PUBLISHED ON : பிப் 12, 2012
பத்தாம் வகுப்பு படிக்கும் என் மகனுக்கு அடிக்கடி வாய்ப்புண் வருகிறது. என்ன செய்வது?
தற்போது நிறைய குழந்தைகளுக்கு தேர்வு நேரங்களில் மனஅழுத்தத்தால் வாய்ப்புண் ஏற்படுகிறது. இதை ஸ்ட்ரெஸ் /ஆப்தஸ் அல்சர் என்பர். இப்புண் நீள்வட்டமாக உதடுகளின் உள் மற்றும் கன்னத்தில் ஏற்படலாம். எரிச்சல் அதிகமாக இருக்கும். இதை தவிர்க்க சத்தான கீரை மற்றும் பழவகைகள் சாப்பிட வேண்டும். நல்ல ஆழ்ந்த தூக்கம், நிறைய தண்ணீர் குடிப்பது, மனஅழுத்தம் இல்லாமல் தேர்வை எதிர்கொள்வது முக்கியம். இதைத் தவிர வயிற்றில் அமிலத்தன்மை போன்ற பிரச்னை, சத்துக்குறைபாடு இருப்பினும் வாய்ப்புண் ஏற்படலாம். பல் டாக்டரின் பரிந்துரைப்படி வைட்டமின் மாத்திரைகள் மற்றும் ஆயின்மென்டுகள் உபயோகிக்கலாம். இவ்வகை வாய்ப்புண் ஆறுவதற்கு ஒரு வாரம் ஆகும்.
என் வயது 60. பற்கள் அனைத்தும் தேய்ந்து உள்ளன. சூடான, குளிர்ச்சியான பானங்கள் குடித்தால் கூச்சம் ஏற்படுகிறது. இதற்கு என்ன செய்யலாம்?
பற்கள் மூன்று பகுதிகளால் உண்டானது. அவை எனாமல் என்னும் கடினமான மேற்பரப்பு, அதனடியில் டென்டின் என்னும் நுண்ணிய நரம்புகள் அதிகம் உள்ள பகுதி, அதற்கும் கீழ் பல்லிற்கு ரத்தக்குழாய்கள் மற்றும் சத்துக்கள் அளிக்கக் கூடிய மற்றும் நரம்புகள் உள்ள பற்கூழ் பகுதி. பற்கள் தேய்வதற்கு நிறைய காரணங்கள் உள்ளன.இயற்கையாக வயதாவதால் ஏற்படும் தேய்மானம், பற்களை இடவலமாக கடினமான பிரஷ் மூலம் பல ஆண்டுகளாக பல் துலக்குவது, அதிக அமிலத்தன்மை உள்ள உணவு வகை உட்கொள்வது போன்றவை காரணம். முதலில் பற்கூச்சத்தை தவிர்க்க கூடிய பற்பசைகளை உபயோகிக்கலாம். சில இடங்களில் குழியாக உள்ள பற்களை சிமென்ட் மூலம் அடைக்கலாம். பற்களின் மீது 'கேப்' செய்து பொருத்துவதால் பல்
கூச்சத்தை நிரந்தரமாக போக்கலாம்.
- டாக்டர் எஸ்.முத்துராமன்
மதுரை. 94430-61160
