PUBLISHED ON : ஜூலை 08, 2012
* வி.சி.சந்திரசேகர், அவனியாபுரம்: என் வயது 74. கடந்த 32 ஆண்டுகளாக, கை, கால், மூட்டு வலிக்காக தொடர்ந்து, வலி நிவாரணி மாத்திரை எடுத்து வருகிறேன். இதனால் பாதிப்பு வருமா?
உடல் வலிக்கு, நீண்ட காலம் தொடர்ந்து, வலி மாத்திரைகளை எடுப்பது மிகவும் தவறு. இதனால் பல வழிகளில், நம் உடல் நலத்திற்கு பாதிப்பு ஏற்படுகிறது. குறிப்பாக வயிற்றில் புண், ரத்தக் கசிவு, சிறுநீரக பாதிப்பு மிகவும் முக்கியமானது. மாரடைப்பை பொறுத்தவரை, வலி மாத்திரைகளால் மாரடைப்பும் ஏற்படலாம். எனவே நீங்கள், உடனடியாக வலி மாத்திரை களை நிறுத்தி விட்டு, உங்கள் டாக்டரை சந்தித்து, வலி எதனால் ஏற்படுகிறது என்பதை அறிந்து, அதற்கு ஏற்ப சிகிச்சை பெற வேண்டும்.
*பி. ராஜாமுகமது, ராமநாதபுரம்: எனக்கு, மூன்று ஆண்டுகளாக ரத்தக் கொதிப்பு உள்ளது. மூன்று வகை மருந்துகளை சாப்பிடுகிறேன். இருந்தும், ரத்தக் கொதிப்பு கட்டுப்பாட்டில் இல்லை. எனக்கு வயிற்றில், 'ஹெர்னியா' வந்துள்ளது. இதற்கு நான், ஆப்பரேஷன் செய்து கொள்ளலாமா?
ரத்தக் கொதிப்பு, ஒரு கொடூர நோய். இது, பல வழிகளில் உடல் உள்ளுறுப்புகளை பாதிக்கின்றன. குறிப்பாக மூளை, கண், இதயம், சிறுநீரகம் மற்றும் ரத்தநாளங்களை அதிகம் பாதிக்கும். எனவே, நீங்கள் ரத்தஅழுத்தத்தை சீர்செய்வதுதான் முதற்கட்ட நடவடிக்கையாக இருக்க வேண்டும். ஒருவருக்கு எந்த வயதிலும், எந்த நேரத்திலும் ரத்த அழுத்தம், 140/90க்கு கீழ், 120/80 என்ற அளவில் இருந்தாக வேண்டும். இதற்கு, தற்போது பக்கவிளைவில்லாத நவீன மாத்திரைகள் வந்துள்ளன. எனவே, ரத்தஅழுத்தத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தபின், டாக்டரின் ஆலோசனைப்படி தாராளமாக நீங்கள், 'ஹெர்னியா ஆப்பரேஷன்' மட்டுமின்றி, எந்த வகை, 'ஆப்பரேஷனை'யும் செய்து கொள்ளலாம்.

