PUBLISHED ON : டிச 19, 2023

என் வலது கையின் நடு விரல், வழக்கத்தை விடவும் சிறியதாக இருக்கும். என் அப்பா, தாத்தா, அவரின் அப்பா என்று அனைவருக்கும் இது போலவே குட்டையான நடுவிரல் இருக்கிறது. இது பரம்பரையான விஷயமாக இருக்கவே நானும் குட்டையான நடு விரலோடு பிறந்த போது, இதை பெருமையாக நினைத்தது என் குடும்பம். நான் நன்றாக படிப்பதற்கு இந்த பரம்பரை விரல் தான் காரணம் என்று என் அம்மா சொல்வார்.
எனக்கும் என் மனைவிக்கும் நடந்தது பெற்றோர்களால் நிச்சயக்கப்பட்ட திருமணம். இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால் எந்த விதத்திலும் சொந்தம் கிடையாது. குழந்தை பெற்று கொள்ள திட்டமிட்டபோது, ஏழு முறை கருச்சிதைவு ஏற்பட்டது. முதல் குழந்தை உருவானபோது, 20 வாரங்களில் ஸ்கேன் செய்தோம். குழந்தைக்கு கால்கள், கைகள் வளராமல், வெறும் உடல் பாகம் மட்டும் இருந்தது. குழந்தை பிழைக்க வாய்ப்பே இல்லை என்றாலும், 24 வாரங்கள் ஆன கருவை கலைக்க முடியாது. வழக்கம் போல குழந்தை பெறத்தான் வேண்டும்.
மிகுந்த மன உளைச்சலில் இருந்த நான் எங்கே தவறு நடந்தது என்பது தெரிய, குழந்தைக்கு அதற்கான ஆய்வுகளை செய்தோம். என்னிடம் இருந்த குறையுள்ள மரபணுவை போன்றே என் மனைவியிடமும் இருந்தது. இரண்டும் சேர்ந்ததால், கை, கால்கள், இதயம், நுரையீரல் என்று எந்த உறுப்பும் வளராத குழந்தை உருவாகி உள்ளது. இதற்கு 'கிரீபி சிண்ட்ரோம்' என்று பெயர்.
என் மனைவியிடமும் அதே குறையுள்ள மரபணு இருந்தாலும், அவர்கள் குடும்பத்தில் யாருக்கும் குறை இல்லை. எங்கே தவறு நடந்தது என்று தெரிந்து கொள்ள முழுமையாக ஆராய்ச்சிகள் செய்தேன். என் அம்மா வழியில், அப்பா வழியில் அவர்களின் முன்னோர்கள் என்று ஆராய்ந்ததில், எல்லாரிடமும் இந்த மரபணு இருந்தது. சொந்தங்களுக்குள்ளேயே திருமணம் செய்து இருக்கிறார்கள். என் குழந்தை இப்படி உருவாக முக்கிய காரணம், என் அப்பா, தன் சகோதரியின் மகளான என் அம்மாவை மணந்திருக்கிறார். தற்போது எங்களுக்கு ஆரோக்கியமான இரு குழந்தைகள் உள்ளனர்.
என் சொந்த ஊரான மதுரை உட்பட தென் தமிழகத்தில் இது மிகவும் இயல்பான ஒன்று. அதே போன்ற பாகிஸ்தான் நாட்டிலும் இந்த பழக்கம் உள்ளது. அதனால் இது போன்று மரபணு தொடர்பான நோய்களும் பரவலாக உள்ளன. குறையுள்ள மரபணு இருக்கிறதா என்பதை ஆராய்ச்சி செய்ய அனைவராலும் முடியாது. ஆனால், குறைந்த பட்சம் ரத்த சொந்தங்களுக்குள் திருமணம் செய்ய நினைத்தால், ஒரு முறைக்கு பலமுறை யோசிக்க வேண்டும்.
டாக்டர் பால் மாணிக்கம்
குடல், இரைப்பை மருத்துவர், கலிபோர்னியா