PUBLISHED ON : மே 05, 2020

இன்றைய சூழலில், மூன்று விதமான பிரச்னைகளால் மனநல பாதிப்பு ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது.முதலாவது, தனிமைப்படுத்துதல். இந்த வார்த்தையே, நம் அனைவருக்கும் புதிது. இதுவரையிலும், இப்படிப்பட்டசூழலில் நாம் இருந்ததில்லை.அதிலும், கடந்த, 20 ஆண்டுகளில், மொபைல் போன், சமூக ஊடகங்கள், சமூக வலைதளங்கள் என, எல்லா நேரமும், ஏதோ ஒன்றுடன் அல்லது ஒருநபருடன், தொடர்பிலேயே இருந்திருக்கிறோம்.எதிர்பாராமல், 'தனித்திருங்கள்; அவசிய வேலைக்கு வெளியில் சென்றாலும், யார் அருகிலும் நெருங்காமல், 1 மீட்டர் இடைவெளி விட்டு நில்லுங்கள்...' என்று சொன்னவுடன், பெரும்பாலானவர்கள் பதறி விட்டனர். அதனால் தான், ஊரடங்கு விதியை சரியாகப் பின்பற்றஇயலவில்லை.
இரண்டாவது, எந்த விஷயத்திற்காக தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறோமோ, அது குறித்து, அளவுக்கதிகமான தகவல்கள், ஒவ்வொரு நிமிடமும் வந்துகுவிகின்றன.மீண்டும் மீண்டும், ஒரு விஷயத்தைப் பற்றியே, பல கோணங்களிலும் தகவல்கள் வந்து குவியும் போது, அதை இயல்பாக எதிர்கொள்ள முடியாமல், குழம்பி விடுகிறோம். விளைவு, அந்த விஷயத்தை நினைத்தாலே பீதி, பதற்றம்ஏற்படுகிறது.மூன்றாவது, நமக்கு மட்டும் ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்னை என்றால், பல விதங்களிலும், பல தரப்பட்ட நபர்களிடம் ஆலோசனைகளும், உதவிகளும் கிடைக்கும். ஆனால், 'கொரோனா'வை பொறுத்தவரை, உலகம் முழுவதையும் ஒரே நேரத்தில்பாதித்துள்ளது.
எனவே, 'எனக்கு ஒரு பிரச்னை...' என்று, யாரிடமும் பிரத்யேகமாக சொல்ல முடியாது. 'நம் நிலைமை என்னவாகுமோ...' என்ற பயம் அனைவருக்கும் இருக்கிறது. இந்த மூன்று விஷயங்களால், மனப் பதற்றம் அதிகரித்துள்ளது.அதிலும், ஏற்கனவே மனப் பதற்றம், மன பயம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டு இருந்தவர்களுக்கு, இந்த சூழ்நிலையில், பிரச்னை மேலும் அதிகரித்து உள்ளது.
வைரஸ் தொற்றை தவிர்க்க, அனைவரும் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற நிலை வந்தவுடன், எங்கள் மருத்துவமனையில், தொலைபேசி மற்றும் 'ஆன்லைன்' வாயிலாக, மனநல ஆலோசனைகளை வழங்கி வருகிறோம்.எங்களுக்கு வரும் பெரும்பாலான அழைப்புகள், எதிர்பாராத நேரத்தில், தங்களுக்கு பய உணர்வு வருவதாகவும், பதற்றத்தை கட்டுப்படுத்த இயல வில்லை என்றும் சொல்கின்றனர். 'இனி என்னவாகுமோ...' என்ற பயம் இருப்பதாக கூறுகின்றனர்.
மனப் பதற்றம், மன பயம் போன்ற பாதிப்புகள் இருப்பவர்களுக்கு, தலைவலி, படபடப்பு, மூச்சு விடுவதில் சிரமம், செரிமானக் கோளாறு என, உடலளவில் சில அறிகுறிகள் தோன்றலாம்.இவை, வைரஸ் தொற்றால் அல்லது மனநல பாதிப்பால் ஏற்பட்ட அறிகுறியா என்பதை, பாதிக்கப்பட்டவர் பேசும்போது மனநல மருத்துவரால் கண்டறிய முடியும்.சிலர் போனில் பேசும் போது, 'இவ்வளவு நேரம் நன்றாக இருந்தேன்; சட்டுன்னு மூச்சு விட முடியவில்லை; படபடப்புஅதிகமாக உள்ளது...' என்றுபதறுகின்றனர்.
