PUBLISHED ON : ஆக 22, 2010

இப்போது குளிர் காய்ச்சல் வரும் நேரமே அல்ல. குளிர் காலத்தில் தான் இது வரும்; ஆனால், இப்போது பறவைச் காய்ச்சல் நோய் பரவி வருகிறது. இந்த வைரஸ் தொற்று, மெக்சிகோ, அமெரிக்கா, கனடா, நெதர்லாந்து, இஸ்ரேல், பிரிட்டன், டென்மார்க், ஜெர்மன் ஆகிய நாடுகளைத் தாக்கியது; இப்போது இந்தியாவை பதம் பார்க்கிறது.
ஆனால், இதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. நம் நாட்டு மக்கள், உலகம் முழுதும் பயணிக்கின்றனர்; திரும்பும்போது தங்கள் உடைமைகளுடன், கிருமிகளையும் எடுத்து வந்து விடுகின்றனர்.
குளிர்காய்ச்சல் பரவுதல், அடிக்கடி ஏற்படுகிறது. 1918ல் ஸ்பெயின் நாட்டில் இது முதலில் பரவத் துவங்கியது. மிகவும் அபாயகரமாக, உலக அளவில் 50 சதவீத மக்கள் பாதிக்கப்பட்டனர்; ஐந்து கோடி மக்கள் உயிரிழந்தனர். ஆசியாவில், 1957ல் குளிர் காய்ச்சல் பரவியது; 10 லட்சம் பேர் உயிரிழந்தனர். ஹாங்காங்கில் 1968ல் பரவி, ஒரு லட்சம் பேர் உயிரிழந்தனர்.
குளிர் காலத்தில் வரும் இந்த காய்ச்சலால் ஆண்டுதோறும் ஐந்து லட்சம் மக்கள் உயிரிழக்கின்றனர். எச்.ஐ.வி., எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை இதை விடக் குறைவு தான்; ஆனால், அதை ஒழிக்க அதிக நிதி அளிக்கப்படுகிறது; விளம்பரப்படுத்தப்படுகிறது.
தொற்று ஏற்பட்டவருடன் தொடர்பு ஏற்பட்ட ஓரிரு நாளில், இந்தக் காய்ச்சல் ஏற்படுகிறது.
சோர்வு, காய்ச்சல், தலைவலி, மூக்கு ஒழுகுதல், கண்கள் சிவந்து நீர் வடிதல், தசை வலி ஆகியவை இதன் அறிகுறிகள். சாதா சளியை விட, இது மிகவும் கடுமையாக இருக்கும்.
நோய் உள்ளவருக்கு, இருமல், தும்மல் ஏற்பட்டாலோ, எச்சிலைத் துப்பினாலோ, காற்று மூலம் மற்றவர்களுக்கு இந்தத் தொற்று பரவி விடும். ஒவ்வொரு இருமல், தும்மலும், 40 ஆயிரம் நீர்த் துளிகளை வெளியிடுகிறது. ஒரே ஒரு துளி, மூக்கில் நுழைந்தால் போதும், தொற்று ஏற்பட.
சுவர்கள், கதவுகள், பேப்பர், நாணயம் மற்ற பொருட்கள் மீதும் இவை படியலாம்.
நோய் தொற்று உள்ளவர்கள் கை கழுவும் பழக்கம் இன்றி இருந்தால், அதன் மூலமும் தொற்று பரவும். மிக அதிக வெப்பமோ, புறஊதாக் கதிர்களோ செலுத்தினால், 5 முதல் 15 நிமிடங்களில் இந்த கிருமி இறந்து விடும். சளி மூலம் வெளியேறும் இந்த வைரஸ், 48 மணி நேரம் உயிருடன் இருக்கும் திறன் பெற்றது. நெருக்கடியான இடங்களுக்குச் செல்வது, தொற்று உள்ளவர் அருகில் சென்று பழகுதல், காற்றோட்டமின்மை, குறைந்த வெப்பச் சூழலில் இருப்பது ஆகியவை இந்தத் தொற்று பரவக் காரணமாக அமைகின்றன.
குளிர்க்காய்ச்சல் என்பது, மிகவும் மிதமான காய்ச்சல் தான். பொதுவாக தானாகவே சரியாகி விடும்.
மிகவும் சிறு வயது அல்லது மிக முதிய வயது உடையோர், கர்ப்பிணிகள், எச்.ஐ.வி., தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், இதய நோயாளிகள், புகை பிடிப்பவர்கள் ஆகியோருக்கு, இது அபாயகரமான நோயாக மாறி விடுகிறது. நிமோனியா உருவாகி இறக்கும் நிலை ஏற்படுகிறது.
தொற்று பரவும் காலங்களில், அறிகுறிகளை வைத்து நோய் கண்டறியப்படுகிறது. வைரசைக் கண்டுபிடிக்க விரைவுப் பரிசோதனை முறைகள் உள்ளன; இவை, 75 முதல் 90 சதவீதம் வரை துல்லியமாகக் கணிக்கின்றன.
