தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/மூட்டு வலிக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை அவசியமா?

மூட்டு வலிக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை அவசியமா?

மூட்டு வலிக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை அவசியமா?


PUBLISHED ON : டிச 17, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 17, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முழங்கால் மூட்டு வலி என்பது எந்த வயதிலும் வரலாம். வயதானால் தான் வர வேண்டும் என்பதில்லை. முழங்கால் மூட்டு வலி வந்தால், மூட்டு தேய்மானத்தினால் தான் வந்தது என்று உடனடியாக மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்ற அவசியமும் இல்லை. மாறாக, புதிய மருத்துவ தொழில்நுட்பமான, 'ஜாயின்ட் பிரிசர்வேசன் சர்ஜரி' வாயிலாக வலி நிவாரணம் பெறலாம்.

மூட்டு தேய்ந்தால் வலி வரும். அதற்காக வலி வரும் அனைவருக்கும் மூட்டு தேய்ந்து விட்டது என்று சொல்ல முடியாது. வலிக்கு பல காரணங்கள் உள்ளன. அதிக உடல் பருமனாலும் முழங்கால் மூட்டு தேய்ந்து போகலாம். கீழே விழுந்ததால் அடிபடுவது, அழற்சி, தொற்றுகளாலும் வலி வரலாம்.

எதிர்பாராமல் வரும் வலிக்கு, மூட்டு தேய்மானம் என்பதை விடவும், இவைகளில் ஏதேனும் பாதிப்பு உள்ளதா என்று பார்க்க வேண்டும். முழங்கால் மூட்டுகளில், 'மெனிஸ்கஸ்' என்ற ஜவ்வு உள்ளது. இது மூட்டுகள் தேயாமல் காப்பாற்றும் ஜவ்வு. வயதான காலத்தில் இந்த ஜவ்வு கிழிவதற்கும், விலகி போவதற்கும், மூட்டுகள் ஒன்றின் மேல் ஒன்று உராய்ந்து வலி வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

ஜவ்வில் ஏற்பட்ட சேதத்தை சரி செய்தாலே வலி சரியாகி விடும்.

முழங்கால் மூட்டு முழுதுமாக தேய்ந்து, ஊசி, மருந்து என்று எதனாலும் குணப்படுத்த முடியாது என்ற நிலையில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்யலாம். அதற்கு முன்பாக, 'ஆர்தோஸ்கோபி' முறையின் தனி பிரிவான ஜாயின்ட் பிரிசர்வேசன் முறையில் 'கீ ஹோல்' எனப்படும் நுண்துளை வாயிலாக கேமராவை செலுத்தி, என்ன பிரச்னை என்று பார்க்க வேண்டும். ஜவ்வு சிதைந்து, கிழிந்து இருந்தால், இதை சரிசெய்யும் போது வலி சரியாகும். பொதுவாக மெனிஸ்கஸ் வேர் பகுதியில் கிழிந்து விலகி இருக்கும். இதை பழைய நிலையில் வைத்தால் வலி குறைந்து இயல்பாக செயல்பட முடியும்.

சிலருக்கு ஜவ்வு புண்ணாகி இருக்கலாம், ரணமாகியிருக்கலாம். ஊசி வாயிலாக ஸ்டெம் செல் செலுத்தி இதை சரி செய்யலாம். முழங்கால் வலி உள்ள அனைவருக்கும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை சாத்தியப்படாதது போன்றே, ஸ்டெம் செல் சிகிச்சையும் அனைவருக்கும் செய்ய முடியாது.

இந்த புதிய தொழில்நுட்பம் வந்தபின், மூட்டு மாற்று அறுவை சிகிச்சைக்கான தேவை குறைந்து விட்டது.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை 20, 40, 60, 90 சதவீதம் என்று பாதிப்பின் அளவு எப்படி இருந்தாலும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மட்டுமே தீர்வாக இருந்தது.

டாக்டர் கோபிநாத் துரைசாமி

எலும்பு, மூட்டு மருத்துவ ஆலோசகர்,

சென்னை.

9698 300 300

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us