இதற்கு காரணம், தொடர்ந்து வைரஸ் பற்றிய எதிர்மறை செய்திகளையே கேட்பது!பயம் இருப்பது அவசியம். அப்போது தான் கவனமாக, நேர்மையாக செயல்பட முடியும். சிலர், 'நம்மை தொற்று என்ன செய்து விட முடியும்?' என்று அலட்சியமாக உள்ளனர்; சிலர் அதீத பயத்துடன் இருக்கின்றனர். இந்த இரண்டுமே தவறு.ஒரு விஷயத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நோய் தொற்று பரவாமல் இருக்க, நம்மை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமே தவிர, அதற்காக, யாருடனும் பேசாமல் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. தனித்து இருப்பதற்கும், தனிமையில் இருப்பதற்கும் நிறைய வேறுபாடு உள்ளது.நண்பர்களுடனும், உறவினர்களுடனும் தொலைபேசியில் அல்லது 'வீடியோ கால்' வாயிலாக பேசலாம்; மகிழ்ச்சியான, பழைய நினைவுகளை பகிர்ந்து கொள்ளலாம்.
அப்படி பேசுகையில், திரும்பத் திரும்ப, கொரோனா வைரஸ் பற்றியும், அது குறித்த செய்திகள் பற்றியும் பேசாமல், நமக்கு விருப்பமான, இரு தரப்பிலும் பொதுவான விஷயங்களை பேசலாம். எல்லா நேரமும், செய்தி சேனல்கள் பார்க்காமல், விருப்பமான வேறு நிகழ்ச்சிகளை பார்க்கலாம்.குழந்தைகள் வெளிநாட்டில், 'செட்டில்' ஆகி, இங்கு தனிமையில் இருக்கும் முதியவர்களுக்கு, வைரஸ் தொற்றை தவிர்த்து, எதிர்பாராமல் வேறு ஏதேனும் உடல் பிரச்னைகள் வந்து விட்டால், என்ன செய்வது என்ற பயம் உள்ளது.
இந்த இக்கட்டான நேரத்திலாவது, தினமும் ஒரு முறை வெளிநாட்டில் வசிக்கும் மகனோ, மகளோ பெற்றோருடன் பேச வேண்டும்; அதிலும், 'வீடியோ' அழைப்புகள் மூலம் முகத்தை பார்த்து பேசினால், அவர்களின் பதற்றம் குறையும்.காலையில் ஒரு முறை, மாலையில் ஒரு முறை செய்திகளை தெரிந்து கொண்டால் போதும் என்ற கட்டுப்பாடு, நமக்குள் இருப்பது நல்லது.வாசிப்புஇந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, செய்தித்தாள்களை முழுமையாக படிப்பது, நல்ல புத்தகங்களை வாசிப்பது என்று, நல்ல பழக்கத்தை மேம்படுத்திக் கொள்ளலாம்.
வைரஸ் தொற்று பரவுவதை போன்றே, 'எமோஷனல்' என்று சொல்லப்படும், உணர்வுகளும் பரவக் கூடிய தொற்று தான். தொடர்ச்சியாக என்ன மாதிரி உணர்வுகளுடன் இருக்கிறோமோ, நம் அருகில் இருப்பவர்களுக்கும் அந்த உணர்வு தான் பரவும். அதனால், நாம் யாருடன் பேசுகிறோம் என்பது முக்கியம்.'இப்படி ஆயிடும்... இது நடக்கும்... அது நடக்கும்' என்று யூகத்திலே பேசுபவர்களை கவனித்தால், நம் பயம் இன்னும் அதிகமாகும். அவர்களின் பதற்றம் நம்மையும் தொற்ற, வாய்ப்புகள் அதிகம்; இது, வைரசை விட வேகமாக பரவும்.பதற்றம், பயம், கவலை ஆகியவற்றால், ஆக்கபூர்வமாக எதுவுமே நடக்காது. நோய் எதிர்ப்பு சக்தி தான் குறையும்.சமூக இடைவெளியை பின்பற்றுவது, சுத்தம் போன்ற நம் கட்டுப்பாட்டில் இருக்கும் செயல்களை செய்தால், பதற்றத்தை தவிர்க்கலாம்.
டாக்டர் யாமினி கண்ணப்பன்,
மனநல மருத்துவர்,
காவேரி மருத்துவமனை,
சென்னை 044 - 4000 6000
