PUBLISHED ON : ஆக 31, 2020

கொரோனா வைரஸ் பாதித்தவர்களில், 10 சதவீதம் பேருக்கு, நுரையீரலில், வைரஸ் இருந்த இடத்தில், 'பைப்ரோசிஸ்' எனப்படும் கட்டி அல்லது ஆழமான தழும்பு உருவாகி விடுகிறது.'சார்ஸ், ஹெச்1 என்1' போன்ற வைரசுகள், நுரையீரலில் பாதிப்பை ஏற்படுத்தும்; ஆனால், இந்த அளவிற்கு தழும்பையோ, கட்டியையோ ஏற்படுத்தியதில்லை.
சிலருக்கு அந்த இடம் தேங்காய் நார் போல வறண்டு காணப்படுகிறது. இப்படி இருக்கும் இடத்தில், செல்கள் செயலிழந்து இருப்பதால், ஆக்சிஜன் செல்லாது; இதனால், உடம்பில் அதிக அளவில், கார்பன் டை ஆக்சைடு தேங்கி விடும். குறிப்பிட்ட அளவிற்கு மேல் கார்பன் டை ஆக்சைடு அதிகமாகும் போது, மூச்சுத் திணறல் ஏற்படும்.
'சிடி ஸ்கேன்' செய்து பார்த்தால், நுரையீரலில் எந்த அளவு, எந்தெந்த இடங்களில் எல்லாம் கட்டி, தழும்பு இருக்கிறது என்று தெளிவாக தெரியும். எங்கோ ஓரிரு இடத்தில் சிறிய தழும்பு, கட்டி இருந்தால், தானாக வே சரியாகி விடும்; நிறைய இடங்களில் இருந்தால், அதற்கேற்ப சிகிச்சை தேவைப்படும்.
கொரோனா பாதிப்பிற்கு மருத்துவமனையில் இருக்கும் போது, மருந்து, செயற்கை சுவாசம் தருவதால், இந்த பாதிப்பு தெரியாது; ஆனால், வீட்டிற்கு சென்ற சில நாட்களில், பாதிப்பு வெளியில் தெரியலாம். நுரையீரலில் தழும்பு, கட்டி ஏற்பட்ட, 10 சதவீதம் பேரில், 70 சதவீதம் பேருக்கு, பாதிப்பு நிரந்தரமாக இருந்து விடுகிறது.
சிறிது துாரம் நடந்தாலே அலுப்பு, மூச்சு விடுவதில் சிரமம், 10 படிக்கட்டுகள் ஏறியதும் மூச்சுத் திணறல், 100 மீட்டர் நடந்ததும், சற்று உட்கார்ந்து கொள்ள வேண்டும் என்ற உணர்வு இவையெல்லாம், ஆக்சிஜன் குறைவாக இருப்பதன் அறிகுறியாக இருக்கலாம். 'பல்ஸ் ஆக்சி மீட்டர்' உதவியுடன், ஆக்சிஜன் எவ்வளவு இருக்கிறது என்று பார்த்து, 90க்கு குறைவாக இருந்தால், டாக்டரின் ஆலோசனை தேவை.
நுரையீரலில் பாதிப்பு இருப்பது உறுதியானதும், மருத்துவரின் ஆலோசனைகளை தொடர்ந்து பெறுவது, பல்ஸ் ஆக்சி மீட்டர் உதவி யுடன், தினமும் ஆக்சிஜன் அளவை கண்காணிப்பது, தவறாமல் சுவாசப் பயிற்சி, காற்றோட்டமான இடத்தில் இருப்பது, முடிந்த அளவு, 'ஏசி'யை தவிர்ப்பது போன்றவற்றை தவறாமல் கடைப்பிடிப்பது அவசியம்.
டாக்டர் கோவினி பாலசுப்ரமணியன்,
நுரையீரல் சிறப்பு மருத்துவர், குளோபல் ஹெல்த் சிட்டி, சென்னை.
044 - 4477 7000

