PUBLISHED ON : பிப் 20, 2013

மதுரை: குறட்டை நோயை கவனிக்காமல் விட்டுவிட்டால் இருதய நோய்க்கு வழிவகுக்கும் என்று மதுரை டாக்டர் அருண் கணேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார். குறட்டை நோயை முற்றிலும் ஒழிக்கும் ஆபரேஷனுக்காக கேபலேட்டர் கருவி அறிமுக நிகழ்ச்சி மதுரை கே.புதூரில் உள்ள ஓம் சக்தி இஎன்டி மருத்துவமனையில் நடைபெற்றது. இந்த நவீன கருவி குறித்தும், குறட்டை நோயின் ஆபத்து குறித்து டாக்டர் கே.அருண் கணேஷ் தெரிவித்ததாவது:
நாம் தூங்கும் பொழுது தொண்டையில் உள்ள மேல் அன்னச்சதையின் மாறுபட்ட அசைவுகளாலும், தொண்டையின் உள்புற விட்டத்தின் அளவு குறைவாக இருப்பதாலும் அல்லது மூக்கின் உட்புறத்தில் உள்ள அடைப்பாலும் ஏற்படக்கூடிய மாறுப்பட்ட சப்தமே குறட்டை. குறட்டையை கவனிக்காமல் விட்டு விட்டால் தூங்கும் போது ஏற்படும் மூச்சு அடைப்பு நோய் வர அதிகவாய்ப்புள்ளது. இந்த நோய் உள்ளவர்கள் இதைக் கவனிக்காமல் விட்டு விட்டால் இரத்த அழுத்தம் இருதய நோய்கள், மற்றும் பக்கவாதம் போன்ற நோய்கள் மிகவும் எளிதாக வர வழிவகுத்துவிடும்.
தூங்கும்போது சீரான சுவாசம் பெற கத்தியின்றி, இரத்தமின்றி அதிகவலியின்றி நவீன அறுவை சிகிச்சையான ‘கோபலேசன்” முறையில் அருமையான சிகிச்சை பெற்று குறட்டையில் இருந்து நிரந்தரத் தீர்வு பெற்று நாமும் நிம்மதியாகத் தூங்கி சுற்றத்தாரையும் நிம்மதியாக வாழ வழி வகுகக்கலாம். குறட்டையை சாதாரணமாகக் கருதாமல் உயிருக்கே ஆபத்தான மூச்சடைப்பு நோய்க்கான (அப்ஸ்டரக்டிவ் சிலீப் அப்னியா) எச்சரிக்கை மணியாகக் கருதி ஆரம்ப நிலையிலேயே நவீன கோபலேட்டர் அறுவை சிகிச்சை செய்து ஆரோக்கியமாக வாழலாம்.இந்த கோபலேட்டர் அறுவை சிகிச்சை, காது, மூக்கு, தொண்டை பிற நோய்களான டான்சில்ஸ், அடினாஸ்டு, மூக்கின் நீரச்சதை மற்றும் குரல்வளை நோய்களுக்கு ஒரு வரப்பிரசாதம்.
இவ்வாறு அவர் கூறினார்.