PUBLISHED ON : ஏப் 16, 2023

மூட்டு வலி எந்த நிலையில் இருக்கிறது என்பதை ஆராய்ந்த பின், மூட்டு மாற்று சிகிச்சை செய்ய வேண்டுமா, இல்லையா என்று முடிவு செய்ய வேண்டும்.
'ஜானு வஸ்தி' என்ற சிகிச்சை, ஆயுர்வேத பஞ்சகர்மா சிகிச்சையில் மிகவும் பிரபலமானது. 'ஜானு' என்றால் முட்டி. 'வஸ்தி' எனப்படும் முறையில் முட்டியைச் சுற்றி பாத்தி போல உளுந்து மாவால் கட்டி, மருத்துவக் குணமுள்ள எண்ணெய்களை 30 - 45 நிமிடங்கள் தேக்கி வைக்கும் சிகிச்சை முறை இது.
முரிவெண்ணெய், வலி நாராயண தைலம், மகாபாஷ தைலம், விஷகர்ப்ப தைலம் போன்ற எண்ணெய்கள், நோயாளியின் வயது, தோஷம், காலம், பலம் போன்றவற்றை அனுசரித்து, ஜானு வஸ்திக்கு பயன்படுத்தப்படும். 14 - 21 நாட்கள் இந்த சிகிச்சை செய்வதோடு, மகாராஸ்னாத கஷாயம், அம்ருதோத்ர கஷாயம், குத்குலு திக்தக கஷாயம் போன்ற குடிநீர்களும், சந்தர்ப்ரபாலம், மகா யோகராஜ குக்குலு போன்ற மாத்திரைகளும, ஷீரபலா, தன்வந்தர தைலம் போன்ற எண்ணெய்களும் தேவைக்கேற்ப கொடுக்கப்படும்.
மனித உடலுக்கு தன்னைத் தானே சரி செய்து கொள்ளும் சக்தி 100 சதவீதம் உள்ளது. இவற்றைத் துாண்டும் சிகிச்சை தான், ஜானு வஸ்து போன்ற பஞ்சகர்ம சிகிச்சை. முட்டி தேய்மானம், ஜவ்வு குறைதல் போன்ற உபாதைகள் 60 - 70 சதவீதம் இருந்தாலும், இந்த பாரம்பரிய சிகிச்சையை ஒரு முறை செய்து பார்க்கலாம்.
70 வயதிற்கு மேல், சராசரி உடல் எடையை விடவும், 20 - 30 கிலோ அதிக உடல் பருமனுடன் இருந்தால், இயற்கை மருத்துவ முறைகளான சித்தா, ஆயுர்வேத மருந்துகள், உணவு பழக்கங்கள், பஞ்சகர்மா சிகிச்சை எல்லாம் செய்து, அவை நல்ல பலன் கொடுக்காவிட்டால், மூட்டு மாற்று சிகிச்சை அவசியம் செய்து கொள்ளலாம்.
டாக்டர் மீரா சுதீர்,
ஆயுர்வேத மருத்துவர்,சென்னை. 99623 50351
