல் முழுதும் பரவலாம். அதன்பின், சிவப்பு திட்டுக்களாக மாறும்; அரிப்பு ஏற்படும். அந்த இடத்தை தொட்டு விட்டு, வேறு இடத்தை தொட்டால் அங்கும் பரவும்.
யாருக்கெல்லாம் வரும்?
அதீத வெப்பம், அதிக ஈரப்பதம் உள்ள சூழலில் வசிப்போருக்கு வரும் வாய்ப்புகள் அதிகம். பாதித்தவரின் படுக்கையை பயன்படுத்துவது, இறுக்கமான ஆடைகள் அணிவது, துணிகளை நன்கு துவைத்து, வெயிலில் உலர வைக்காமல் பயன்படுத்துவது, நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்களுக்கு வரலாம்.
ஊறுகாய், தயிர், புளிக்க வைத்த மாவில் செய்யும் உணவுகள், வினிகர், உளுந்து, சிட்ரஸ் அமிலம் அதிகமுள்ள தக்காளி, எலுமிச்சை, ஆரஞ்சு பழங்கள், உப்பு, புளி, காரம் அதிகமுள்ள உணவுகளை அளவுக்கு அதிகமாக சாப்பிடும் போது, ரத்தத்தில் அமிலத் தன்மை அதிகமாவதால் படர் தாமரை வரலாம்.
மீன் உட்பட அசைவ உணவுகளை, பிரச்னை இருக்கும் போது குறைந்தது ஒரு மண்டலமான, 48 நாட்களாவது தவிர்க்க வேண்டும். செரிமானம் ஆன பின், இந்துப்பின் சுவை இனிப்பாக மாறும் என்பதால், வழக்கமாக உபயோகிக்கும் உப்பிற்கு பதில் இந்துப்பு சேர்க்கலாம்.
பகல் நேரத்தில் துாங்குவது, மலம், சிறுநீர் இவற்றை அடக்குவதால், கழிவுகள் உடலில் சுற்றும். இதனாலும் தோல் வியாதிகள் வரலாம்.
சிகிச்சை
ஆரம்ப கட்டத்தில் இருக்கும் படர் தாமரைக்கு, பூஞ்சைக்கு எதிராகச் செயல்படும் பாதித்த பகுதியில் பூச கிரீம், மாத்திரைகள் தருவோம். இதிலேயே சரியாகி விடும். நீண்ட காலமாக பிரச்னை இருந்தால், 'விரேச்சனம்' எனப்படும் பஞ்சகர்ம சிகிச்சையில் பேதி மருந்து கொடுத்த பின், மருந்துகள் கொடுத்தால் நல்ல பலன் தரும்.
நீண்ட நாட்களாக பிரச்னை இருப்போர் பயன்படுத்திய துணிகளை எரித்து விடுவது நல்லது. வீட்டின் சுவர்களில் ஈரப்பதம் இருந்தால், அதில் பூஞ்சை உருவாகி, அதனால் பாதிப்பு வரலாம். வேப்ப இலை, அத்தி, ஆலங்குச்சிகளை எரித்து புகை போடுவது, ஹோமப் புகையிலும் சுவர்கள், சுற்றுப்புறத்தில் உள்ள பூஞ்சைகள் அழியும். மண் தரையில் சாணம் மெழுகுவது, வாசல் படிகளில் மஞ்சள் தடவுவது கிருமி நாசினியாக பயன்படும்.
நோயின் தீவிரத்தை பொருத்து, கந்தக ரசாயனம், ஆரோக்கிய வர்த்தினி வடீ, ஆரக்வதாதி கஷாயம், ஹரித்ரா காண்டம், ரச மாணிக்யம், மஹாதிக்தக கஷாயம் தருவோம். வெளிப்பூச்சாக ஜாத்யாதி தைலம், கரப்பான் தைலம், அமிர்த வெண்ணெய், துர்துாரபத்ராதி தைலம், நால்பாம்ராதி தைலம் தரலாம்.
பாரம்பரிய சித்த மருத்துவத்தில் ரச கந்தி மெழுகு, திரிபலா சூரணம் ஆகியவற்றை உள் மருந்தாக தரும் பழக்கம் உள்ளது. ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனையில் மட்டுமே இந்த மருந்துகளை சாப்பிட வேண்டும்.
டாக்டர் சுதீர் ஐயப்பன், டாக்டர் மீரா சுதீர், சென்னை. 99623 50351, 86101 77899
