PUBLISHED ON : ஆக 22, 2010

* நிஷா பானு, மந்தாரகுப்பம், நெய்வேலி: என் வயது 19; உயரம்: 173 செ.மீ.,; எடை: 42 கி.கி., உயரத்திற்கு ஏற்ற எடை இல்லாததால், எடை அதிகரிக்க என்னென்ன உணவுகளை சாப்பிட வேண்டும்? ஓமியோபதி மருத்துவத்தில் ஏதேனும் மருந்துகள் இருந்தால் கூறவும்?
உங்கள் உடல் எடைக் குறியீட்டு அளவு (பாடி மாஸ் இண்டெக்ஸ்) 14 தான் உள்ளது. அது 23 ஆக இருக்க வேண்டும். எடை குறைவுக்கு, உடலில் மருத்துவ ரீதியான பிரச்னைகள் ஏதும் உள்ளதா என முதலில் பரிசோதனை செய்து கொள்ளுங்கள். தைராய்டு, நீரிழிவு போன்ற பிரச்னைகள் இருக்கிறதா என்பது குறித்து, மருத்துவர் பரிந்துரை பெற்று, பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
பரிசோதனையில், உங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை எனத் தெரிந்தால், நீங்கள் உண்ணும் உணவில் 25 சதவீதம் கூடுதலாக்கிக் கொள்ளுங்கள். மூன்று இட்லிக்கு பதிலாக, நான்கு இட்லி சாப்பிடுங்கள். உணவில் நெய் சேர்த்துக் கொள்ளுங்கள். நாள் ஒன்றுக்கு, ஆறு வேளை உணவு சாப்பிடுங்கள்.
நிறைய பேருக்கு உடல் எடை கூடும் பிரச்னை இருப்பதால், உங்களைப் போல ஒல்லியாக ஆசைப்படுகின்றனர். ஓமியோபதியில் இதற்கு மருந்து இருக்கிறதா என்பது குறித்து எனக்குத் தெரியவில்லை. ஓமியோபதி வல்லுனரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.
* ச.கண்ணன், வத்தலக்குண்டு: ஏழு வயதான என் குழந்தை மிகவும் ஒல்லியாக உள்ளதால், உடல்நிலை கூடுவதற்கான வழிவகைகளைக் கூறுங்கள்?
ஒல்லியோ, குண்டோ, நம் பார்வைக்கு மட்டும் தான் அந்த அளவு. குழந்தையின் பி.எம்.ஐ., (பாடி மாஸ் இண்டெக்ஸ்) கணக்கைப் பாருங்கள். 23 என்ற அளவில் அது இருக்க வேண்டும். பிறக்கும்போது எந்த எடையுடன் பிறக்கிறார்களோ, அதைப் பொறுத்து, குழந்தைகள் வளரும்போதும், எடை மாறுபடும். போதுமான வளர்ச்சி இன்றிப் பிறந்தால், பிறந்த பிறகான வளர்ச்சியும் தாமதமாகவே இருக்கும்.
வேறு மருத்துவ காரணங்கள் இருந்தாலும் எடை கூடுவதில் பிரச்னை ஏற்படும். இதய நோய், சிறுநீர்பாதையில் தொற்று, காச நோய் ஆகியவை இருந்தால் இது போன்று பிரச்னை ஏற்படலாம். மருத்துவரிடம் சென்று கவனமாகப் பரிசோதியுங்கள்.
மருத்துவ பிரச்னை ஏதும் இல்லை என்றால், அவள் போதுமான அளவு உணவு உண்ணவில்லை என அர்த்தம். உடனடியாக எடை கூட, அற்புத மருந்து ஏதும் இல்லை. சுறுசுறுப்பாக இயங்குபவர்கள், நன்கு பசித்து உண்பர். உங்கள் மகளை வீட்டு வெளியே தினமும் ஒரு மணி நேரம் விளையாட அனுமதியுங்ள். பால் உடலுக்கு நல்லது தான்; அளவுக்கு அதிகமானால், நல்லதல்ல. நாள் ஒன்றுக்கு 400 மிலி., பால் போதும். பாலுடன் சத்து பான பவுடர் ஏதும் கலக்காதீர்கள்.
* கே.சாமி, கோவை: 58 வயதான எனக்கு, மலம் கழிக்க நீண்ட நேரமும், செமி சாலிட்டாகவும் வருகிறது. டாக்டரிடம் சோதனை செய்ததில், 'எந்த பிரச்னையும் இல்லை' என கூறிவிட்டனர். இரவில் மட்டும் பசி ஏற்படுகிறது. டாக்டரிடம் கேட்டதற்கு, 'குடல் ஆக்டிவ் குறைவாக உள்ளது' என கூறினர்; மருந்து எதுவும் தரவில்லை. குடல் நீளத்தை அறுவை சிகிச்சை செய்து குறைக்கலாமா? உணவு மலமாக மாறி வெளியேற, எவ்வளவு மணிநேரம் ஆகும்? காலை 6.00 மணிக்குள், இரவு உணவு ஜீரணமாக, எந்தவித உணவை உட்கொள்ள வேண்டும்?
சாப்பிடும் உணவு ஜீரணமாக, மலமாக வெளியேறும் முறை, ஒருவருக்கு ஒருவர் வேறுபடும். பொதுவாக 8 மணி நேரம் மதல் 14 மணி நேரம் வரை ஆகலாம். மலம் இளகியதாக இருந்தால், அது வெளியேறுவதில் பிரச்னை இருக்காது. இறுகி இருந்தால் தான் பிரச்னை.
உங்கள் பெருங்குடலின் நீளத்தைக் குறைத்துக் கொள்வது நல்லதல்ல. அப்படிச் செய்தால், உடலுக்குத் தேவையான ஊட்டச் சத்துக்கள் உறிஞ்சப்படாமலேயே போய்விடும். மேலும், அது மிகவும் விலையுயர்ந்த அறுவை சிகிச்சை.
காலை ஆறு மணிக்குள் இயற்கை உபாதைகளை முடிக்க எண்ணினால், முதல்நாள் மாலை 7.00 மணிக்குள் உங்கள் இரவு உணவை முடித்துக் கொள்ள வேண்டும். படுக்கச் செல்லும் முன், ஒரு வாழைப்பழம் சாப்பிட வேண்டும். நாள் முழுதும் மூன்று முதல் நான்கு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