வைரஸ் தொற்று ஏற்படக் காரணமாக உள்ளவை, ரிபோநியூக்ளிக் அமிலம் கொண்ட வைரஸ்கள். இவற்றில் ஏ, பி மற்றும் சி வகை வைரஸ்கள் தான், காய்ச்சலை ஏற்படுத்துகின்றன. மனிதனின் நோய் எதிர்ப்புத் திறனை வைத்து, அவற்றுக்கு எச்1என்1, எச்5என்1 என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த வைரஸ்கள், பறவைகள், பன்றி போன்ற விலங்கினங்களின் உடலில் வாழ்கின்றன. இந்த வைரஸ்கள் திடீரென தன்மையை மாற்றிக் கொண்டு, சீற்றத்துடன் மனிதனைத் தாக்கத் துவங்கி விடுகின்றன. இது போன்ற புதிய வைரஸ்களை மனிதனால் எதிர்கொள்ள முடிவதில்லை. எனவே, வேறு பல நோய்களால் பாதிக்கப்பட்டவர்களிடையே இந்த நோய் வேகமாகப் பரவி விடுகிறது.
குளிர்காலத்தில் தான் இது பரவுகிறது. வட மாநிலங்களிலும், தென் மாநிலங்களிலும், வெவ்வேறு மாதங்களில் குளிர் நிலவுகிறது. எனவே, ஆண்டுக்கு இரண்டு முறை நோய் பரவுதல் ஏற்படுகிறது. சில இடங்களில் மழைக் காலங்களில் நோய் பரவுகிறது. சூரிய ஒளி குறைவான காலங்கள் இவை. ஒரே இடத்தில், கட்டடங்களில் மக்கள் ஒதுங்குவர். அப்போது தொற்று ஏற்படும். மக்களின் பயணம் தற்போது உலக அளவில் இருப்பதால், நோய் பரவுவது எந்த காலத்திலும் ஏற்படுகிறது.
நோய் பரவுவதை கட்டுப்படுத்த...
* நோய்வாய்ப்பட்டவரை பார்த்த பிறகு, கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும்.
* பணத்தைக் கையாண்ட பிறகு, பல முறை கையைக் கழுவ வேண்டும்.
* கதவுத் தாழ்ப்பாள் உட்பட அடிக்கடி நீங்கள் கை வைக்கும் இடங்களை, கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.
* வெளியில் செல்லும்போது முகமூடி அணிந்து செல்லவும்.
* தும்மல், இருமல் ஏற்படும்போது, முகத்தை மூடிக் கொள்ளவும்.
* கண்ட இடங்களில் எச்சில் துப்புவதைத் தவிர்க்கவும்.
குளிர்க் காய்ச்சலுக்கு தடுப்பு மருந்து உண்டு. ஒவ்வொரு ஆண்டும், காய்ச்சலை ஏற்படுத்தும் கிருமியை, உலக சுகாதார நிறுவனம் கண்டறிந்து, மருந்து நிறுவனங்களுக்குச் சொல்கிறது. அந்த நிறுவனங்கள் ஆறு மாதத்திற்குள் நோய் தடுப்பு மருந்தைத் தயாரிக்க வேண்டும். தற்போதைய குளிர் காய்ச்சல் தடுப்பு மருந்து, 75 சதவீத அளவு பாதுகாப்பு தருகிறது. இந்த மருந்து போடப்பட்டவர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டாலும், தீவிரமாக ஏற்படுவதில்லை; அதிக உபாதைகளையும் ஏற்படுத்துவதில்லை.
ஊசி மூலம் செலுத்தப்படும் இந்த தடுப்பு மருந்து, இந்தியாவில் கிடைக்கிறது. சிறு வயதினர், முதியோர், நீரிழிவு நோயாளிகள் மற்றும் இதய நோயாளிகளுக்கு இந்த மருந்து போடுவது நல்லது. மற்ற நாடுகளில், மூக்கு வழியாகச் செலுத்தப்படும் வடிவில் இந்த மருந்து கிடைக்கிறது.
உங்களுக்கு குளிர்க் காய்ச்சல் ஏற்பட்டால், வீட்டிலேயே இருங்கள்; நன்கு ஓய்வு எடுங்கள். சீக்கிரம் குணமடைவீர்கள்; மற்றவர்களுக்கும் நோய் பரவாது. வலி, காய்ச்சலுக்கு பாரசிட்டமால் மருந்து உட்கொள்ளுங்கள்.
பொதுவாக ஆஸ்பிரின், சாலிசைக்ளிக் அமிலம் நிறைந்த மருந்துகள் உட்கொள்ள வேண்டாம். குளிர்க்காய்ச்சல் இருக்கும்போது, இந்த மருந்துகள் உட்கொள்வது ஆபத்தை விளைவிக்கலாம். மருத்துவர்களின் பரிந்துரைப்படியே, 'டாமிப்ளூ' போன்ற மாத்திரைகளைச் சாப்பிடலாம். காய்ச்சலின் தீவிரத்தையும், பாதிப்பு ஏற்படுத்தும் நேரத்தையும் குறைக்கலாம்.

