PUBLISHED ON : அக் 08, 2023

உணவுப் பொருட்களைக் கொண்டு வாயில் இருக்கும் கிருமிகள், ஒருவித பிசுபிசுப்பான மெல்லிய படலத்தை பற்களின் மீது போர்வையைப் போல படியச் செய்து விடும். இதற்கு பற்படலம் என்று பெயர்.
இதை தினமும் முறையாக பிரஷ் செய்து அகற்றி விடலாம். ஆனால் பிரஷ் படாத இடங்கள், முறையாக சுத்தம் செய்யப்படாத இடங்கள், ஈறுகளுக்கு இடையில் உள்ள பற்படலத்தின் மீது எச்சிலில் உள்ள சுண்ணாம்பு சத்து படிந்து, பற்களோடு இறுகி விடுகிறது. இதைத்தான் பற்காரை என்கிறோம். பற்காரையை நம்மால் பல் துலக்கி அகற்ற இயலாது; பல் மருத்துவரால் மட்டுமே அகற்ற இயலும்.
ஸ்கேலிங்
ஸ்கேலிங் என்பது ஈறு தொடர்பான பிரச்னைகளை சரிசெய்ய மேற்கொள்ளப்படும் பல் சிகிச்சை முறை. அல்ட்ராசோனிக் கருவியின் உதவியுடன் தண்ணீரைப் பீய்ச்சியடிக்கும் போது, பற்காரை சிறு சிறு துகள்களாக உடைந்து பற்கள் சுத்தம் ஆகிவிடும்.
பற்காரை படிந்துள்ள பற்களை கண்ணாடியில் நன்கு கூர்ந்து கவனித்தால், அந்த பற்களைச் சுற்றியுள்ள ஈறும் இறங்கியிருக்கும்; எலும்புகளும் தேய்ந்திருக்கும். பற்களை உறுதியாக பிடித்திருக்கும் எலும்புகள் தேயும்போது பற்களில் ஆட்டம் ஏற்படும். ஆனால், இந்த பற்களைச் சுற்றியும் பற்காரை படிந்து விடுவதால், பற்கள் கூட ஆடாமல் இருக்கும். சரி எப்படியோ பல் ஆடாமல் இருந்தால் போதும். பற்காரையை சுத்தம் செய்யாமல் வைத்துக் கொள்ளலாமே என்ற கேள்வி எழும்.
உண்மையில் பற்காரை கிருமிகளின் புகலிடம். நல்ல திடமான மெத்தையில் வசதியாக வாழ்ந்து கொண்டிருக்கும். துவக்கத்தில் பற்களை ஆடாமல் வைத்திருப்பதை போன்ற பிம்பத்தை ஏற்படுத்தினாலும், அது ஈறுகளுக்குள் தொடர்ந்து எலும்பையும், பல் புறத் திசுக்களையும் அரித்துக் கொண்டே இருக்கும். கடைசியில் சத்தம் இல்லாமல் பற்கள் முற்றிலுமாக விழுந்து விடும். ஆகையால் பற்காரையைப் படிய விடாமல் ஸ்கேலிங் செய்து கொண்டால், பற்களைக் காப்பாற்றிக் கொள்ளலாம்.
ஸ்கேலிங் செய்யாமல் இருந்தால் பல் சொத்தை, பல் கூச்சம், ஈறுகளில் ரத்தம் கசிதல், ஈறு இறங்குதல், பல் புறத்திசு நோய், வாய் துர்நாற்றம் முதலான பிரச்னைகள் ஏற்படும்.
ஒவ்வொரு நபரின் ஈறு மற்றும் வாய் ஆரோக்கியத்தின் அடிப்படையில் மாறுபடலாம். சிலருக்கு பற்காரை மூன்று அல்லது நான்கு மாதங்களில் படியலாம். சிலருக்கு புகை பிடிக்கும் பழக்கம் இருக்கும். டீ, காபி அடிக்கடி உட்கொள்பவர்களாக இருக்கலாம். இத்தகையவர்கள் அடிக்கடி ஸ்கேலிங் செய்து கொள்ள வேண்டியிருக்கும்.
ஸ்கேலிங் செய்த பின் சிறிய அளவில் பற்கூச்சம் ஏற்படலாம். அதே போல ஈறுகளில் ஒருவித மாற்றத்தை உணரலாம். இது தற்காலிகமானது தான். ஸ்கேலிங் முடித்த பின்னர் மவுத் வாஷ், பல் கூச்சத்திற்கு பிரத்யேக பற்பசை பயன்படுத்தலாம்.
டாக்டர் ஆர்.வி. அபராஜிதா
வேர் சிகிச்சை சிறப்பு பல் மருத்துவர்பூவிருந்தவல்லி97919 06962 drrvaparajitha@gmail.com
