PUBLISHED ON : ஆக 20, 2023

எதிர்பாராதவிதமாக இதயத் துடிப்பு நிற்கும் போது, மூளை, பிற உள்ளுறுப்புகளுக்கு ரத்த ஓட்டம் செல்வது தடைபடுகிறது. இதனால் மரணம் ஏற்படும் அபாயம் உள்ளது. இதயச் செயலிழப்பு என்பது, வயது, பாலினம், உடல் அமைப்பு உட்பட எந்த பாகுபாடும் இல்லாமல் யாரை வேண்டுமானாலும் பாதிக்கலாம்.
இதயச் செயலிழப்பிற்கான காரணத்தை குறிப்பிட்டு சொல்வது கடினம். உடனடியாக முதலுதவி செய்வதும், வராமல் தடுப்பதற்கான வழிமுறைகளை பின்பற்றுவதும் தான் பாதுகாப்பானது.
காரணங்கள்
எதிர்பாராத இதயச் செயலிழப்பிற்கு பல காரணிகள் இருந்தாலும், கொரோனரி ரத்தக் குழாய் நோய்கள், மாரடைப்பு, சீரற்ற இதயத் துடிப்பு, இதயத் தசைகளில் ஏற்படும் நோய்கள், பிறவியிலேயே ஏற்படும் இதயக் கோளாறுகள், சில மருந்துகளை தொடர்ந்து சாப்பிடுவது, இதய மின் அலைகளில் ஏற்படும் மாறுபாடுகள், மரபணு காரணிகள் போன்ற சிலவற்றை குறிப்பிடலாம்.
ஆரோக்கியமாக இருப்பவர்களுக்கும் எதிர்பாராத விதமாக இதயச் செயலிழப்பு ஏற்படலாம்.
முதலுதவி
சி.பி.ஆர்., எனப்படும் இதயம், நுரையீரலுக்கு உயிர்ப்பூட்டும் செயல். இதில், பாதிக்கப்பட்ட நபரின் மார்பு பகுதியில் அழுத்தம் கொடுத்து, தற்காலிகமாக மூளைக்கு ரத்த ஓட்டம் செல்வதற்கான வழியை செய்வது, நுரையீரலுக்கு ஆக்சிஜன் செல்வதற்கு செயற்கை சுவாசம் அளிப்பது, ஒருவர் பாதிக்கப்பட்டவுடன் உடனடியாக செய்ய வேண்டியவை.
சி.பி.ஆர்., முறையை சரியாகச் செய்வதால், முறையான மருத்துவ சிகிச்சை கிடைக்கும் வரையிலும் பாதிக்கப்பட்ட நபரை பாதுகாப்பாக வைத்திருக்க முடியும்.
ஏ.இ.டி., எனப்படும் தானியங்கி கருவி பொதுவெளியில் சுலபமாக கிடைக்கிறது. இதன் உதவியுடன் சீரற்ற இதயத் துடிப்பை இயல்பாக்க முடியும். மருத்துவ உதவி கிடைக்கும் வரை, சி.பி.ஆர்., உடன் இதையும் உபயோகிப்பது, உயிரை பாதுகாக்கும்.
வராமல் தடுக்க...
சமச்சீரான ஊட்டச்சத்துள்ள உணவு, தினசரி உடற்பயிற்சி, மது, சிகரெட் தவிர்ப்பது போன்ற முறையான வாழ்க்கை முறையை பின்பற்றுவது, மரபியல் காரணங்களால் இதயக் கோளாறு வரும் அபாயத்தில் இருப்பவர்கள், டாக்டரின் ஆலோசனைப்படி மருத்துவ பரிசோதனை செய்வது, எதிர்பாராத இதயச் செயலிழப்பை தடுக்கும். இதயப் பிரச்னைகளுக்காக மருந்து, மாத்திரைகளை டாக்டரின் அறிவுரைப்படி தவறாமல் எடுத்துக் கொள்வதும், உயர் ரத்த அழுத்தம், அதீத கொழுப்பு, ரத்த சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைப்பது, இதயச் செயலிழப்பின் அபாயத்தை வெகுவாகக் குறைக்கலாம்.
பயிற்சி
இதயச் செயலிழப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது, சி.பி.ஆர்., - ஏ.இ.டி., பயிற்சிகளை ஒவ்வொரு தனி நபரும் பெறுவது, அபாயகரமான சூழ்நிலையை எளிதாக கையாள உதவும்.
அலுவலகங்கள், அரசு, தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் என்று அனைத்திலும் தனி நபர்களுக்கு இந்தப் பயிற்சியை அளித்து, இதயச் செயலிழப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
எதிர்பாராத இதயச் செயலிழப்பு எதனால் ஏற்படுகிறது என்பதை தெளிவாக புரிந்து, ஒருங்கிணைந்து செயல்பட்டால், தனி நபரின் பாதுகாப்பை எளிதாக உறுதி செய்ய முடியும்.
டாக்டர் ஜி.செங்கோட்டுவேலு, இதய கோளாறுகள் சிறப்பு மருத்துவ ஆலோசகர், சென்னை. 94457 76666
