PUBLISHED ON : ஆக 03, 2014

எனக்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்ததில், ஓரிடத்தில் 30 சதவீத அடைப்பு உள்ளதாக தெரியவந்தது. எனது டாக்டர் 4 வகை மருந்துகளை தந்துள்ளார். இதனை நான் அவசியம் எடுத்தே ஆக வேண்டுமா?
இருதயத்தில் இருக்கும் ரத்தநாளங்களில் அடைப்பு ஏற்பட்டு, அதனால் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டால் நெஞ்சுவலியாகவோ, மாரடைப்பாகவோ வெளிப்படும். பொதுவாக 70 சதவீதத்திற்கு மேல் அடைப்பு இருந்தால்தான், 'ஸ்டென்ட்', பைபாஸ் சர்ஜரி தேவைப்படும். அதற்கு குறைவாக இருந்தால் நெஞ்சுவலியோ, வேறு அறிகுறியோ இல்லாமல் இருக்கும்.
இருப்பினும் 30 சதவீத அடைப்பு இருந்தாலும் அவசியம் உங்களுக்கு மருந்து தேவைப்படும். ஏனெனில் இந்த அடைப்பு கூடாமல், வேறு அடைப்பும் ஏற்படாமல் இருக்க
இம்மருந்து உதவியாக இருக்கும். பலருக்கும் ரத்தநாள அடைப்பு
ஏற்படாமல் இருக்க, வருமுன் காக்கும் வகையில் ஸ்டேட்டின் வகை
மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. எனவே உங்களுக்கும் மருந்துகள் அவசியம் வாழ்நாள் முழுவதும் தேவைப்படும். அதுமட்டுமின்றி வாழ்க்கை முறை மாற்றமாக சரியான உணவுப் பழக்கம், தினசரி நடைப்பயிற்சியும் அத்தியாவசியமானது.
எனக்கு சில வாரங்களாக இடது தோள்பட்டையில் வலி ஏற்படுகிறது. இதற்காக வலிமாத்திரைகள் எடுத்துக் கொண்டால் சரியாகிறது. இது இருதய வலியாக இருக்கலாம் என நண்பர் கூறுகிறார். நான் என்ன செய்வது?
இடது தோள்பட்டையில் ஏற்படும் வலியை அலட்சியப் படுத்தவே கூடாது. நீங்கள் உடனடியாக ஒரு இருதய டாக்டரை சந்தித்து, அவசியம் ரத்தம், எக்கோ, டிரெட்மில் பரிசோதனைகளை செய்தாக வேண்டும். இப்பரிசோதனையின் முடிவுக்கு ஏற்ப உங்களுக்கு சிகிச்சை முறை அமையும். எக்கோ, டிரெட்மில் முடிவுகள் நார்மலாக, நீங்கள் எலும்பு சிகிச்சை நிபுணரை சந்தித்து, உங்களுக்கான வலி, எலும்பிலா, மூட்டிலா, நரம்பிலா அல்லது தசையிலா என
கண்டறிந்து, அதற்கேற்ப சிகிச்சை பெற வேண்டும்.
எனக்கு 4 ஆண்டுகளாக சர்க்கரை நோய் உள்ளது. இதற்காக 3 சர்க்கரை நோய் நிபுணர்களை சந்தித்துள்ளேன். ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமான மருந்து தந்துள்ளனர். இதனால் எனக்கு பக்கவிளைவும் ஏற்படுகிறது. நான் என்ன செய்வது?
சர்க்கரை நோய் என்பது, உடல் ஆரோக்கியத்தை மிகவும் பாதிக்கக் கூடிய ஒருநோயாகும். குறிப்பாக கண், மூளை, நரம்பு, சிறுநீரகங்கள், ரத்தநாளங்கள், இருதயம் போன்றவற்றை பாதிக்கக்கூடிய தன்மை படைத்தது. எனவே இப்பாதிப்பை தவிர்க்க ரத்தத்தில் சர்க்கரையின் அளவை, வெறும் வயிற்றில் 100 மி.கி.,க்கு கீழும், சாப்பிட்டு 2 மணி நேரத்திற்குப்பின் 140 மி.கி.,க்கு கீழும் வைத்திருப்பது அவசியம்.
சர்க்கரை நோய்க்கான முதற்கட்ட நடவடிக்கை வாழ்க்கை முறை மாற்றமே. மருந்துகளை பொறுத்தவரை தற்போது சிறந்த மருந்துகள் பல உள்ளன. எனவே எந்த வைத்தியத்திலும் மருத்துவர் மீது நம்பிக்கை வைப்பதே முக்கியமானது. முதலில் நீங்கள் ஒரு டாக்டரை தேர்ந்தெடுத்து அவருடன் கலந்து ஆலோசித்து, பக்கவிளைவை எடுத்துக் கூறி, சிகிச்சை பெறுவதே அறிவியல்பூர்வ அணுகுமுறையாகும். இதைவிட்டுவிட்டு பக்கவிளைவுக்காக டாக்டரை மாற்றுவது சரியான நடவடிக்கை அல்ல.
எனக்கு பைபாஸ் சர்ஜரி செய்து 2 ஆண்டுகளாகிறது. நான் சைக்கிள் ஓட்டலாமா?
பைபாஸ் சர்ஜரி என்பது இருதயத்தில் இருக்கும் ரத்தநாள அடைப்பை நெஞ்சில் இருந்தோ, காலில் அல்லது கையில் இருந்தோ ரத்தநாளங்களை எடுத்து இருதயத்தில் பொருத்தும் அறுவை சிகிச்சையாகும். பைபாஸ் சர்ஜரி செய்தவருக்கு ஆண்டுக்கு ஒருமுறை, முழுபரிசோதனையாக ரத்தம், சிறுநீர், மார்பக எக்ஸ்ரே, எக்கோ, டிரெட்மில் பரிசோதனைகள் செய்யப்படும்.
இவை அனைத்தின் முடிவுகளும் நார்மலாக இருந்தால் நீங்கள் சைக்கிள் ஓட்டலாம். ஆனால் எந்த ஒரு வேலையையும் அதிக சிரத்தையின்றி நிதானமாக செய்வதே சிறந்தது. திடுதிப்பென கனமான பொருளை துாக்குவது, மேடான பகுதியில் ஏறிச் செல்வது போன்ற செயல்களை
அவசியம் தவிர்த்தாக வேண்டும்.
- டாக்டர் சி.விவேக்போஸ்,
மதுரை. 0452 233 7344

