'ஜிம்' திறக்கும் வரை ஜம்முனு இருக்கலாம்! - என்ன உணவு சாப்பிடலாம்; என்ன பயிற்சி செய்யலாம்
'ஜிம்' திறக்கும் வரை ஜம்முனு இருக்கலாம்! - என்ன உணவு சாப்பிடலாம்; என்ன பயிற்சி செய்யலாம்
PUBLISHED ON : ஜூன் 11, 2020

உடற்பயிற்சி கூடங்கள் திறக்கப்படாததால், வலுதுாக்கும் வீரர்கள், ஆணழகன் பயிற்சி பெறுபவர்கள், உடல் எடை 'தாறுமாறாக' உயர்ந்துள்ளதாக வருத்தப்படுகின்றனர்.ஊரடங்கு அமலில் உள்ளதால் விளையாட்டு பயிற்சி முகாம்கள், உடற்பயிற்சி கூடங்கள், நீச்சல் குளம் உள்ளிட்ட அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
ஆணழகன் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள், பளு, வலு துாக்கும் வீரர்கள், விளையாட்டு வீரர்கள் உடல் எடையை கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கின்றனர். குறிப்பாக, வலுதுாக்கும் வீரர்கள் மற்றும் உடற்கட்டு வீரர்கள், 'ஜிம்'களில் பயிற்சி மேற்கொண்டால் மட்டுமே, உடலை கட்டுக்கோப்பாக வைக்க முடியும். உடற்பயிற்சி கூடங்களை திறக்க, அரசு அனுமதி கிடைக்கும் வரை, இவர்கள் என்ன செய்ய வேண்டும்?
பிட்னஸ் பயிற்சியாளர் பாரதி கூறுகையில், ''உடல் எடையை கட்டுப்பாட்டில் வைப்பதில், உணவுக்குதான் முக்கிய இடமுள்ளது. சர்க்கரை அளவு குறைவாக இருக்கும் உணவை, அதிகம் உட்கொள்ள வேண்டும். 'ஜிம்' செல்ல முடியாத வீரர்கள், வீட்டிலிருந்தே உடல் எடையை குறைக்க ஏராளமான உடற்பயிற்சிகள் உள்ளன. 'ஸ்கிப்பிங் ஜம்ப்ஸ்', 'ஹைநீஸ்', 'மவுன்டன் கிளைம்பர்ஸ்' 'ஸ்டெப்ஸ்' போன்ற பயிற்சிகள், இதயத்தை வலுப்படுத்தும்.
'பிளாங்க்', 'பிரிட்ஜ்', சூப்பர்மேன் போன்ற பயிற்சிகள், கீழ் முதுகு தண்டை வலுப்படுத்தும். 'புஷ் அப்', 'ஸ்குவாட்', 'புல்அப்ஸ்' போன்ற பயிற்சிகள், உடலில் உள்ள தசைகளை வலுப்படுத்தும். இப்பயிற்சிகளை வீட்டிலிருந்தே மேற்கொண்டால், உடலை, 'பிட்' ஆக வைக்கலாம்,'' என்றார்.
உடற்பயிற்சி மேற்கொள்ளும் வீரர்கள், கலோரி அதிகம் உள்ள, உணவு பொருட்கள் சாப்பிடுவதை தவிர்த்து விட்டு, நார்ச்சத்து அதிகம் உள்ள காய்கறி, பழங்கள், கீரை, ராகி, சோளம் போன்றவற்றை உட்கொள்ள வேண்டும். உடல் எடையையும் கட்டுப்பாட்டில் வைக்கலாம்.
'ஜிம்' திறக்க உதவணும்
அமைச்சர் வேலுமணியிடம், மாவட்ட உடற்பயிற்சி சங்கத்தினர், அளித்துள்ள மனுவில், 'நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், நல்ல ஆரோக்கியத்துக்கும், உடற்பயிற்சி உதவுகிறது. உடற்பயிற்சி மையம் தொடர்ந்து மூடப்பட்டுள்ளதால், அதை நடத்துவோர் வாழ்வாதாரமின்றி தவிக்கின்றனர். கட்டட வாடகை மற்றும் பயிற்சியாளர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. உடற்பயிற்சி நிலையத்தை, நோய் கட்டுப்பாடற்ற மண்டலங்களில், திறக்க அனுமதிக்க வேண்டும்' என கூறியுள்ளனர்.
- ஜூலியட் ஷீபா, ஊட்டச்சத்து நிபுணர்
