உடலோடு நிரந்தரமாக பொருத்த... 'த்ரீ டி பிரிண்டிங்' செயற்கை உறுப்பு!
உடலோடு நிரந்தரமாக பொருத்த... 'த்ரீ டி பிரிண்டிங்' செயற்கை உறுப்பு!
PUBLISHED ON : ஆக 27, 2020

''தீ விபத்தில் கருகும் தோலை, பிளாஸ்டிக் சர்ஜரியில்தான் சரி செய்ய முடியும். தோல் கருகிய இடத்தில் வேறு தோல் பொருத்தி, பழைய நிலைக்கு கொண்டு வரலாம்,'' என்கிறார் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை சிறப்பு மருத்துவர் பகவத்குமார்.
பிளாஸ்டிக் சர்ஜரி என்றால் என்ன?
விபத்தில் தோல் மற்றும் சதை பகுதி சிதைந்து விட்டால், நம் உடலில் வேறு பகுதியில் இருந்து சதை எடுத்து, பாதிக்கப்பட்ட இடத்தில் பொருத்தி, சரி செய்வதே பிளாஸ்டிக் சர்ஜரி. எலும்பு பாதிக்கப்பட்டால் வேறு உறுப்பில் இருந்து, எலும்பை எடுத்து பொருத்துகிறோம். இல்லை என்றால் செயற்கையாக உருவாக்கி பொருத்துகிறோம்.
தீ விபத்துகளில் உடல் கருகியவர்களுக்கு, இந்த சிகிச்சை பலன் தருமா?
தீ விபத்தில் உடல் தோல் கருகி விடும் போது, உடல் உறுப்புகள் செயல்பட முடியாத படி தோல் சுருங்கி, இழுத்துக் கொள்ளும். அதை பிளாஸ்டிக் சர்ஜரியில்தான் சரி செய்யமுடியும். தோல் கருகிய இடத்தில் வேறு தோல் பொருத்தி, பழைய நிலைக்கு கொண்டு வரலாம்.
காஸ்மெட்டிக் சர்ஜரியில், முகம் மற்றும் உடல் சீரமைப்பு எவ்வாறு செய்யப்படுகிறது?
மூக்கு கோணல், தோல் சுருக்கம், தாடை அமைப்பில் மாற்றம், உதட்டு பிளவு உள்ளிட்ட பிரச்னைகளை, காஸ்மெட்டிக் சர்ஜரியில் சரி செய்து கொள்ளலாம். தொந்தி பெரிதாக இருந்தால், அதையும் சீர் செய்யலாம்.
பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்வதால், பின் விளைவுகள் ஏற்படுமா?
இந்த சர்ஜரியை பொறுத்தவரை, பெரிய பாதிப்புகள் எதுவும் வர வாய்ப்பில்லை. உதாரணமாக, விபத்தில் விரலை இழந்தவருக்கு, வேறு ஒரு விரலை எடுத்து பொருத்துகிறோம். வேறு ஒரு விரலை எடுப்பதால், செயல்பாட்டில் எந்த பாதிப்பும் இருக்காது. கேன்சரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யும் போது, சில பிரச்னைகள் இருக்கும். அதையும் சரி செய்து கொள்ள முடியும்.
பிறவி குறைபாட்டை, இந்த சர்ஜரியில் சரி செய்ய முடியுமா?
பிறக்கும்போது, சில குழந்தைகளுக்கு ஆறு விரல்கள் இருக்கும்.விரல்கள் ஒட்டிய நிலையில் பிறகும். சிலருக்கு காதுகள் இருக்காது; சில குழந்தைகள் சுருண்ட காதுகளுடன் பிறக்கும். இதை எல்லாம் சரி செய்யலாம். ஒரு வயது முதல் நான்கு வயதுக்குள், சர்ஜரி செய்து விட வேண்டும்.
பிளாஸ்டிக் சர்ஜரியில் ஏற்பட்டுள்ள, நவீன வளர்ச்சி பற்றி சொல்லுங்களேன்?
செயற்கை உறுப்பு பொருத்துவதில், 'த்ரீ டி பிரிண்டிங்' என்ற புதிய முறை இப்போது வந்துள்ளது. அதாவது, ஒரு உறுப்பை மெட்டல் மற்றும் சிலிக்கான் மெட்டீரியல் பயன்படுத்தி, செயற்கையாக செய்து பொருத்தலாம். இதை, 'ஆர்ட்டிபிசியல் ஆர்கன்' என்று சொல்லலாம். இது, உடலோடு நிரந்தரமாக பொருத்தப்படும் உறுப்பாகும்.
இந்த அறுவை சிகிச்சைக்கு, காப்பீட்டு திட்டத்தில் அனுமதி உண்டா?
பிளாஸ்டிக் சர்ஜரியை பொறுத்தவரை, அரசு காப்பீடு மற்றும் எல்.ஐ.சி., காப்பீட்டு திட்டத்தில், அனுமதி உள்ளது. காஸ்மெட்டிக் சர்ஜரிக்கு அனுமதி இல்லை. உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளுக்கு அனுமதி உள்ளது.
டாக்டர் பகவத்குமார்
9786686978
drsbkumar@gmail.com

