PUBLISHED ON : ஆக 30, 2020

குழந்தைகளுக்கு கண்களில் அடிபடுவது பற்றி, சில விபரங்களை பகிர்ந்து கொள்கிறேன். பொதுவாக, குழந்தைகளுக்கு கண்களில் காயம் எப்படி ஏற்படுகிறது என்று கேட்டால், பள்ளியில் சக குழந்தைகளுடன் விளையாடும் போது, அடிக்கடி கண்களில் அடிபட்டு, காயம் ஏற்படுவதாக பெற்றோர் கூறுவர்; ஆனால், உண்மை அதுவல்ல.
'பெரும்பாலான குழந்தைகளுக்கு, கண்களில் அடிபடுவது, வீட்டில் விளையாடும் போது அல்லது வீட்டில் இருக்கும் நேரங்களில் தான்' என, எங்களுடைய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
சாலை விபத்து
கடந்த ஆண்டு முழுதும், கண்களில் காயம் பட்டு வந்த குழந்தைகளிடம், நாங்கள் நடத்திய ஆய்வில், 65 சதவீத குழந்தைகளுக்கு, வீட்டில் இருக்கும் நேரங்களில் தான் கண்களில் அடிபட்டு, அதன் விளைவாக, பல பிரச்னைகள் ஏற்படுகின்றன. வெறும், 25 சதவீதம் குழந்தைகளுக்கு மட்டுமே, பள்ளியில் இருக்கும் நேரத்தில், கண்களில் காயம் ஏற்படுகிறது.
அதிலும், பெண் குழந்தைகளைக் காட்டிலும், ஆண் குழந்தைகளுக்குத் தான், மூன்று மடங்கு அதிகமாக கண்களில் காயம் ஏற்படுகிறது. 10 சதவீத குழந்தைகளுக்கு, சாலை விபத்துகளில் கண் பாதிப்பு ஏற்படுகிறது.கொரோனா வைரஸ் காரணமாக, கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக, குழந்தைகள் வீட்டிலேயே இருக்கின்றனர்.
அதனால், இந்த நேரத்தில் இது பற்றி பேசுவது சரியாக இருக்கும். பள்ளிக்கு செல்லாமல் இருக்கும் குழந்தைகளை, 'ஆன்லைன்' வகுப்புகள் நடக்கும் நேரம் தவிர, மற்ற நேரங்களில் கண்காணிக்காமல் விட்டு விடும் அபாயம் அதிகம் உள்ளது. பள்ளிகளில் இருந்தால், ஏதோ ஒரு வகையில், ஆசிரியர்களிடம், குழந்தைகளுக்கு பயம் இருக்கும்; கண்காணிப்பு வளையத்திற்குள்ளேயே இருப்பதால் அடிபடுவது குறைவு.
எனவே, வீட்டில் இருக்கும் நேரங்களில் குழந்தைகள் என்ன செய்கின்றனர், எதை வைத்து விளையாடுகின்றனர் என்பதை கண்காணித்தபடியே இருக்க வேண்டும். பெரியவர்களுக்கு கண்களில் அடிபடுவதற்கும், குழந்தைகளுக்கு கண்களில் காயம் ஏற்படுவதற்கும், சிகிச்சை உட்பட அனைத்திலும் அதிக வேறுபாடு உள்ளது. குழந்தைக்கு, கண்களில் மிக லேசாக அடிபட்டு, சிறிய காயம் ஏற்பட்டாலும், சிகிச்சையின் போது, கண்களை சுற்றி மட்டும் மரத்து போகும் மருந்து போடாமல், பொது மயக்க மருந்து தர வேண்டும்.
முழுமையாக வளர்ச்சி அடையாத கண்கள் என்பதால், சிகிச்சைக்கு பின்னும் குழந்தைக்கு முழுமையாக பார்வை கிடைக்கும் என்று சொல்ல முடியாது. எதிர்பாராத விதமாக குழந்தையின் கண்களில் அடிபட்டு விட்டால், பதற்றம் அடைய வேண்டாம். கை வைத்தியம் அல்லது வீட்டில் ஏற்கனவே வேறு பிரச்னைக்கு வாங்கிய சொட்டு மருந்து என, எதையும் போடக் கூடாது.
கண்களில் ஏதாவது ஒட்டி, குத்தி இருக்கிறதா என்று பார்த்து, அதை வெளியில் எடுக்க முயற்சி செய்வதோ, கண்களுக்கு அழுத்தம் கொடுப்பதோ தவறு.
வருமுன் காப்போம்
கண்களில் அடிபட்டவுடன், அருகில் இருக்கும் கண் டாக்டரிடம் அழைத்து செல்ல வேண்டும். தற்போதைய சூழலில், கண் மருத்துவமனைக்கு தாமதிக்காமல் அழைத்து சென்று விட வேண்டும். வருமுன் காப்பதே சிறந்தது என்பதால், குழந்தைகள் விளையாடும் இடங்களில், கூர்மையான பொருட்கள் இல்லாமல் பார்த்துக் கொள்வது, சுத்தமாக பராமரிப்பது.
பாதுகாப்பான பொருட்களுடன், குழந்தைகள் விளையாடுகின்றனரா என்று கவனிப்பது, அதிக நேரம் அவர்களை தனிமையில் விடாமல் இருப்பது, முடிந்த வரை பெற்றோரின் கண்காணிப்பில் விளையாட அனுமதிப்பது நல்லது. குழந்தைகள் அதிக நேரம் இருக்கும் இடங்களை துாய்மையாக பராமரிப்பது, அதன் அவசியத்தை அவர்களுக்கும் கற்றுத் தருவது, இந்த வைரஸ் காலத்தில் மிகவும் அவசியம்.
டாக்டர் வி.பி.மீரா லட்சுமி,
குழந்தைகள் நல கண் மருத்துவர்,
மதுரை.
0452 - 4356500

