PUBLISHED ON : பிப் 17, 2013
எனது 7வயது மகனுக்கு சளி, இருமல் அதிகம் இருந்தது. அதற்கு அசைவ உணவு எடுத்தால் நல்லது, சளிபிடிக்காது எனக் கூறுகிறார் எனது தாய். இதுசரியா?
நம்நாட்டில் செய்யப்படும் அசைவ உணவு உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை அதிகப்படுத்துகிறது. உடல் பருமன் உருவாக அசைவ உணவு ஒரு முக்கிய காரணமாக உள்ளது. வெளிநாடுகளில் குழந்தைகளின் படிப்புக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்களோ, அதே அளவு முக்கியத்துவம் உடற்பயிற்சிக்கும், விளையாட்டுக்கும் கொடுக்கின்றனர். ஆனால் நம்நாட்டில் இதில் குறைவான விழிப்புணர்வே உள்ளது. இதுபோல அசைவ உணவு குறித்த விழிப்புணர்வும் குறைவே. நம் இந்தியாவில் இருதய நோய், நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்ட மக்கள் அதிகம் உள்ளனர். இதற்கு முக்கிய காரணம் ஆரோக்கியமற்ற உணவு முறையும், உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கை முறையும்தான்.
பொதுவாக நம் உடல் மற்றும் ஜீரண மண்டலம் சைவ உணவிற்காகவே வடிவமைக்கப் பட்டுள்ளது. அதனால் சைவ உணவே நல்லது. உங்கள் குழந்தைக்கு சைவ உணவு மற்றும் விளையாட்டின் முக்கியத்துவத்தை கற்றுக் கொடுங்கள். வாரம் ஒருமுறை எண்ணெய் குறைவாக பயன்படுத்தி, அசைவ உணவு எடுத்துக் கொண்டால் தவறில்லை.
எனது ஆறு வயதான குழந்தைக்கு, 3 ஆண்டுகளாக மூச்சுத் திணறல் உள்ளது. அவனுக்கு வாழ்நாள் முழுவதும் இம்மூச்சுத் திணறல் இருக்குமா? அவன் ஒரு ஆஸ்துமா நோயாளியாகவே இருப்பானா?
குழந்தைகளுக்கு உள்ள ஆஸ்துமாவை, 'ஹைபர் ரீயாக்டிவ் ஏர்வே டிசீஸ்' என்பர். 80 சதவீதம் முதல் 90 சதவீத குழந்தைகளுக்கு அவர்கள் வளர, வளர நுரையீரல் திறன் முன்னேற்றம் அடைந்து ஆஸ்துமா மறைந்துவிடும். ஒரு சில குழந்தைகளுக்கு ஆஸ்துமா சரியாகிவிடும், ஆனாலும் சில ஆண்டுகள் கழித்து, திரும்ப வருவதற்கு வாய்ப்பு உள்ளது. பெரும்பாலோருக்கு முழுமையாக சரியாகிவிடும். ஆனாலும் விட்டுவிடாமல், இன்ஹேலர் எடுத்துக் கொள்வது நல்லது.
பொதுவாக தாய்மார்களுக்கு இன்ஹேலர் பற்றிய பயம் அதிகமாகவே உள்ளது. நம் கண்களுக்கு சொட்டு மருந்து இடுவது போலவே, நம் நுரையீரலுக்குள் மருந்தை செலுத்த இன்ஹேலர்கள் பயன்படுகின்றன. அதனால் இன்ஹேலர் பற்றி பயமே தேவையில்லை. உங்கள் குழந்தைக்கு அலர்ஜி இருந்தால், அதை தவிர்க்க இன்ஹேலர் உதவியாக இருக்கும்.
நம் நாட்டில் நுரையீரல் சிகிச்சை முறையில் நாம் அடைந்துள்ள முன்னேற்றம் பற்றி கூறுங்களேன்?
மருத்துவத் துறையில் இந்தியா பெரும் வளர்ச்சி கண்டுள்ளது. வெளிநாடுகளில் கிடைக்கும் மருந்து, நம்நாட்டில் 25 சதவீதம் குறைவான விலையில் கிடைக்கிறது. மேலும் தேவைக்கு ஏற்ப மருந்துகள் அதிகளவில் கிடைக்கிறது. நுரையீரல் துறையிலும், வெளிநாடுகளுக்கு இணையாக நம் நாட்டிலும், அதிதீவிர நுரையீரல் சிகிச்சை அளிக்க முடிகிறது. நுரையீரல் நோயை கண்டறிய பல நவீன இயந்திரங்களும், நவீன பரிசோதனை முறைகளும் கிடைக்கிறது. வெளிநாடுகளில் செய்யப்படும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை கூட, நம்நாட்டில், நம் டாக்டர்கள் வெற்றிகரமாக செய்து முடித்துள்ளனர். மேலும் எந்த ஒரு புதுமையான சிகிச்சை முறை வெளிநாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டாலும், அதே சிகிச்சை முறை, நம்நாட்டிலும் உடனே செயல்படுத்தப்படுகிறது.
- டாக்டர் எம். பழனியப்பன்,
மதுரை. 94425-24147